Last Updated : 16 Dec, 2014 01:03 PM

 

Published : 16 Dec 2014 01:03 PM
Last Updated : 16 Dec 2014 01:03 PM

கிளார்க் திரும்பும் வரை புதிய ஏற்பாடு: ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் விலகிய நிலையில் புதிய கேப்டனாக 25 வயது ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். கிளார்க் மீண்டும் அணிக்குத் திரும்பும்வரை ஸ்மித் கேப்டனாக நீடிப்பார் என்று தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

இந்தியா ஆஸி. இடையிலான முதல் டெஸ்டின்போது மைக்கேல் கிளார்க்கின் வலது தொடைப் பகுதி யில் தசைநார் முறிவு ஏற்பட்டது. தனது காயம் குறித்துப் பேசிய கிளார்க், “நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட முடியாமல் போகலாம்” என்றார். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து கிளார்க் விலகியதால் ஷான் மார்ஷ் அனியில் சேர்க்கப்பட்டார்.

அடிலெய்டு டெஸ்டின் இறுதி நாளன்று கிளார்க் களத்தில் இல்லாதபோது, துணை கேப்டனான பிராட் ஹேடின் கேப்டனாக செயல்பட்டார். இதனால் எஞ்சிய போட்டிகளுக்கு ஹேடின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியத் தேர்வுக்குழு, இளம் வீரரான ஸ்மித்தை கேப்டனாக்கியுள்ளது. ஸ்மித், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 45-வது டெஸ்ட் கேப்டன் ஆவார்.

ராட் மார்ஷ் பாராட்டு

இதுபற்றி தேர்வுக்குழு உறுப்பினர் ராட் மார்ஷ் கூறும்போது, “கிளார்க் அணிக்குத் திரும்பும் வரை ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார். அவருடைய பேட்டிங் மீது மட்டுமின்றி தலைமைப் பண்பின் மீதும் ஆஸ்திரேலியத் தேர்வுக்குழு அதிக மரியாதை வைத்துள்ளது. கிளார்க் எப்போது திரும்புவார் என்று உறுதியாக சொல்லமுடியாத சூழலால் நீண்டகால நோக்கில் முடிவெடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது’’ என்றார்.

இயான் கிரேக் (22 வயது), கிம் ஹியூஸ் (25 வயது) ஆகியோ ருக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் இளம் கேப்டன் என்ற பெருமையைப் பெறுகிறார் ஸ்மித். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் மிட்செல் மார்ஷ், ஜோஸ் ஹேஸில்வுட் ஆகியோர் மட்டும் தான் ஸ்மித்தைவிட இளையவர்கள். 2010-ல் ஆஸ்திரேலியாவின் லெக்ஸ்பின் பவுலராக டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஸ்மித், ஆரம்ப காலங்களில் 8-ம் நிலை பேட்ஸ்மேனாக ஆடிவந்தார்.

பிறகு படிப்படியாக வளர்ந்து ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கைக்குரிய டெஸ்ட் பேட்ஸ்மேன் என்கிற பெயரை எடுத்துள்ளார். ஹேடின் அடுத்த ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஓய்வுபெறும் மனநிலையில் இருப்பதால் தேர்வுக்குழு ஸ்டீவன் ஸ்மித்தை கேப்டனாகத் தேர்ந்தெடுத்துள்ளது.

திட்டங்களை மாற்றத் தேவையில்லை - ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் இளம் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், தனக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வு குறித்து கூறும்போது:

கிளார்க் காயமடைந்திருப்பதால் நான் தற்காலிகமாகத்தான் கேப்டனாகியுள்ளேன். என்னை விட அதிக வயதுடையவர்களுக்கு கேப்டனாக இருப்பது புதிதல்ல. உள்ளூர் போட்டிகளில் தலைமை தாங்கிய அனுபவம் உண்டு. சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் பிரட் லீ, ஸ்டூவர்ட் மேகில் ஆகியோர் இருந்தனர். பிரிஸ்பேனில் ஆஸி.யின் மூத்த வீரர்கள் நிச்சயம் எனக்கு ஆதரவளிப்பார்கள். அதிலும் பிராட் ஹேடின் எனக்குப் பின்னால் பக்கபலமாக இருப்பார்.

ஒரு சாதாரண வீரராக இருக்கும்போதே எப்போதும் போட்டியின் சூழலை வைத்து ஒரு கேப்டன் போலவே யோசிப்பேன். சிலசமயம் கிளார்க் மற்றும் ஹேடினிடம் என் கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன். கடந்த 18 மாதங்களாக செயல்படுத்தி வரும் அதே திட்டங்களை பிரிஸ்பேனிலும் தொடர்வோம். எதையும் மாற்றத் தேவையில்லை என்று அணி வீரர்களிடம் இன்று காலையில் சொன்னேன்.

ஆடுகளத்துக்குள் நுழைந்து விட்டால் எதிரணியுடன் நட்புடன் இருக்கமாட்டோம். எங்களுடைய ஆக்ரோ ஷமான அணுகுமுறை தொடரும். உள்ளூர் போட்டிகளில் தலைமை தாங்கிய அனுபவம் இருந்தா லும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக சவாலை எதிர்நோக்கியுள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x