Published : 23 Dec 2014 06:57 PM
Last Updated : 23 Dec 2014 06:57 PM
பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தில் தான் களமிறங்கிய போது ரோஹித் சர்மா சற்று மேலதிகமாக ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார் என்று மிட்செல் ஜான்சன் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா அணி 247/6 என்று திணறி கொண்டிருந்த போது மிட்செல் ஜான்சன் களமிறங்க, அவர் மீது இந்திய வீரர்கள் சிலர் வார்த்தைக்கணைகளைத் தொடுத்தனர். குறிப்பாக ரோஹித் சர்மா கொஞ்சம் அதிகமாகவே வாய்வார்த்தையில் ஈடுபட்டார். இது இந்திய அணிக்கு எதிராகத் திரும்பியது.
"இந்திய வீரர்கள் நடத்தை ஆட்டத்தை விட்டு மனதை கொஞ்சம் விலக்கி வைக்கச் செய்தது. இது ஒரு நல்ல விஷயம் ஏனெனில் நான் ஸ்கோர்போர்டைப் பார்ப்பதை அது தவிர்க்கச் செய்தது. நான் எனது ஷாட்களை ஆடத் தொடங்கினேன்.
அன்றைய தினத்தில் பயிற்சியின் போது, சில பந்துகள் எனக்கு வீசப்பட்டன, ஆனால் அது மட்டும் எனக்கு போதவில்லை. களமிறங்கியவுடன் இந்திய வீரர்கள் செய்த செய்கை எனக்கு கவனத்தை கூட்டியதோடு, அவர்களும் எங்கள் வலையில் வீழ்ந்தனர். எங்களைப் பொறுத்தவரை அது ஆட்டத்தின் ஒரு பகுதி, ஆனால் அது அவர்களிடமிருந்து ஆட்டத்தைப் பறித்து விட்டது. இந்திய அணியினர் கொஞ்சம் கூடுதலாகச் சென்று விட்டனர் அவ்வளவே.
ரோஹித் சர்மா குறிப்பாக கொஞ்சம் அதிகமாக வாய்வார்த்தைகளில் ஈடுபட்டார். தொடக்கத்தில் பதில் கூறிக்கொண்டிருந்தேன் ஒரு கட்டத்திற்குப் பிறகு அவரைப் பார்த்து சிரிக்க தொடங்கினேன்.
அவருடைய பேட்டிங் எடுபடாமல் போனது, அதனால் அவர் வெறுப்பில் இருந்திருக்கலாம்.
மேலும் நான் பேட்டிங் செய்யும் போது ஸ்லெட்ஜிங்கை விரும்புவேன், அது என்னை பேட்டிங்கில் பாதிக்காது. அது எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும்.
ஆனால் பவுலிங் செய்யும் போது அது போன்ற வாய்வார்த்தைகள் என்னை சற்று பாதிக்கும்.” என்றார் ஜான்சன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT