Published : 07 Nov 2014 10:09 AM
Last Updated : 07 Nov 2014 10:09 AM

கோபம், பதிலடி, வேதனை: சுயசரிதையில் சச்சினின் குறிப்புகள்

கோபப்படுத்திய ‘சைட் ஸ்கிரீன்’

1998-ல் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற சுதந்திர தின வெள்ளி விழா கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது “சைட் ஸ்கிரீன்” பிரச்சினையால் ஆட்டமிழந்தேன். அதனால் கடும் கோபத்துடன் பெவிலியனுக்கு திரும்பினேன். அப்போது வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் வந்து மன்னிப்புக் கோரினார். அந்தத் தருணத்தில் நான் அவரை திட்டிவிட்டேன். “சைட் ஸ்கிரீன்” பிரச்சினை தொடர்பாக நான் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அடிப்படை விதிகளைக்கூட அமல்படுத்தாவிட்டால் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்த வங்கதேசம் தகுதியான நாடு அல்ல என்று கூறினேன். ஆனால் நான் திட்டிய நபர் வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அஷ்ரபுல் ஹக் என்பது பின்னர்தான் தெரியவந்தது. அந்த சம்பவத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் நண்பர்களாகிவிட்டோம். அதன்பிறகு எங்கு சந்தித்தாலும் பழைய சம்பவத்துக்காக இருவரும் மாறிமாறி மன்னிப்புக் கேட்க தொடங்கிவிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இயான் சேப்பலுக்கு பதிலடி

2007 உலகக் கோப்பையில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தபோது, கிரேக் சேப்பலின் மூத்த சகோதரரான இயான் சேப்பல், பத்திரிகை ஒன்றில் பத்தி எழுதினார். அதில் சச்சின் கண்ணாடியின் முன்னால் நின்று தன்னை பார்த்தால் அவர் ஆடிய மோசமான ஆட்டங்கள் தெரியும். அவர் ஓய்வு பெற வேண்டிய தருணம் வந்துவிட்டது எனக் கூறியிருந்தார்.

அதற்கு தனது சுயசரிதையில் பதிலளித்துள்ள சச்சின், “இயான் சேப்பலை பற்றியெல்லாம் நான் பெரிதாக சிந்திப்பதில்லை. அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வி.பி. தொடரில் சதமடித்ததன் மூலம் அவருடைய விமர்சனத்துக்கு எனது பேட்டால் பதில் சொல்லிவிட்டேன். நான் யாருக்கும் என்னை நிரூபிக்க தேவையில்லை. அவர் இந்திய கிரிக்கெட்டுடன் தொடர்பில்லாதவர். எனினும் சில நேரங்களில் அதுபோன்ற கருத்துகளுக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் தந்துவிடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

பதவி பறிப்பால் வேதனை

1997-ல் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை டிரா செய்த நிலையில், திடீரென கேப்டன் பதவியிலிருந்து நான் நீக்கப்பட்டது எனக்கு அவமானத்தையும், வேதனையையும் தந்தது. இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் இருந்து யாரும் எனக்கு தகவல் சொல்லவில்லை. ஊடகங்களின் மூலமாகத்தான் நான் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தெரியவந்தது.

ஆனால் அப்போது ஏற்பட்ட வேதனைதான் என்னை வலுவான வீரனாக மாற்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு உதவியது. பிசிசிஐ என்னிடம் இருந்து கேப்டன் பதவியை வேண்டுமானால் பறிக்கலாம். ஆனால் எனது ஆட்டத்தை என்னிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

டிக்ளேர் செய்ததால் உறவில் பாதிப்பில்லை

முல்தானில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான் 194 ரன்களில் இருந்தபோது அப்போதைய பொறுப்பு கேப்டனான ராகுல் திராவிட் டிக்ளேர் செய்தது உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதேநேரத்தில் மைதானத்தில் இருந்து வெளியேறிய பிறகு, களத்தில் விளையாடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இரட்டைச் சதம் அடிக்க முடியாமல் போனதால் ஏற்பட்ட ஏமாற்றத்திலிருந்து மீள்வதற்காக களத்திற்கு வெளியே இருக்கும்போது என்னை தனியாக இருக்க விடுங்கள் என திராவிடிடம் கூறினேன்.

அந்த சம்பவத்தால் எனக்கும் திராவிடுக்கும் இடையிலான உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதன்பிறகும்கூட நாங்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிறைய ரன் குவித்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x