Published : 01 Apr 2014 09:58 PM
Last Updated : 01 Apr 2014 09:58 PM

பாகிஸ்தானை வெளியேற்றி மே.இ.தீவுகள் அரையிறுதிக்கு தகுதி

பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 10 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்யும் இன்றைய போட்டியில், 167 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி, முதல் ஓவரின் முதல் பந்திலேயே சென்ற போட்டியில் சதம் அடித்த ஷெசாதை இழந்தது. மற்றொரு துவக்க வீரர் கம்ரான் அக்மலும் ரன் ஏதுமின்றி அவுட் ஆக, தொடர்ந்து வந்த முன்னணி வீரர்களான உமர் அக்மல், சோயிப் மாலிக் ஆகியோரும் ஒற்றை இலக்க ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

அடுத்தடுத்து வந்த வீரர்கள் அனைவரும் ரன் சேர்க்க முயற்சித்தாலும், மே.இ.தீவுகள் அணியின் பந்துவீச்சுக்கு பதிலளிக்க முடியாமல் வந்த வேகத்தில் வெளியேறினர். ஒரு ஓவருக்கு 15 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற சிக்கலான நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அப்ரிதியும் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

முடிவாக பாகிஸ்தான் அணி 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 84 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் வெற்றி பெற்றது. அந்த அணியின் தரப்பில் அதிகபட்சமாக பத்ரீ மற்றும் சுனில் நரைன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்டநாயகனாக பிராவோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் கெயில் 5 ரன்கள் மட்டுமே ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார். அவரைத் தொடர்ந்து ஆட சிம்மன்ஸ் ஒரு முனையில் ரன் சேர்த்தாலும், மறுமுனையில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். ஒரு கட்டத்தில் 15 ஓவர்களுக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை மே.இ.தீவுகள் இழந்திருந்தது.

சாமி பிராவோ அதிரடி

அப்போது களத்திலிருந்து கேப்டன் டேரன் சாமி மற்றும் பிராவோ இணை, 16-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்து தங்களது அதிரடியைத் துவக்கினர். தொடர்ந்து வந்த ஓவர்களில் பவுண்டரிக்களும், சிக்ஸர்களும் மாறி மாறி வர, அணியின் ஸ்கோர் வெகு வேகமாக உயர்ந்தது. இந்த இணை 32 பந்துகளில் 71 ரன்கள் குவித்தது.

20-வது ஓவரில் பிராவோ 46 ரன்களுக்கு ரன் அவுட் ஆனாலும், சாமி தனது ஆட்டத்தை விட்டுக் கொடுக்காமல் அந்த ஓவரில் மேலும் 14 ரன்கள் எடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் மே.இ.தீவுகள் 166 ரன்கள் குவித்தது. சாமி 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் 82 ரன்கள் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x