Published : 01 Dec 2014 09:45 AM
Last Updated : 01 Dec 2014 09:45 AM

உன்னை மறக்கமாட்டேன் ஹியூஸ்: மைக்கேல் கிளார்க் உருக்கம்

அன்பு சகோதரன் பிலிப் ஹியூஸ், உன்னை எப்போதும் நான் மறக்க மாட்டேன் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக் கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மரணமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸுக்கு நேற்று 26-வது பிறந்த நாள். அதை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ’தி டெய்லி டெலிகிராப்’ பத்திரிகையில் பாராட்டுரை எழுதியுள்ளார் கிளார்க். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பிலிப் ஹியூஸ் மரணமடைந்த துயரத்தைத் தாங்க முடியாமல் கடந்த வியாழக்கிழமை இரவு சிட்னி மைதானத்தில் நின்று கொண்டிருந்தேன். அந்த மைதானத்தில் தான் எனது சகோதரர் ஹியூஸ் தனது கடைசி ஷாட்டை ஆடினார். தலை சிறந்த மனிதரான அவர் எப்படி மரணமடைந்தார் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் அந்தத் தருணத்தில் மிகுந்த வேதனைப்பட்டு கொண்டிருந்தேன்.

அவருடைய மனித நேயத்துக்கு முன்னால் கிரிக்கெட் சாதனைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. கடந்த சில நாட்களாக ஹியூஸின் பெற்றோர் கிரேக்-விர்ஜினியா, சகோதரி மேகன், சகோதரர் ஜேஸன் ஆகியோரிடம் பேசியதிலிருந்து ஹியூஸ் ஒரு நல்ல மனிதராக வாழ்ந்துள்ளார் என்பதை புரிந்துகொண்டேன். தன் குடும்பம் மற்றும் தன்னை பெற்றோர் வளர்த்த விதம் பற்றி ஹியூஸூக்கு எப்போதும் பெருமிதம் உண்டு.

ஹியூஸ் மேக்ஸ்வில்லே விலிருந்து சிட்னிக்கு இடம் மாறி, நான் ஆடிவந்த வெஸ்டர்ன் சபர்ப்ஸ் கிளப்பில் இணைந்தபோதுதான் முதல்முதலாக அவரைப் பார்த்தேன். அப்போது அவருக்கு வயது 17. ஆரம்பத்திலேயே அவருடைய குணங்கள் என்னைக் கவர்ந்தன. எனது 12 வருட கிரிக்கெட் வாழ்வில், அவரைப் போன்ற நல்ல இதயமும் விசுவாசமும் உள்ள ஒருவரை நான் சந்திக்கவில்லை.

ஆஸ்திரேலிய அணியிலிருந்து நீக்கப்பட்டபோதும் ரன்கள் அடிக்காதபோதும் ஹியூஸ் ஒரு போதும் குறை சொன்னதில்லை. அவரிடம் டெக்ஸ்ட்புக் தொழில் நுட்பம் இல்லாமல் போகலாம். ஆனால், மகிழ்ச்சிக்காக ரன்கள் எடுத்தார். 25 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் 26 சதங்கள் எடுத்தவர். நிச்சயம் சென்ற செவ்வாய்கிழமை (பவுன்சரால் காயம்பட்ட தினம்) 27-வது சதத்தை எடுத்திருப்பார். சிலமாதங்களுக்கு முன்பு நான் சொன்னேன். ஹியூஸ் நிச்சயம் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவார் என்று.

கடந்தமுறை ஆஸ்திரேலிய அணியிலிருந்து நீக்கப்பட்டபோது தன் பேட்டிங் தொழில்நுட்பத்தைக் கொஞ்சம் மாற்றினார். அவர் ஆடிவந்த தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக அடுத்தடுத்து சதமடித்தார். சுற்றுப் பயணங்களின்போது என் அறையில் உள்ள அதி மதுரத்தை எடுக்க வருவார். எப்போதும் நான் அவரிடம் சொல்வது, என்னுடைய பொருள் உன்னுடையதும்தான். அவருடைய வாழ்க்கை, முக்கியமான காலக்கட்டத்தில் முடிக்கப்பட்டது உண்மையிலேயே நியாயமில்லை. எனக்கு ரத்த சம்பந்த சகோதரர் இல்லை. ஆனால் பிலிப் ஹியூஸை என் சகோதரனாக எண்னி அழைத்ததைப் பெருமையாக உணர்கிறேன். உன்னை மறக்கமாட்டேன் ஹியூஸ். பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரனே என கிளார்க் குறிப்பிட்டுள்ளார்.

முதல் டெஸ்ட் அடிலெய்டுக்கு மாற்றம்?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸின் மரணத்தைத் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்ட இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்திலிருந்து அடிலெய்டுக்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பிரிஸ்பேனிலும், 2-வது போட்டி வரும் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அடிலெய்டிலும் நடைபெறுவதாக இருந்தன.

இந்த நிலையில் பிலிப் ஹியூஸ் திடீரென மரணமடைந்ததைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இப்போது மைதானமும் மாற்றப்படலாம் என தெரிகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியை அடிலெய்டுக்கு மாற்றிவிட்டு, 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிச்சடங்கில் கோலி, சாஸ்திரி பங்கேற்பு

வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, இயக்குநர் ரவி சாஸ்திரி, பயிற்சியாளர் டங்கன் ப்ளட்சர், அணி மேலாளர் அர்ஷத் அயூப் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இவர்களைத் தவிர நான்கு இந்திய வீரர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணி பிரிஸ்பேன் சென்றபிறகு முடிவெடுக்கப்படும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x