Published : 11 Dec 2014 10:38 AM
Last Updated : 11 Dec 2014 10:38 AM

கோலி ஹெல்மெட்டை தாக்கிய பவுன்சர்: பதறிய ஆஸ்திரேலிய வீரர்கள்

இந்திய வீரர் விராட் கோலி சந்தித்த முதல் பவுன்சர் பந்து அவரது ஹெல்மெட்டில் பட்டதால், ஆஸ்திரேலிய வீரர்கள் பதறினர்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்தியா 52 ரன்களுக்கு மிட்சல் ஜான்சன் பந்தில் முரளி விஜய்யை இழந்தது. தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார்.

விராட் கோலி சந்தித்த முதல் பந்தை மிட்சல் ஜான்சன் பவுன்சராக வீச, அதை தவிர்க்க முயன்றும், ஹெல்மெட்டில் அடி வாங்கினார் விராட் கோலி. அதிர்ச்சியில் சற்று நிதானித்தார் விராட் கோலி. ஆனால் அடுத்த நொடியே சுற்றியிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் விராட் கோலி அருகே பதறியடித்து வந்து அவர் நலமாக உள்ளாரா என்று கேட்டறிந்து சென்றனர்.

மிட்சல் ஜான்சனை கேப்டன் மைக்கேல் கிளார்க் தட்டிக் கொடுத்து பதற்றமடைய வேண்டாம் என ஆறுதல் தெரிவித்தார்.

சில வாரங்களுக்கு முன் ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ், பவுன்சர் பந்து தாக்கியதால் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரையுமே உலுக்கியது. இதனால் முதல் டெஸ்ட் போட்டி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த போட்டியின் முதல் பந்தே பவுன்சராக வீசப்படவேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்தனர் ஆனால் இந்தியப் பந்துவீச்சில் அவ்வளவு பவுன்சர்கள் வீசப்படவில்லை. இந்நிலையில் விராட் கோலி சந்தித்த பவுன்சர் பந்து ஆஸ்திரேலிய வீரர்களை பதற வைத்துள்ளது.

களத்தில், எதிரணி வீரர்களை எப்படியேனும் தூண்டி விட்டு, அவர்களை மோசமாக ஆடவைக்கும் முயற்சிக்கு பெயர் போன ஆஸ்திரேலிய அணியின் மனப்பான்மையை, பிலிப் ஹியூஸின் மறைவு கொஞ்சம் கலங்கடிக்க வைத்துள்ளது இன்றைய சம்பவத்தில் தெரிந்தது.

மேலும் இந்த வீடியோ இணையத்திலும் தற்போது பரபரப்பாக பரவி வருகிறது.

அதிகாரப்பூர்வ வீடியோ இணைப்பு:>http://bit.ly/1vS6LoS

இணையத்தில் பரவி வரும் வீடியோ