Last Updated : 09 Nov, 2014 10:51 AM

 

Published : 09 Nov 2014 10:51 AM
Last Updated : 09 Nov 2014 10:51 AM

ஹைதராபாத்தில் இன்று 3-வது ஒருநாள் ஆட்டம்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடக்கிறது.

முதல் இரு போட்டிகளிலும் இலங்கையை பந்தாடிய இந்திய அணி, 3-வது போட்டியிலும் வென்று 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. உலகக் கோப்பைக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் தோல்வியின் பிடியில் சிக்கி துவண்டுள்ள இலங்கை அணி, இந்தப் போட்டியில் வென்றாலொழிய தொடரை இழப்பதிலிருந்து தப்ப முடியாது.

மிரட்டும் தொடக்க ஜோடி

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர்களான அஜிங்க்ய ரஹானே, ஷிகர் தவன் ஆகியோர் உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் இந்தப் போட்டியிலும் அவர்களின் அதிரடி தொடரும் என்பதில் சந்தேகமில்லை. மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் சதமடித்த அம்பட்டி ராயுடு, இந்த முறையும் அதே 3-வது இடத்தில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர கேப்டன் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோரும் இந்தியாவின் பேட்டிங்கிற்கு பெரும் பலமாகத் திகழ்கின்றனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை யில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது. இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின், அக்ஷர் படேல், ஜடேஜா கூட்டணியே இந்தப் போட்டியிலும் பந்து வீச்சை கவனிக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.

தடுமாறும் இலங்கை

இலங்கை அணி குமார் சங்ககாரா, ஜெயவர்த்தனா, கேப்டன் மேத்யூஸ் ஆகியோரையே பேட்டிங்கில் நம்பியுள்ளது. தொடக்க வீரர்களான குஷல் பெரேரா, தில்ஷான் ஆகியோர் தொடர்ந்து தடுமாறி வரும் நிலையில், சங்ககாரா, மேத்யூஸ் ஆகியோர் சிறப்பாக ஆடினால் மட்டுமே அந்த அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்ட முடியும்.

இலங்கையின் பந்துவீச்சு மிக மோசமாகவுள்ளது. முன்னணி பந்துவீச்சாளர்களான லசித் மலிங்கா, ரங்கனா ஹெராத் ஆகியோர் இல்லாத நிலையில், இலங்கை அணி 8 பந்துவீச் சாளர்களை பயன்படுத்தியபோதும் இந்திய பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

போட்டி நடைபெறவுள்ள உப்பல் ராஜீவ் காந்தி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானதாகும். அதனால் இந்தப் போட்டியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி நேரம்: பிற்பகல் 1.30 நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்ஷன்.

ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம்

‘‘உலகக் கோப்பை போட்டியில் எதிரணிகளை பந்தாடுவதற்காக ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய அணியாக இந்திய அணி தயாராகிக் கொண்டிருக்கிறது’’ என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஒவ்வொரு ஆட்டத்தையும் நாக் அவுட் ஆட்டமாகக் கருதியே ஆடுகிறோம். அதனால் கடந்த இரு போட்டிகளில் பெற்ற வெற்றியைப் பற்றி நாங்கள் சிந்திப்பதில்லை. ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தனித்தனியாக வியூகம் வகுத்து அதை செயல்படுத்த முயற்சிக்கிறோம். மேற்கண்ட முறையில்தான் உலகக் கோப்பை போட்டிக்கான அணியை கட்டமைக்க விரும்புகிறோம். ஏனெனில் உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் சரியாக ஆடாவிட்டால், போட்டியிலிருந்து வெளியேறியாக வேண்டும்.

எதிரணியின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. நாங்கள் எங்களுடைய ஆட்டத்தில் தீவிர கவனம் செலுத்த விரும்புகிறோம். நாங்கள் எங்கள் அணியை மேம்படுத்த வேண்டுமானால் எதிரணியை பற்றி சிந்திக்க தேவையில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x