Published : 26 Dec 2014 10:24 AM
Last Updated : 26 Dec 2014 10:24 AM

அதிவேக இரட்டை சத உலக சாதனையை 5 ரன்களில் கோட்டைவிட்ட பிரெண்டன் மெக்கல்லம்

கிறைஸ்ட் சர்ச்சில் இன்று தொடங்கிய இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசி. கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் 134 பந்துகளில் 195 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததன் மூலம் அதிவேக இரட்டைச்சதத்திற்கான உலக சாதனையை தவறவிட்டார்.

ஆனால் 74 பந்துகளில் சதத்தை நிறைவு செய்து அதிவேக டெஸ்ட் சதத்திற்கான நியூசிலாந்து சாதனையை நிகழ்த்தினார். ஒரு மாதத்திற்கு முன்னால் மெக்கல்லம் ஏற்படுத்திய அதிவேக சத சாதனையை அவரே இன்று முறியடித்தார்.

153 பந்துகளில் நேதன் ஆஸ்டில் 2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த இரட்டை சதமே அதிவேக இரட்டை சதத்திற்கான உலக சாதனையாக இருந்து வருகிறது.

இன்று பிரெண்டன் மெக்கல்லம் களமிறங்கியது முதல் ஆக்ரோஷம் காண்பித்தார். இலங்கை பந்து வீச்சாளர்கள் சுரங்க லக்மல், எரங்கா, பிரசாத், கவுஷல் என்ற அறிமுக ஸ்பின்னர் என்று ஒருவரும் மெக்கல்லமை கட்டுப்படுத்த முடியவில்லை.

134 பந்துகளில் 195 ரன்களை விளாசிய மெக்கல்லம் அதில் 18 பவுண்டரிகள், 11 சிக்சர்களை அடித்து நொறுக்கினார். மொத்தம் 138 ரன்களை பவுண்டரி, சிக்சர்களிலேயே அவர் விளாசினார்.

கவுஷல் என்ற 21 வயது ஆஃப் ஸ்பின்னர் வசமாக மெக்கல்லம்மின் மட்டைவீச்சுக்கு சிக்கினார். அவர் இதுவரை 16 ஓவர்களில் 121 ரன்களைக் கொடுத்துள்ளார். ஆனால் ஒரே ஆறுதல் கடைசியில் மெக்கல்லம் விக்கெட்டை இவர்தான் கைப்பற்றினார்.

ஆட்டத்தின் 66-வது ஓவரை கவுஷல் வீச முதல் பந்தை லாங் ஆனில் சிக்சர் அடித்தார். இது சிக்சர் நம்பர் 11. இன்னும் ஒரு சிக்சர் அடித்திருந்தால் டெஸ்ட் இன்னிங்ஸில் 12 சிக்சர்கள் அடித்து சாதனை வைத்திருக்கும் வாசிம் அக்ரமை சமன் செய்திருக்கலாம். ஆனால் அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்தார். மீண்டும் ஒரு பவுண்டரி விளாசினார். கடைசியில் 5-வது பந்தில் லாங்-ஆஃப் திசையில் கருணரத்னேயின் அபார கேட்சிற்கு 195 ரன்களில் வெளியேறினார் மெக்கல்லம்.

நியூசிலாந்து அணி இன்றைய தினம் இன்னமும் 20 ஓவர்கள் மீதம் உள்ள நிலையில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 400 ரன்கள் எடுத்துள்ளது.

ஜேம்ஸ் நீஷம் 67 ரன்களுடனும், வாட்லிங் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதில் கொடுமை என்னவெனில் டாஸ் வென்ற இலங்கை முதலில் நியூசிலாந்தை பேட் செய்ய அழைத்ததுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x