Published : 06 Dec 2014 12:18 PM
Last Updated : 06 Dec 2014 12:18 PM
சீதையின் சுயம்வரத்தில் ஜனகரின் வில்லை ராமன் முறித்தது பற்றிக் கம்பர் இப்படி எழுதியிருப்பார்: ‘எடுத்தது கண்டார், இற்றது கேட்டார்’ ராமன் வில்லை எடுத்ததைக் கண்டவர்கள் அது முறிந்த ஓசையைத்தான் கேட்டார்களாம். இடையில் என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை.
அந்த அளவுக்கு வேகம். 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசப்படுவதைப் பார்ப்பவர்கள் அது எப்படி மட்டையில் பட்டது, மட்டையாளர் அதை எந்தத் திசையில் ஆடினார், அதை யார் துரத்தினார் என்பதையெல்லாம் பார்க்க அவகாசமே கொடுக்காமல் பந்து எல்லைக் கோட்டைத் தாண்டித் தஞ்சமடையும். அத்தகைய மின்னல் வேகத்துக்கும் மாயா ஜாலம் போன்ற காலக் கணக்குக்கும் பேர்போன வீரேந்திர சேவாக்கை வரும் உலகக் கோப்பைப் போட்டியில் பார்க்க முடியாது.
இந்தியாவின் சுமைகளெல்லாம் தன் தோள்களில் இருப்பதுபோன்ற முகபாவத்துடன் களம் இறங்கும் கவுதம் காம்பீரின் சிரத்தை, ஜாகீர் கானின் வியப்பூட்டும் ஸ்விங் பந்து வீச்சு, மட்டையாளரை அலட்சியமாகப் பர்க்கும் அவரது ஸ்டைல், ஒவ்வொரு பந்தையும் ஜீவமரணப் போராட்டம்போலக் கையாளும் ஹர்பஜன் சிங்கின் போர்க்குணம், பாதி தூரம்வரை வந்து தடுமாறி நிற்கும் அணி யைப் பதற்றமின்றிப் பத்திரமாகக் கரை சேர்க்கும் திறமையும் எதிரணி யினரை மதிக்காத ஆவேசமும் கொண்ட யுவராஜ் சிங்கின் மட்டையடி ஆகியவற்றையும் பார்க்க முடியாது.
இந்த ஐவருக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் இடம் இல்லை என்பது பலருக்கும் சோகமான செய்தியாக இருந்திருக்கும் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு அவர்கள் அனைவருமே இதை உள்ளூர எதிர்பார்த்திருப்பார்கள் என்பதும் நிதர்சனம். கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களது ஆட்டத்தில் அவர்களுக்கே உரிய வலிமை இல்லை.
கடந்த உலகக் கோப்பை வரை இந்திய அணியின் மிக முக்கியமான ஆட்டக்காரர்களாகத் திகழ்ந்த இந்த ஐவரின் திறமைகளும் மெல்ல மெல்லத் தேய்ந்து மங்கிவிட்டதை அண்மையில் அவர்கள் ஆடிய எல்லா ஆட்டங்களும் காட்டின. இவர்களுடைய இடங்களை நிரப்பியவர்கள், தேர்வுக் குழுவினர் பின்னோக்கிப் பார்க்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தவில்லை. தொடர்ந்து வெற்றிகள் கிடைத்துக் கொண்டிருப்பது மட்டுமின்றி, அந்த வெற்றிகள் சகஜமாகி வருவது முக்கியமானது.
இளைஞர்களின் எழுச்சி
ஷிகர் தவன், விராட் கோலி, ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா போன்றவர்கள் உலகக் கோப்பையில் எப்படி ஆடுவார்கள் என்பதை இப்போதே சொல்ல முடியாது. ஆனால் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியை வென்றதிலிருந்தே இவர்கள் சிறப்பாக ஆடிவருகிறார்கள்.
இந்நிலையில் இவர்களில் சிலரை நீக்கிவிட்டுப் பழம்பெருமை சார்ந்த நினைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. சேவாக், யுவராஜ் போன்றவர்களைப் பார்க்க முடியாது என்பது எவ்வளவுதான் வலி ஏற்படுத்தும் எண்ணமாக இருந்தாலும் யதார்த்தத்துக்கு முகம் கொடுத்து யோசித்தால் இதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
புதிய உதயம்
மகேந்திர சிங் தோனி, விராட் கோலி, இஷாந்த் சர்மா போன்றவர்கள் இருந்தாலும் இது ஒருவகையில் புதிய அணி என்றுதான் சொல்ல வேண்டும். பல களம் கண்ட ஜாம்பவான்கள் யாரும் அற்ற அணியான இது அடுத்த பத்தாண்டுகளில் இந்திய அணி செல்லவிருக்கும் திசைகாட்டி யாகவும் உள்ளது. அந்த வகையில் இதை இந்திய அணியின் புதிய உதயம் என்று சொல்லலாம்.
ஆஸ்திரேலியா போன்ற சில அணிகளில் ஏற்பட்டுவரும் மாற்றம் இந்திய அணியிலும் ஏற்பட்டிருக் கிறது. வெற்றியும் தோல்வியும் முழுக்க முழுக்க இளம் ஆட்டக்காரர் களைப் பொறுத்தே இருக்கிறது. உலகக் கோப்பைக்கான நெருக்கடி என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் நடப்பு சாம்பியனாக இந்தியா களமிறங்கும் நிலையில் கடினமான நெருக்கடியை ஏற்படுத் தும். இந்த நெருக்கடியை இந்த இளம் அணி எப்படி எதிர்கொள் ளப்போகிறது என்பதுதான் முக்கியமான சோதனையாக இருக்கும்.
ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை ஆட்டங்களுக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் ஆடவிருப்பது சாதகமானது. சேவாக், யுவராஜ் போன்ற மனம் கவர்ந்த நாயகர்கள் இல்லாத அணியைப் பார்க்கச் சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அது காலத்தின் கட்டாயம் என்பதைப் புரிந்துகொண்டு இளம் அணிக்கு வாழ்த்துச் சொல்வதே யதார்த்தமான அணுகுமுறையாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT