Published : 20 Dec 2014 09:02 PM
Last Updated : 20 Dec 2014 09:02 PM
பிரிஸ்பன் டெஸ்ட் 4ஆம் நாள் ஆட்டத்தில் இன்று ஷிகர் தவன் காயம் காரணமாக தொடக்கத்தில் களமிறங்க முடியாமல் போனது. அதனை தோனி குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு, தோல்விக்கு அதனை ஒரு காரணமாக்கக் கூடாது என்று சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
"ஷிகர் தவன் காயத்தை தோல்விக்கு ஒரு சாக்குபோக்காகக் கூறக்கூடாது, கடந்த 2 இன்னிங்ஸ்களில் சதம் எடுத்த (விராட் கோலி) ஒரு வீரர் 7 நிமிடங்களில் போட்டிக்குத் தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
அவர் மேலும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சரிசமமாக இந்திய வீரர்கள் வாய்ப்பேச்சில் ஈடுபடக்கூடாது என்று கூறியுள்ளார்.
“ஆஸ்திரேலிய வீரர்களுடன் இந்திய வீரர்கள் பதிலுக்கு பதில் வாய்ப்பேச்சில் ஈடுபடக்கூடாது என்றே நான் கருதுகிறேன். இந்தியாவில் கிளப் மட்ட கிரிக்கெட்டில் கூட ஸ்லெட்ஜிங் போன்றவை இல்லை. நமக்கு அது பழக்கம் கிடையாது. ஆனால் ஆஸ்திரேலியர்கள் கிரிக்கெட் ஆட்டத்தை அப்படி ஆடியே பழக்கப்பட்டவர்கள். எனவே அவர்களிடத்தில் இது செல்லுபடியாகாது.
ஆனால் இந்தியர்களான நமக்கு ஒவ்வொரு வார்த்தையும் மனதில் ஆழமாக பதிந்து விடும். நாம் அதை வெளியே துரத்த நினைத்தாலும் அது நம் மனதில் தங்கும். அப்படி மனதில் தங்கிவிடும் போது அது ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்தாது. ஆஸ்திரேலிய வசைக்கு பதிலடி கொடுப்பது என்பது புத்திசாலித் தனமான நடைமுறை அல்ல. நாம் ஆக்ரோஷம் பற்றி பேசுகிறோம், ஆனால் அது ஆக்ரோஷமான நோக்கத்தை தெரிவிப்பதாக இருக்க வேண்டும்.
இந்தத் தொடரில் ஆஸ்திரேலியர்கள் வசை, கேலி போன்றவற்றில் அவ்வளவாக ஈடுபடவில்லை. பிலிப் ஹியூஸ் அகால மரணத்திற்குப் பிறகே அவர்கள் இந்த விவகாரத்தில் புதிய பக்கத்தை புரட்டத் தொடங்கியுள்ளனர். இதற்காக அந்த அணியை நான் பாராட்டுகிறேன். கிரிக்கெட் போட்டியில் அவர்கள் இப்போது ஆடுவது போல்தான் ஆடவேண்டும்.
இந்திய பவுலர்கள் செயல்பாடு எனக்கு திருப்தி அளிக்கவில்லை. பிரிஸ்பன் பிட்சை இவர்கள் சரியாக பயன்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. ஆஸ்திரேலிய பிட்ச்கள் 3ஆம் நாள் மற்றும் 4ஆம் நாளில் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆனால் பிடியை நழுவ விட்டு ஒரு அணியை 500 ரன்கள் அடிக்கவிட்டால் அது எப்படி நல்ல பவுலிங் ஆகும்?
ஆனாலும், இந்த முறை 4-0 ஒயிட்வாஷ் இருக்காது என்றே நான் கருதுகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT