Published : 20 Dec 2014 12:45 PM
Last Updated : 20 Dec 2014 12:45 PM
மும்பையில் இன்று நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
கேரள அணி உரிமையாளர்களில் ஒருவராக சச்சினும், கொல்கத்தா அணியின் உரிமையாளர்களில் ஒருவராக முன்னாள் கேப்டன் கங்குலியும் உள்ளனர். ஒரு காலத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சச்சினும், கங்குலியும் இன்று எதிரெதிர் துருவங்களில் இருந்து தங்களின் அணிகளை உற்சாகப்படுத்தவிருக்கிறார்கள்.
கேரள அணி தனது அரையிறுதியில், குரூப் சுற்றில் முதலிடத்தைப் பிடித்த சென்னையின் எப்.சி. அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதி முதல் சுற்றில் 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்திய கேரள அணி, அரையிறுதி 2-வது சுற்றில் 0-3 என்ற கோல் கணக்கில் சென்னையிடம் தோல்வி கண்டது. பின்னர் நடைபெற்ற கூடுதல் நேரத்தில் ஒரு கோலடித்து 4-3 என்ற கோல் வித்தியாச அடிப்படையில் இறுதி ஆட்டத்தை உறுதி செய்தது கேரளா.
அட்லெடிகொ டி கொல்கத்தா அணி, தனது அரையிறுதியில் குரூப் சுற்றில் 2-வது இடத்தைப் பிடித்த கோவா அணியை பெனால்டி ஷூட் அவுட் மூலம் 4-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே அபாரமாக ஆடும் என்பதால் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.
லீக் சுற்றின் தொடக்கத்தில் மிக மோசமாக விளையாடி வந்த கேரள அணி, பின்னர் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வலுவான அணியாக உருவெடுத்திருக்கிறது. லீக் சுற்றில் கொல்கத்தாவுக்கு எதிராக ஒரு வெற்றியையும், ஒரு டிராவையும் பதிவு செய்துள்ளது கேரளா. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் கொல்கத்தாவை எதிர்கொள்ளும்.
ஸ்டிரைக்கர் இயான் ஹியூம், மிட்பீல்டர்கள் மெஹ்தாப் ஹுசைன், ஸ்டீபன் பியர்சன், சுஷாந்த் மேத்யூ ஆகியோர் கேரளாவின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கின்றனர். இயான் ஹியூம் இதுவரை 5 கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கோல் கீப்பர் டேவிட் ஜேம்ஸ், பின்களத்தில் குருஜிந்தர் சிங், ஜிங்கான் உள்ளிட்டோர் கேரளாவுக்கு பலம் சேர்க்கின்றனர்.
காயத்தால் ஃபிக்ரு விலகல்
அதேநேரத்தில் கொல்கத்தா அணி தனது கடைசி 12 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது. இதுதவிர அரையிறுதியில் 2 சுற்றுகளிலும் அந்த அணி கோலடிக்கவில்லை. கோலடிப்பதில் தீவிரமும் காட்டவில்லை. இந்த நிலையில் அந்த அணியின் முன்னணி ஸ்டிரைக்க ரான ஃபிக்ரு காயம் காரணமாக இறுதிப்போட்டியிலிருந்து விலகியிருப்பது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டிரைக்கர் கேவின் லோபோ, மிட்பீல்டர் ஜோப்ரே ஆகியோர் அணிக்கு திரும்பியிருப்பது ஓரளவு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. மிட்பீல்டை பொறுத்தவரையில் கேப்டன் லூயிஸ் கிரேஸியா, போர்ஜா ஆகியோரையே நம்பியுள்ளது கொல்கத்தா. பின்களத்தில் தேவ்நாத், அர்னாப், ஜோஸ்மி, பிஸ்வாஜித் உள்ளிட்டோரை நம்பியுள்ளது. மொத்தத்தில் கொல்கத்தாவோடு ஒப்பிடும்போது எல்லா வகையிலும் கேரளா பலமான அணியாக உள்ளது. இறுதி ஆட்டத்தில் கேரள அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT