Published : 08 Nov 2014 09:21 AM
Last Updated : 08 Nov 2014 09:21 AM

தென் ஆப்பிரிக்காவுக்கு ஆஸி. பதிலடி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இதன்மூலம் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது ஆஸ்திரேலியா.

மெல்போர்னில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் டி காக் டக் அவுட்டானார். இதன்பிறகு ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா திணறியது. இதனால் ரொசாவ் 12, ஹென்ரிக்ஸ் 18, பெஹார்டியன் 5, டேவிட் மில்லர் 11, மெக்லாரன் 1 என அடுத்தடுத்து வேகமாக வெளியேறினர்.

எனினும் மறுமுனையில் தாக்குப்பிடித்து ஆடிய கேப்டன் டுமினி 51 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் ஃபாக்னர் 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேமரூன் பாய்ஸ் 4 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு பென் டங்க்-கேப்டன் ஆரோன் பிஞ்ச் 4.4 ஓவர்களில் 43 ரன்கள் சேர்த்து ஜோடி அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. 20 பந்துகளைச் சந்தித்த பென் டங்க் 23 ரன்களில் ஆட்டமிழக்க, ஆரோன் பிஞ்சுடன் இணைந்தார் வாட்சன்.

அதிரடியாக ஆடிய இந்த ஜோடி ஆஸ்திரேலியா 92 ரன்களை எட்டியபோது பிரிந்தது. வாட்சன் 23 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த மேக்ஸ்வெல் டக் அவுட்டானார். இதையடுத்து கேமரூன் ஒயிட் களமிறங்க, 12.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. ஆரோன் பிஞ்ச் 30 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 44, ஒயிட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் கேமரூன் பாய்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது போட்டி சிட்னியில் நாளை நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x