Published : 31 Dec 2014 03:40 PM
Last Updated : 31 Dec 2014 03:40 PM
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, வெறும் வார்த்தைகளால் மட்டும் தலைமையேற்று வழிநடத்துபவர் அல்ல, செயல்களால் வழிநடத்தியவர் என்று முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் புகழாரம் சூட்டியுள்ளார்.
“தோனியின் தலைமையின் கீழ் விளையாடியதில் எனக்கு அவரிடம் பிடித்த ஒன்று, அவர் செய்ய முடியாததை மற்றவர்களிடம் எதிர்பார்க்க மாட்டார், அதனைச் செய்யச் சொல்லி வலியுறுத்த மாட்டார்.
உண்மை நிலை என்னவெனில் ஒரு இளம் அணியை அவர் கட்டமைக்க வேண்டும். ஒரு விதத்தில் பார்த்தால் தொடர்பு படுத்துவதில் அதிக நாட்டம் இல்லாத கேப்டன்களில் ஒருவர் என்று தோனியை கூறலாம். ஆனால், அவர் அனைவரிடமும் சகஜமாக பேசியே தன் மீதான மதிப்பை அதிகரித்துக் கொண்டவர். எப்போதும் பின்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க மாட்டார். அவர் ஒரு உதாரணமாகத் திகழ்ந்தது அவரது செயல்களால், வெறும் வார்த்தைகளால் அல்ல.
சிறிய ஊர்களிலுள்ள இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தவர் தோனி. அவர்களுக்கு ஒரு விதத்தில் ஊக்கமளித்துள்ளார் அவர். ராஞ்சி என்ற ஒரு சிறிய நகரிலிருந்து வந்து இந்திய அணியளவில் முன்னேறி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, ஒருநாள், டி20 கேப்டன்சி என்று உயர்வு பெறுவது சாதாரணமானதல்ல.
கேப்டன்சி என்ற பொறுப்பிற்கு நிறைய மரியாதையை ஏற்படுத்தியவர் தோனி.
இந்தியாவில் அவர் கேப்டன்சி செய்த போது அவர் தற்காப்பு முறையில் செய்யவில்லை. ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தும் போது அவர் ஆக்ரோஷமான கேப்டனாகவே செயல்பட்டார். அயல்நாடுகளில்தான் கடந்த 3 அல்லது 4 ஆண்டுகளாக அவர் ஆக்ரோஷமாக செயல்பட பவுலர்கள் அவரிடம் இல்லை. எதிரணியினரின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர்கள் இல்லை. இதனால் தடுமாறினார்.
தோனியை நான் அறிந்தவரையில் ஒரு தொடரின் நடுவில் இப்படிப்பட்ட முடிவை அவர் எடுக்க கூடியவரல்ல. ஆனால் தொடர் ஏற்கெனவே இழக்கப்பட்ட பிறகு அவர் தன்னை டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடுவித்துக் கொள்வதென்றால் இதுவே சரியான தருணம் என்று முடிவெடுத்திருக்கலாம்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் தோனியே. புள்ளிவிவரங்கள் பொய் சொல்லாது” என்றார் ராகுல் திராவிட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT