Published : 08 Nov 2014 09:18 AM
Last Updated : 08 Nov 2014 09:18 AM
ஆனந்த் – கார்ல்சன் இடையே நடக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டம் இன்று நடக்கிறது. அவர்கள் இருவரின் செஸ் பயணத்தைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.
கார்ல்சன்
5 வயது முதல் செஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் கார்ல்சன். கூடவே கால்பந்திலும் ஆர்வம். 12 வயது வரை கால்பந்தில் சாதிக்கவேண்டும் என்கிற ஆசைதான் அதிகமாக இருந்தது. 8 வயது முதல் செஸ்ஸை மும்முரமாக ஆட ஆரம்பித்த கார்ல்சன், 13 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆகிவிட்டார். அவ்வளவுதான். கால்பந்தை உதைத்துவிட்டு செஸ்ஸில் மூழ்க ஆரம்பித்தார். 16 வயதில் பள்ளிப் படிப்பு வேண்டாம், முழு நேரமும் செஸ்தான் என்று முடிவெடுத்தார்.
“எல்லாம் கார்ல்சனின் முடிவு. செஸ்ஸில் அவனால் சாதிக்கமுடியும் என்று நம்பியதால் நாங்களும் அதைத் தடுக்கவில்லை. பெற்றோர்களுக்கு என் ஆலோசனை, உங்கள் குழந்தைகளை அவர்களின் விருப்பத்துக்கே விடுங்கள். வெற்றி கிடைக்க தாமதமானாலும் அதுவே சரியான முடிவாக இருக்கும்’ என்கிறார் கார்ல்சனின் தந்தை ஹென்ரிக்.
“நான் நிச்சயம் உலக சாம்பியன் ஆவேன். அதற்கான முயற்சிகளில் கட்டாயம் ஈடுபடுவேன்” என்று 13 வயதில் சொன்னார் கார்ல்சன். அதை இந்த ஒரு வருடத்தில் நிரூபித்துவிட்டார். கிளாசிகல், ரேபிட், பிளிட்ஸ் என மூன்று உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்த ஒரு வருடத்தில் வென்றிருக்கிறார்.
ஜீனியஸ்
இளம் வயதிலேயே உலகின் நெ.1 வீரர், உலக சாம்பியன் என அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டதால் செஸ் உலகம் கார்ல்சனை ஜீனியஸ் என்று குறிப்பிடுகிறது. ஆனால், கார்ல்சனோ ‘எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டில் சிறப்பாக ஆடுகிறேன். அவ்வளவுதான். நான் ஒன்றும் ஜீனியஸ் கிடையாது’ என்கிறார் தன்னடக்கத்துடன்.
‘கார்ல்சன்மீது எனக்குப் பெரிய கனவு இருந்ததில்லை. மிகவும் மும்முரமாக செஸ் ஆடியகாலகட்டத்திலும் கூட கிராண்ட் மாஸ்டரானால் போதும் என்றுதான் நினைத்தேன். அதற்குப் பிறகு கிடைத்ததெல்லாம் போனஸ்தான்.’ என்கிறார் ஹென்ரிக். ‘என் நினைவில் செஸ் போர்டைக் காட்சிப்படுத்திக்கொள்வேன். அதில் காய்களை நகர்த்தி விளையாடிப் பார்ப்பேன். என்னால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செஸ் கேம்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்’ என்று தன் பலத்தை விவரிக்கிறார் கார்ல்சன். “ஞாபகசக்திதான் அவருடைய ஆயுதம்” என்று மெச்சுகிறார், ‘Magnus Carlsen’s Last Big Title’ என்கிற கார்ல்சன் பற்றிய ஆவணப்படத்தை எடுத்த பெஞ்சமின் ரீ.
1972ல் நடந்த பாபி ஃபிஷர் - போரிஸ் ஸ்பாஸ்கி இடையேயான உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு நிகராக சென்ற வருடம் நடந்த ஆனந்த் – கார்ல்சன் போட்டி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கார்ல்சன், ஆனந்துக்கு சிறிய வாய்ப்புகூட தராமல் அதிரடியாக ஆடி ஜெயித்துவிட்டார்.
1990-களில் இந்தியாவில் எப்படி ஆனந்த் ஒரு பெரிய அலையை உண்டாக்கினாரோ அதேபோலொரு மாற்றத்தை நார்வேயில் கொண்டு வந்திருக்கிறார் கார்ல்சன். நார்வேயில் செஸ்ஸை விடவும், குளிர்கால விளையாட்டுகளில்தான் (விண்டர் ஸ்போர்ட்ஸ்) மக்களுக்கு ஆர்வம் அதிகம். கார்ல்சனின் வெற்றிக்குப் பிறகு அங்கு செஸ்ஸை விரும்பி ஆடிவருகிறார்கள் இளைஞர்கள்.
13 வயதில் கிராண்ட் மாஸ்டர், 19 வயதில் உலகின் நெ.1 வீரர், 22 வயதில் உலக சாம்பியன் என்று அதிரடியாகச் சாதித்துக்கொண்டிருக்கிறார் கார்ல்சன். சென்ற முறை மாதிரியில்லாமல் ஃபார்மில் இருக்கும் ஆனந்தை மீண்டும் கார்ல்சன் ஜெயிப்பாரா என்று செஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஆனந்த்
ஆனந்த +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால், அவரை மருத்துவக் கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரி இரண்டில் எதில் சேர்க்கவேண்டும் என்கிற குழப்பம் ஆனந்தின் பெற்றோருக்கு இருந்தது. ரயில்வேயில் ஜெனரல் மேனேஜராக வேலை பார்த்த ஆனந்தின் தந்தை, செஸ்ஸில் ஆனந்தின் ஆரம்பகால பயிற்சியாளரான காமேஸ்வரனிடம் கருத்து கேட்டார்.
‘உங்க ரயில்வேயில சுதந்தரத்துக்குப் பிறகு இதுவரை எத்தனை பேர் ஜி.எம்-ஆ (ஜெனரல் மேனேஜர்)இருந்திருக்காங்க?” என்று ஆனந்தின் தந்தையிடம் கேள்வியெழுப்பினார் காமேஸ்வரன். “நிறைய பேரைச் சொல்லலாமே!” “யோசிச்சுப் பாருங்க, செஸ்ஸூல இதுவரைக்கும் இந்தியாவிலிருந்து ஒரு ஜி.எம்கூட (கிராண்ட்மாஸ்டர்) உருவாகலை. அது ஏன் நம்ம ஆனந்தா இருக்கக்கூடாது”
அந்த ஒரு வாக்கியத்தில், ஆனந்தின் பெற்றோர் முடிவெடுத்தார்கள். ஆனந்தின் முழு கவனமும் செஸ்ஸில் இருக்கட்டும் என்று. திட்டமிட்டபடியே நாட்டின் முதல் ஜி.எம். ஆனார் ஆனந்த். ‘ஆனந்த் மட்டும் ரஷ்யாவில் பிறந்திருந்தால் அவருடைய ஆட்டத்தின் முன்பு யாரும் தாக்குப்பிடித்திருக்க முடியாது.’ என்று 1995 உலக சாம்பியனுக்கான போட்டியில் ஆனந்தைத் தோற்கடித்தபிறகு குறிப்பிட்டார் காஸ்பரோவ். 2000-ம் ஆண்டில், முதல்தடவையாக உலக சாம்பியன் ஆன ஆனந்த், தொடர்ந்து 2007, 2008, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன் பட்டங்களை அடுத்தடுத்து வென்று காண்பித்தார்.
2007 முதல் உலக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தவர், சென்ற வருடம் கார்ல்சனிடம் தோற்றுப்போனார். ஓர் ஆட்டத்தில்கூட ஜெயிக்கமுடியவில்லை. இது, ஒரு சகாப்தத்தின் முடிவாக செஸ் வட்டாரத்தில் பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு வருட இடைவெளியில் நம்பமுடியாத திருப்பங்கள் ஏற்பட்டுவிட்டன.
கார்ல்சனுடன் மோதும் வீரரைத் தேர்ந்தெடுக்கும் தகுதிப் போட்டியான கேண்டிடேட்ஸில் யார் ஜெயிப்பார் என்கிற விவாதம் நடந்தபோது, “44 வயது ஆனந்த் ஜெயிப்பது கடினம். ஆரோனியன் அல்லது க்ராம்னிக் ஜெயிக்கக்கூடும்” என்று கார்ல்சன் தன் போட்டியாளரைப் பற்றி ஆருடம் கூறியிருந்தார். கார்ல்சன் மட்டுமல்ல காஸ்பரோவில் ஆரம்பித்து செஸ் நிபுணர்கள், செஸ் வீரர்கள் எல்லோருமே ஆரோனியன், க்ராம்னிக் இருவரின் வெற்றியைத் தான் எதிர்பார்த்தார்கள். 5 முறை உலகசாம்பியனாக இருந்தும் ஆனந்தின் மீது ஒருவருக்கும் நம்பிக்கை வரவில்லை.
ஆனால் கேண்டிடேட்ஸின் முதல் ஆட்டத்தில் ஆரோனியனை வென்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்திய ஆனந்த், இறுதியில் போட்டியையும் வென்றார். அடுத்து பில்பாவ் போட்டியிலும் ஜெயித்தார். இப்படி இரு போட்டிகளில் ஜெயித்து கார்ல்சனுடன் மீண்டும் மோதுவார் என்று சென்ற வருடம் யார் எதிர்பார்த்திருக்கமுடியும்?
‘சென்றமுறை கார்ல்சனுடன் ஆடும்போது ஆனந்த் சாம்பியனாக இருந்தார். ஆனால் இந்தமுறை போட்டியாளராக இருக்கிறார். அதனால் ஆனந்துக்கு அழுத்தங்கள் குறைவு. இது அவருடைய திறமையை வெளிக்கொண்டுவரும்’ என்று நம்பிக்கையளிக்கிறார் பிரபல செஸ் வீர்ர் க்ராம்னிக். ஃபிஷர், காஸ்பரோவ், கார்போவ், ஆனந்த் வரிசையில் செஸ் உலகை ஆளக்கூடியவர் என்று கார்ல்சன் மீது எல்லோரும் நம்பிக்கை வைக்கிறார்கள். அதை ஆனந்த் முறியடிப்பாரா?
கடந்த ஒரு வருடத்தில், ஆனந்த் இரண்டு போட்டிகளில் வென்றிருக்கிறார். ஆனால் கார்ல்சனோ 5 ஆட்டங்களில் தோற்றிருக்கிறார். இதை வைத்து யார் அடுத்த உலக சாம்பியன் என்று முடிவு செய்யமுடியுமா? இன்னொரு செய்தி. 2010 டிசம்பரில் ஆரம்பித்து கார்ல்சன் ஆனந்திடம் ஒரு ஆட்டத்தில் கூட தோற்கவில்லை. இப்போதுசொல்லுங்கள், யார் ஜெயிக்கப் போகிறார்கள்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT