Last Updated : 15 Dec, 2014 03:01 PM

 

Published : 15 Dec 2014 03:01 PM
Last Updated : 15 Dec 2014 03:01 PM

2015-ல் சிறப்பாக ஆடுவேன்: சாய்னா நம்பிக்கை

இந்த வருடம் சில போட்டிகளில் ஜெயித்திருந்தாலும் எனக்கு திருப்தியில்லை. அடுத்த வருடம் மேலும் சிறப்பாக ஆடி பல போட்டிகளில் ஜெயிப்பேன் என்று சாய்னா நெவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் 2013-ல் ஒரு போட்டியைக்கூட வெல்லவில்லை. ஆனால் இந்த வருடம் இந்தியா ஓபன் கிராண்ட் பிரிக்ஸ், ஆஸ்திரேலியன் சூப்பர் சீரிஸ், சீன ஓபன் சூப்பர் சீரிஸ் என 3 போட்டிகளை வென்றார். இந்திய அணிக்கு உபர் கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கமும் பெற்றுக் கொடுத்தார். 2014-ல் தன்னுடைய வெற்றி, தோல்விகளைப் பற்றி சாய்னா நெவால் கூறும்போது:

“ஒரு வீரர் வெற்றியடையும்போதுதான் அவருடைய முன்னேற்றம் தெரியும். இந்த வருடம் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றாலும் எனக்கு திருப்தியில்லை. மேலும் சில போட்டிகளில் வென்றிருக்கவேண்டும் என்றுதான் எண்ணுகிறேன். 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் நெருங்கி வருவதால் அடுத்த வருடம், 2014-ல் ஆடியதை விடவும் சிறப்பாக ஆடி பல போட்டிகளில் ஜெயிப்பேன்” என்றார்.

சாய்னா, அடுத்ததாக துபாயில் நடைபெறுகிற வேர்ல்ட் சூப்பர் சீரிஸ் ஃபைனல்ஸ் போட்டியில் கலந்துகொள்கிறார். இப்போட்டி டிசம்பர் 17-21 தேதிகளில் நடைபெறுகிறது. இதுபற்றி சாய்னா கூறும்போது: “இப்போட்டிக்காக நன்றாக தயாராகியுள்ளேன். பேட்மிண்டனில் உள்ள 8 முன்னணி வீராங்கனைகள் கலந்துகொள்ளும் போட்டி என்பதால் சிறப்பாக ஆடினால்தான் வெல்லமுடியும். இந்த வருடம் எல்லா இந்திய பேட்மிண்டன் வீரர்களும் நன்றாக ஆடியுள்ளார்கள். பல இளைஞர்கள் நல்ல முன்னேற்றம் காண்பித்துள்ளார்கள். எனவே விரைவில் டாப் 20-ல் பல இந்திய வீரர்கள் இடம்பெற வாய்ப்புண்டு” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x