Published : 30 Dec 2014 12:44 PM
Last Updated : 30 Dec 2014 12:44 PM
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இந்த போட்டியில் நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 441 ரன்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை 138 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை, 3-வது நாளின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 7-வது விக்கெட்டாக மேத்யூஸ் 66 ரன்களில் ஆட்டமிழக்க, இலங்கை அணியின் தோல்வி தவிர்க்க முடியாததானது.
ஆனால், கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த எரங்காவும், லக்மலும் 59 ரன்கள் சேர்த்தனர். இறுதியில், இலங்கை அணி 154 ஓவர்களில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுதி, டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
இதையடுத்து 105 ரன்கள் என்ற இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து, 30.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் 134 பந்துகளில் 195 ரன்கள் எடுத்த மெக்கல்லம் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2014-ம் ஆண்டு நியூஸிலாந்து அணி 5 டெஸ்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதுபோல அவர்கள் எந்த வருடமும் சாதித்ததில்லை. அதற்கு முன்பு ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 4 டெஸ்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT