Published : 26 Nov 2014 10:58 AM
Last Updated : 26 Nov 2014 10:58 AM
சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சீன ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சர்வதேச தரவரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறியிருக்கும் சாய்னா, மேலும் கூறியதாவது:
உலகின் 9-ம் நிலை வீராங்கனையாக இருந்த நான் மூன்று பட்டங்கள் வென்றதன் மூலம் சர்வதேச தரவரிசையில் 4-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறேன். அடுத்த மாதம் நடைபெறவுள்ள துபாய் சூப்பர் சீரிஸ் ஃபைனல்ஸ் போட்டியில் நன்றாக ஆடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்க நீண்ட நாட்கள் இல்லை. உடற்தகுதியை பராமரித்து உலக அளவில் முன்னணியில் இருக்கும் மூன்று சீன வீராங்கனைகளுக்கு எதிராக சிறப்பாக ஆடவேண்டும். சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறேன். இது அனைவரும் அடைய விரும்பும் குறிக்கோள். ஆனால் அது அவ்வளவு சுலபமானதல்ல. ஏனெனில் சீன வீராங்கனைகள் மிகவும் வலுவாக இருக்கிறார்கள். முதலிடத்தை அடைய கடுமையாக முயற்சி செய்து வருகிறேன். நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார்.
நீண்டகாலமாக கோபிசந்திடம் பயிற்சி பெற்று வந்த சாய்னா, இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது பயிற்சியாளரை மாற்றினார். அவர் இப்போது பெங்களூருவில் விமல் குமாரிடம் பயிற்சி பெற்று வருகிறார். அது பற்றி பேசிய அவர், “சீன ஓபன் போட்டிக்குச் செல்வதற்கு முன்பு களத்தில் எனது நகர்வு (மூவ்மென்ட்) தொடர்பாக உள்ள குறைகளை பயிற்சியாளர் விமல் குமார் மூலம் சரிசெய்தேன். அந்தப் பயிற்சி மிகவும் உதவியாக இருந்தது. முந்தைய போட்டிகளில் செய்த தவறைக் கடைசியாக சரிசெய்து சீன ஓபனை வென்றேன். இந்தப் பயிற்சிகளுக்கான முன்னேற்றம் ஆசியப் போட்டி, டென்மார்க் மற்றும் பிரெஞ்சு ஓபன் போட்டிகளில் தெரிய ஆரம்பித்தன. பிரெஞ்சு ஓபனில் முன்னணி வீராங்கனையை கிட்டத்தட்ட தோற்கடித்திருப்பேன். பயிற்சியாளர் விமல் குமார் உதவியுடன் நான் எந்தமாதிரியான பயிற்சிகள், உத்திகளை மேற்கொள்ளவேண்டும் என்பதை அந்த ஆட்டங்களின் மூலம் கற்றுக்கொண்டுள்ளேன்.
என்னால் நாட்டுக்காக எத்தனைப் பதக்கங்கள் பெறமுடியும் என்றுதான் மக்கள் எண்ண வேண்டுமே தவிர, நான் என்ன செய்கிறேன், யாரிடம் பயிற்சி எடுக்கிறேன் என்று நினைக்கக்கூடாது. அதைப் பற்றிய கவலை அவர்களுக்கு வேண்டாம். யாருடன் பயிற்சி எடுப்பது என்பது என் பிரச்சினை. அதை நான் பார்த்துக்கொள்கிறேன்.
ஹைதராபாத்தில் சென்ற வருடம் இருந்தபோது, நான் விளையாடிய விதம் குறித்து அதிக மகிழ்ச்சி ஏற்படவில்லை. 2013-ல் ஒரு போட்டியில்கூட வெல்லவில்லை. எங்கேயோ மாட்டிக்கொண்டதாக எண்ணினேன். வித்தியாசமாக ஏதாவது முயற்சி செய்து மாற்றம் கொண்டு வரமுடியுமா என்று பார்த்தேன். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நான் தடுமாறியபோது விமல் சார் என்னிடம் உள்ள சில குறைகளைச் சுட்டிக்காட்டினார். அவரிடம் சிலநாட்கள் பயிற்சி எடுக்க முடிவு செய்தேன். ஒருவரிடம் நீண்ட நாளாக பயிற்சி எடுத்துவிட்டு பின்னர் பயிற்சியாளரை மாற்றுவது எளிதல்ல” என்றார்.
சாய்னா வென்ற சீன ஓபன் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் காந்த், சீனாவின் லின் டானை வீழ்த்தி சாம்பியன் ஆனார். அதுபற்றி பேசிய சாய்னா, “இந்தியர்களால் சீனர்களை வீழ்த்தமுடியும். நம்மால் அவர்களை வீழ்த்தமுடியாது என்று கிடையாது. ஆனால் அது எப்போதும் கடினமான ஒன்று. முதல்தடவை அவர்களைத் தோற்கடித்தால் அடுத்த தடவை இன்னும் தயாராகி வருவார்கள். அப்போது அவர்களை சுபலமாக தோற்கடிக்க முடியாது. ஒவ்வொருமுறையும் கடும்போட்டியை உருவாக்குவார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT