Published : 19 Nov 2014 08:22 PM
Last Updated : 19 Nov 2014 08:22 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கான்பராவில் இன்று (புதன்கிழமை) சதம் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா குறைந்த இன்னிங்ஸ்களில் 5,000 ரன்கள் என்ற சாதனையை நெருங்கி வருகிறார்.
விவ் ரிச்சர்ட்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் 114 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை எடுத்து ஒருநாள் போட்டி சாதனையை தங்கள் வசம் வைத்துள்ளனர்.
ஆனால், விவ் ரிச்சர்ட்ஸ் 126 போட்டிகளில் 5000 ரன்களை எடுக்க விராட் கோலியோ 120 போட்டிகளில் 5,000 எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹஷிம் ஆம்லா 98 இன்னிங்ஸ்களில் (அதாவது 101 போட்டிகளில்) 4,910 ரன்களில் இருக்கிறார். சராசரி 53.95 என்பது வேறு விஷயம். கோலி, ரிச்சர்ட்ஸ் சாதனையை முறியடிக்க இன்னும் 90 ரன்களே உள்ள நிலையில் அதிவேக 5,000 ரன்கள் எடுத்த சாதனைக்குரியவராக விரைவில் ஆம்லா ஆகிவிடுவார் என்று தெரிகிறது.
இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் எடுத்த ஆம்லா 2014-ஆம் ஆண்டு எடுக்கும் 5-வது ஒருநாள் போட்டி சதமாகும். இதிலும் விராட் கோலியை இந்த ஆண்டு அவர் கடந்துள்ளார். விராட் கோலி 2014-ல் 4 சதங்களையும், ஆஸி. வீரர் ஆரோன் ஃபின்ச் 4 சதங்களையும் எடுத்துள்ளனர்.
இன்று ஆம்லா எடுத்த 102 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் எடுக்கும் முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 15 இன்னிங்ஸ்களில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டதில் இப்போதுதான் அந்த அணிக்கு எதிராக முதல் சதம் காண்கிறார். இதற்கு முன்னர் 2009-ஆம் ஆண்டு அடிலெய்டில் 80 நாட் அவுட், பிறகு அதே தொடரில் பெர்த்தில் 97 ரன்கள் என்பதே ஆம்லாவின் ஆஸி.க்கு எதிரான இரண்டு நல்ல இன்னிங்ஸ்களாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT