Published : 30 Dec 2014 11:14 AM
Last Updated : 30 Dec 2014 11:14 AM
இந்த டெஸ்ட் தொடர் முழுக்க கோலி ஜான்சன் இடையே நடைபெற்று வரும் வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்றும் இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
68-வது ஓவரில் சமி பந்துவீச்சில் ஜான்சன் ஆட்டமிழந்தார். உடனே அதிக உற்சாகமான இந்திய வீரர்கள் சிலர் ஜான்சனைப் பார்த்து வேடிக்கையாக ஏதோ பேசினர். பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்த ஜான்சனிடம் கோலியும் ஏதோ சொல்ல, பதிலுக்கு ஜான்சனும் வாக்குவாதம் செய்தார். உடனே களத்தில் இருந்த நடுவர்கள், இந்திய வீரர்களிடம் இதுதொடர்பாகப் பேசி, நிலைமையை ஒழுங்குபடுத்தினர்.
அதற்கு முன்பு, பிராட் ஹேடின் ஆடவந்தபோதும் கிரீஸுக்கு அருகே நின்றுகொண்டு வேடிக்கையாக ஏதோ பேசியபடி இருந்தார் கோலி. ஆனால் அவர் பேசிய எதையும் ஹேடின் கண்டுகொள்ளவில்லை. தன்னை மதிக்காத ஜான்சன் உள்ளிட்ட ஆஸி. வீரர்கள் சிலர் மீது தனக்கு மரியாதை இல்லை என்று நேற்று முன் தினம் கோலி பேட்டி கொடுத்ததிலிருந்து கோலி-ஜான்சன் மீது அனைவருடைய கவனமும் குவிந்துள்ள நிலையில் நேற்று மேற்கண்ட சம்பவங்கள் நடந்தன.
ஜான்சன் அவுட் ஆனபோது கோலி நடந்துகொண்ட விதம் பற்றி டேவிட் வார்னர் கூறும்போது, "ஜான்சனிடம் கோலி என்ன சொன்னார் என்று தெரியாது. ஆனால் பிராட் ஹேடின் களத்தில் வந்தபோது கிரிஸுக்கு அருகே நின்றுகொண்டிருந்தார் கோலி. இப்படித்தான் கிரிக்கெட் ஆடவேண்டும் என்று அவர் நினைத்தால் அப்படியே விட்டுவிடுவோம். நாங்களும் ஆக்ரோஷமாகவே கிரிக்கெட்டை அணுகுவோம். ஆடுகளத்தில் என்ன நடந்தாலும் அதை அங்கேயே விட்டுவிடவேண்டும். அதை வெளியே கொண்டுவரக்கூடாது. அதேபோல எல்லைக்கோட்டை யாரும் தாண்டக்கூடாது. விதிமுறை களை யாராவது மீறும்போது ஐசிசி அதை கவனத்தில் கொள்ளும்" என்றார்.
அஸ்வினிடம் இந்தச் சம்பவம் பற்றி கேட்டபோது, "ஆடுகளத்தில் நான் யாரிடமும் வாய்ப்பேச்சு கொடுக்கமாட்டேன். அதனால் அங்கு என்ன நடந்தது என்பதை அறிய ஆர்வம் காட்டவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் கடினமாக போட்டிபோடுவதால் இதுபோல நடந்துவிடுகிறது. நடந்த எதையும் யாரும் மனதில் வைத்துக்கொள்ளக்கூடாது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT