Published : 17 Dec 2014 03:38 PM
Last Updated : 17 Dec 2014 03:38 PM
பிரிஸ்பன் மைதானத்தில் இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
ஆட்ட முடிவில் அஜிங்கிய ரஹானே 75 ரன்களுடனும், ரோஹித் சர்மா 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 5-வது விக்கெட்டுக்காக 50 ரன்களைச் சேர்த்தனர்.
பவுன்ஸ் மட்டும் உள்ள ஆனால் எதிர்பார்த்த வேகம் இல்லாத பிரிஸ்பன் பிட்சில் டாஸ் வென்ற தோனி முதலில் பேட் செய்ய தயங்காமல் முடிவெடுத்தார். பிரிஸ்பன் மைதானத்தில் இன்று கடும் வெப்பம் நிலவியது. இதில் ஆஸ்திரேலிய பவுலர்கள் போராடினர்.
மொகமது ஷமி, கரண் சர்மா இந்த போட்டியில் இல்லை, பதிலாக அஸ்வின், உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அடிலெய்ட் டெஸ்ட் 2-வது இன்னிங்ஸில் 99 ரன்களுக்கு அவுட் ஆன ரணத்தை உணர்ந்த முரளி விஜய், இன்று மேலும் உத்தரவாதத்துடன் ஆடினார். பந்துகளை அருமையாக ஆடாமல் விட்டார். அதே சமயத்தில் தளர்வான பந்துகளை பவுண்டரிக்கு அடிப்பதிலும் வெற்றி கண்டார்.
ஆனால், ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்ட ஷான் மார்ஷ் நிச்சயம் இன்று ஓய்வறையில் விமர்சனங்களைச் சந்திப்பார். தொடக்க ஓவர்களிலேயே முரளி விஜய்க்கு மிட்செல் ஜான்சன் பந்தில் ஸ்லிப் கார்டனில் கேட்ச் ஒன்றை அவர் கோட்டைவிட்டார். அதன் பிறகு ஒருவரும் முரளி விஜய்யை நிறுத்த முடியவில்லை.
ரியான் ஹேரிஸ், பீட்டர் சிடில் ஆகியோரின் அனுபவம் இந்த போட்டியில் இல்லாதது ஆஸ்திரேலியாவை முடக்கியது. ஜோஸ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் கடைசியில் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். மிட்செல் மார்ஷும் காயம் அடைந்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு இந்த டெஸ்ட் போட்டியில் பிரச்சினைகள் அதிகம் என்றே தெரிகிறது.
தவானால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. காரணம் அவர் ஷாட் தேர்வு செய்த மைதானத்தின் பகுதி மிகவும் தூரமானது. அருமையாகவே ஆடிவந்தார். 24 ரன்கள் எடுத்து நன்றாக செட்டில் ஆன பிறகு மிட்செல் மார்ஷ் வீசிய ஷாட் பிட்ச் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்தை தேவையில்லாமல் கட் செய்ய முயற்சித்தார். பந்து எதிர்பார்த்ததை விட எழும்பியது எட்ஜ் ஆகி ஹாடினிடம் கேட்ச் ஆனது. இந்தியா 56/1.
முரளி விஜய் மிட்செல் ஜான்சனை தேர்ட்மேனில் இரண்டு லேட் கட் பவுண்டரிகளையும் மிட்செல் மார்ஷை பாயிண்டிலும் பவுண்டரி கண்டு உணவு இடைவேளையின் போது 46 ரன்களில் இருக்க புஜாரா 15 ரன்களில் இருக்க ஸ்கோர் 89/1 என்று இருந்தது.
உணவு இடைவேளைக்குப் பிறகு ஆஸ்திரேலியா ரன் விகிதத்தை கட்டுப்படுத்தத் தொடங்கியது. விஜய் 79 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார்.
புஜாராவும் எந்த விதப் பிரச்சனையும் இன்றி ஆடி வந்தார். ஆனால் ஹீட் காரணமாக மிட்செல் மார்ஷ் பெவிலியன் சென்றார். ஸ்டார்க்கும் 35 டிகிரி வெயிலில் களைப்படைந்தார். புஜாரா 18 ரன்கள் எடுத்திருந்த போது ஹேசில்வுட் வீசிய சற்றே உட்புறமாக வளைந்து வந்த ஷாட் பிட்ச் பந்தை தடுக்க முயன்று பிறகு விலகிக்கொள்ள முயன்றார். ஆனால் பந்து அவரது ஹெல்மெட்டை உரசிக் கொண்டு ஹேடினிடம் சென்றது, அவர் பிடித்துவிட்டு முறையீடு செய்ய நடுவர் இயன் கோல்டு கையை உயர்த்தினார். மோசமான தீர்ப்பில் வெளியேறினார் புஜாரா.
இப்போது பலத்த கரகோஷத்துடன் விராட் கோலி களமிறங்கினார். அவர் 1 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்திருந்த போது அடிலெய்ட் பவுன்ஸ் என்று நினைத்து ஹேசில்வுட் பந்தை கட் செய்ய நினைத்தார். பவுன்ஸ் கூடுதல் காரணமாக எட்ஜ் எடுத்து அவுட் ஆனார். கிட்டத்தட்ட தவான் ஆட்டமிழந்ததைப் போல்தான் இவரும் அவுட் ஆனார். 137/3 என்ற நிலையில் ஆஸ்திரேலியாவின் கை கொஞ்சம் ஓங்கும் போல் தெரிந்தது.
ஆனால் முரளி விஜய் தேநீர் இடைவேளையின் போது 73 ரன்களுடனும் ரஹானே 13 ரன்களுடனும் இருக்க இந்தியா 151/3 என்று இருந்தது. 52 ஓவர்கள் முடிந்திருந்தன. தேநீர் இடைவேளைக்குப் பிறகு 1 விக்கெட்டை மட்டுமே இழந்து இந்தியா 160 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் தேநீர் இடைவேளைக்குப் பிறகும் தனது அனாயாச ஆட்டத்தை தொடர்ந்து 175 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் சதம் கண்டார். சதம் அடிப்பதற்கு முன்னரே அடிக்கத் தொடங்கிய விஜய் சதம் அடித்த பிறகு மேலும் 8 பவுண்டரிகளை விளாசி 144 ரன்களை 213 பந்துகளில் எடுத்து நேதன் லயன் பந்தை மேலேறி வந்து ஆட முயன்று பிராட் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரஹானேயுடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்காக 124 ரன்களைச் சேர்க்கப்பட்டது.
ரஹானே அபாரமாக தனது இன்னிங்ஸைக் கட்டமைத்தார். இவர் ஆடிய டிரைவ் ஷாட்கள் அபாரம. அவர் 122 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
சவுரவ் கங்குலி இதே பிரிஸ்பனில் 144 ரன்களை எடுத்த அதே ஸ்கோரில் முரளி விஜய் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா களமிறங்கி நேதன் லயன் பந்தை லாங் ஆனில் மிகப்பெரிய சிக்சரை அடித்து டெஸ்ட் போட்டியின் முதல் சிக்சரை துவக்கி வைத்தார். அவர் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து ரஹானேயுடன் ஆடி வருகிறார்.
நேதன் லயன் 20 ஓவர்கள் வீசி 87 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஜான்சன் எதிர்பார்த்த அளவுக்கு அவ்வளவு அச்சுறுத்தலாக வீசவில்லை. ஹேசில்வுட் மட்டுமே நல்ல லைன் மற்றும் லெந்தில் வீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
1988-ஆம் ஆண்டு விவ் ரிச்சர்ட்ஸ் தலைமை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பிரிஸ்பனில் தோற்ற பிறகு ஆஸ்திரேலியா இங்கு தோற்றதில்லை. இப்போது கிளார்க் இல்லாத நிலையில் இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT