Published : 01 Dec 2014 09:48 AM
Last Updated : 01 Dec 2014 09:48 AM

நியூஸிலாந்து இன்னிங்ஸ் வெற்றி: சமனில் முடிந்தது டெஸ்ட் தொடர்

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து.

சார்ஜாவில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 351 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 130 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 637 ரன்கள் குவித்திருந்தது.

4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அந்த அணியில் கிரேக் 65 ரன்களிலும், சோதி 22 ரன்களிலும் வெளியேற, 143.1 ஓவர்களில் 690 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் 339 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் ஆசாத் ஷபிக் 137 ரன்கள் குவித்தபோதும் எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 63.3 ஓவர்களில் 259 ரன்களுக்கு சுருண்டது.

நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், கிரேக் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய கிரேக் ஆட்டநாயகனாகவும், பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமனில் முடித்தது நியூஸிலாந்து.

போட்டித் துளிகள்

# இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 35 சிக்ஸர்களை விளாசின. இதன்மூலம் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட டெஸ்ட் போட்டி என்ற பெருமை இந்தப் போட்டிக்கு கிடைத்தது. முன்னதாக 2006-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டியில் 27 சிக்ஸர்கள் விளாசப்பட்டதே சாதனையாக இருந்தது.

# 690 ரன்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது நியூஸிலாந்து. பாகிஸ்தானுக்கு எதிராக ஓர் அணி எடுத்த 2-வது அதிகபட்ச ஸ்கோரும் இதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x