Published : 05 Dec 2014 11:56 AM
Last Updated : 05 Dec 2014 11:56 AM
வரும் சீசனில் (2015) தென் ஆப்பிரிக்காவின் ரவென் கிளாசனுடன் இணைந்து இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் களமிறங்குகிறார் இந்தியாவின் லியாண்டர் பயஸ்.
ஆடவர் இரட்டையர் போட்டிகளில் 8 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான 41 வயது பயஸ், கடந்த 3 ஆண்டுகளாக செக். குடியரசின் ரடேக் ஸ்டெபானெக்குடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். பயஸும், ரடேக்கும் இணைந்து 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். இந்த நிலையில் வரும் சீசனில் 32 வயதான ரவென் கிளாசனுடன் ஜோடி சேர முடிவு செய்துள்ளார் பயஸ். பயஸ் ஜோடி சேரவுள்ள 99-வது வீரர் கிளாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
கலப்பு இரட்டையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸுடன் ஜோடி சேர்கிறார் பயஸ். ஹிங்கிஸ், பயஸின் 24-வது கலப்பு இரட்டையர் ஜோடி ஆவார். இதற்கு முன்பு கலப்பு இரட்டையர் பிரிவில் ஸ்லோவாக்கியாவின் டேனிலா ஹன்டுசோவாவுடன் ஆடினார் பயஸ்.
2014-ம் வருடம் பயஸூக்கு சரியாக அமையவில்லை. காயம் காரணமாக அவதிப்பட்டார். ஏடிபி உலக டூர் ஃபைனல்ஸுக்கு தகுதி பெற முடியாமல் போனது. கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக தரவரிசையில் முதல் 25 இடங்களை இழந்தார். ஒரு கிராண்ட்ஸ்லாமில்கூட இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.
ஆனால், ரவெனுக்கு 2014 சிறந்த வருடம். ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். 5 ஏடிபி பட்டங்களை வென்றார். இதற்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த எரிக்குடன் ஜோடி சேர்ந்து ஆடிவந்தார்.
பயஸுடன் இணைவது பற்றி பேசிய ரவென், “எரிக்குடன் இணைந்ததால் என் டென்னிஸ் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவரை விட்டுப் பிரிவது கடினமான முடிவு. டென்னிஸுக்கு வெளியேயும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். பயஸுடன் இணைவது பற்றிய முடிவை அவருடன் சொல்ல மிகவும் கஷ்டப்பட்டேன். நிச்சயம் நான் அவரை விட்டு வேறு ஒரு இணையைத் தேடவில்லை. பயஸ் என்னிடம் வந்து, 2015ல் விளையாடலாமா என்று கேட்டது மிகவும் கிளர்ச்சியூட்டியது. அவரைத் தவிர வேறு யாராவது கேட்டிருந்தால் ஒப்புக்கொண்டிருக்கமாட்டேன். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சாம்பியனாக வேண்டும் என்பது என் கனவு. அதை பயஸுடன் இணைந்து சாதிக்கமுடியும் என்று தோன்றுகிறது” என்றார்.
ரவென் கிளாசனுடன் இணைவது குறித்து பயஸ் கூறுகையில், “நான் எனக்கான ஜோடியைத் தேடும்போது என் பலவீனங்களை தன் பலமாகக் கொண்டவராக இருக்கிறாரா என்று பார்ப்பேன். ரவெனிடம் உலகத் தரமான பேக்ஹேண்ட் உள்ளது. சர்வீஸும் அருமையாக செய்வார். இது எங்கள் கூட்டணிக்குப் பலம் சேர்க்கும். ரவெனுடன் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஆடுவேன். அதற்கு முன்பு தோஹா அல்லது சென்னை போட்டிகளில் கலந்துகொண்டு ஆடுவோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT