Published : 20 Dec 2014 11:58 AM
Last Updated : 20 Dec 2014 11:58 AM

பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸி. வெற்றி: 2-0 முன்னிலை பெற்றது

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பிரிஸ்பேனில் நடைபெற்றுவந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி. முன்னிலை பெற்றுள்ளது. போட்டியின் 4-ஆம் நாளான இன்றே ஆஸி. வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

71 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை இன்று காலை தொடர்ந்தது. குறைந்தது 350 ரன்கள் அடித்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு என்ற நிலையில், இந்திய பேட்ஸ்மென்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். காயம் காரணமாக நேற்று களத்தில் ஆடிய தவானுக்கு பதிலாக கோலி களமிறங்கினார். ஆனால் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தொடர்ந்து ஆடிய ரஹானே(10), ரோஹித் சர்மா (0), தோனி (0) என அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியா முன்னிலை பெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.

கடைசியில் களமிறங்கிய தவான் (81) மற்றும் உமேஷ் யாதவின் (30) உதவியுடன் இந்தியா 127 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸி. வீரர் மிட்சல் ஜான்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

128 ரன்கள் என்ற எளிமையான இலக்கோடு களமிறங்கிய ஆஸி. தனது துவக்க வீரர் வார்னர், தொடர்ந்து வந்த வாட்சன் இருவரையும் அடுத்தடுத்து இழந்தது. ரன்கள் வேகமாக சேர்க்கப்பட்டாலும், ஆஸி. வீரர்களின் அவசர கதி ஆட்டத்தால், மேலும் விக்கெட்டுகள சரிந்தன. ஒரு கட்டத்தில் இந்தியா வெற்றியும் பெறலாம் என ரசிகர்கள் நம்பிக்கை பெறும் வகையில் ஆட்டம் இருந்தது.

முடிவில் ஆஸிதிரேலியா, போட்டி முடிய 1 நாளும், இன்றைய நாள் முடிய 22.5 ஓவர்களும் மீதமிருந்த நிலையில் 6 விக்கெட்டுகளுக்கு 130 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x