Published : 10 Jul 2019 08:14 AM
Last Updated : 10 Jul 2019 08:14 AM
மான்செஸ்டரில் நேற்று நடந்த இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மழையால் தடைபட்டதால், மீதமுள்ள ஆட்டம் இன்று நடத்தப்படுகிறது
46.1 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள 3.5 ஓவர்கள் இன்று வீசப்பட்டு முடிக்கப்படும். அதன்பின் இந்திய அணி பேட்டிங் தொடரும்.
களத்தில் ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும், டாம் லாதம் 3 ரன்களுடனும் உள்ளனர்.
ஒருவேளை இன்று மழை பெய்யாமல் இருந்தால் இந்திய அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக இருக்கும். மழை இல்லாத பட்சத்தில் வழக்கம்போல் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்கிவிடும்.
ஒருவேளை காலை நேரத்தில் மீண்டும் மழை பெய்தாலோ, அல்லது ஆடுகளம் ஈரமாக இருந்தாலோ ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படும். இந்த தாமதத்தால் ஓவர்கள் குறைக்கப்படலாம். அல்லது 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்படலாம்.
ஒருவேளை 20 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படும்போது அதிலும் மழை குறுக்கிட்டு போட்டி நடத்தமுடியாமல் போனால், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். ஏனென்றால், லீக் சுற்றின் முடிவில் அதிக வெற்றிகள், புள்ளிகள் அடிப்படையில் அந்த வாய்ப்பு இந்திய அணி்க்கு கிடைக்கும்.
டக்வொர்த் லூயிஸ்விதி யாருக்கு சாதகம்
ஒருவேளை இன்றும் மழைபெய்து ஆட்டத்தில் தடை ஏற்பட்டு டக்வொர்த் லூயிஸ் விதி பயன்படுத்தப்பட்டால் அது நியூஸிலாாந்து அணிக்குத்தான் சாதகமாக அமைகிறது. ஏனென்றால், 40 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 150 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை வைத்திருப்பதால், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணிக்கு இலக்கு 46 ஓவர்களில் 236 ஆக மாற்றப்படும். ஒருவேளை 20 ஓவர்களாக போட்டி நடத்தப்படும் சூழலாக இருந்தால் 20 ஓவர்களில் 148 ரன்கள் என்று இலக்கு நிர்ணயிக்கப்படும்.
ஆனால், நேற்று ஓல்டுடிபோர்டில் மழை பெய்திருப்பதால், ஆடுகளம் மூடிவைக்கப்பட்டு இருக்கும். அந்த ஈரப்பதம், காற்றில் நிலவும் குளிர்ந்த சூழல், ஈரப்பதம் ஆகியவை நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். காலைநேரத்தில் மழையின்றி நன்கு வெயில் அடிக்கும்பட்சத்தில் மட்டுமே இந்திய அணிக்கு அது சாதகமாக இருக்கும். வெயில்அடித்தாலும், குறைந்தபட்சம் 10 ஓவர்கள் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மாறி, பந்துகள் நன்கு ஸ்விங்ஆகி, பவுன்ஸ் ஆகும்.
குறிப்பாக டிரன்ட் போல்ட், பெர்குஷன் பந்துகளை சமாளித்து ஆடுவது கடினமாக இருக்கும்.
இந்திய பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி விக்கெட்டுகளை தக்கவைத்து விளையாட வேண்டியது அவசியம்.
மோசமான பேட்டிங்
ஓல்டுடிராபோர்டு மைதானத்தில் இதுவரை நடந்த ஆட்டங்கள் அனைத்திலும் முதலில் பேட் செய்த அணியே வென்றுள்ளன எனும் நம்பிக்கையில் நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் டாஸ் வென்று பேட்டிங் செய்தார்.
ஆனால், நியூஸிலாந்து அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. கேப்டன் வில்லியம்ஸ் எந்த அணியின் பந்துவீச்சையும் நன்கு சமாளித்து ஆடக்கூடியவர், ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யக்கூடியவர் அவரின் ஆட்டத்திலும் நேற்று மந்தம் தென்பட்டது. அரையிறுதி போட்டியில் ஆடுகிறோம் என்ற நினைப்பில்லாமல், ரன் சேர்்க்க வேண்டும் என்ற முனைப்பில்லாமல் நியூஸிலாந்து வீரர்கள் தொடக்கத்தில் விளையாடினார்கள்.
இந்திய அணியிலும் பும்ரா, புவனேஷ்வர் குமார் பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருந்தது. நியூஸிலாந்து வீரர்களுக்கு தொடக்கத்தில் இருந்தே பெரும்நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். ஆனால், ஹர்திக் பாண்டியா பந்துவீ்ச்சில் இன்னும் லைன்-லென்த் துல்லியமாக அமையாததால், நேற்று அதிக விளாசப்பட்டது. அதேபோலத்தான சாஹல் ஓவரும் எதிர்பார்த்த அளவுக்கு பலன் அளிக்கவில்லை. ஜடேஜா தனக்குரிய பணியை சிறப்பாகச் செய்தார்.
கப்தில் வீண்
டாஸ்வென்று பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி பேட்டிங் , இந்திய வீரர்கள் பும்ரா, புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்க ஆட்டக்காரர்கள் நிகோலஸ், கப்தில் இருவரும் திணறினார்கள். பும்ரா, புவனேஷ் இருவரின் முதல் ஓவரும் மெய்டன்களாக அமைய முதல் ரன்னை 3-வது ஓவரில்தான் நியூஸிலாந்து எடுத்தது.
இ்ந்த தொடர் முழுவதும் சொதப்பிவந்த கப்தில் இந்த ஆட்டத்திலும் பும்ராவின் பாம்புபோன்று வளைந்து செல்லும் பவுன்ஸருக்கு இரையாகி, கோலியிடம் கேட்ச் கொடுத்து 3 ரன்னில் வெளிேயறினார்.
அடுத்துவந்த வில்லியம்ஸ், நிகோலஸுடன் சேர்ந்தார். இருவரும் ஆமைவேகத்தில் விளையாடியதால், ஸ்கோர் உயரவில்லை. 10 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். உலகக்கோப்பை பவர்ப்ளேயில் சேர்க்கப்பட்ட குறைவான ஸ்கோர் இதுதான்.
நிகோலஸ் 28 ரன்கள் சேர்த்திருந்தபோது ஜடேஜா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்துவந்த ராஸ் ெடய்லர், வில்லியம்ஸனுடன் சேர்ந்தார். இருவரும் விக்கெட் சரிவைத் தடுக்கும் வகையில் விளையாடினார்கள்.
பும்ரா, புவனேஷ்வர் ஓவரில் அடித்துவிளையாடாமல் பாண்டியா, சாஹல் ஓவரை ஸ்கோர் செய்ய பயன்படுத்திக்கொண்டனர். 15-வது ஓவரில் பவுண்டரி அடித்த நியூஸிலாந்து அணி ஏறக்குறைய 83 பந்துகளுக்கு பின் மீண்டும் ஒரு பவுண்டரி அடித்தது
நிதானமாக ஆடிய வி்ல்லியம்ஸன் 79 பந்துகளில் அரைசதம் அடித்து சிறிதுநேரத்தில் 67 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தனர். அடுத்து களமிறங்கிய நீஷம் 12 ரன்னில் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடும் கிராண்ட்ஹோம் வந்தவேகத்தில் 2 பவுண்டரிகளை அடித்து, 16 ரன்னில் புவனேஷ்வர் குமார் ஓவரில் வெளியேறினார். ஒருபுறம் பொறுமையாக ஆடிய டெய்லர் 73 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
டெய்லர் 63ரன்னிலும், லாதம் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இந்தயத் தரப்பில் பும்ரா, புவனேஷ்வர், ஜடேஜா, சாஹல், பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மழை வருமா?
இன்றைய ஆட்டத்திலும் மழை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வானம் காலையில் இருந்தே மேகமூட்டமாக இருக்கும், காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்கினாலும் காலை நேரத்தில் மழை பெய்வதற்கு 35 முதல் 47 சதவீதம் வரை வாய்ப்பு இருப்பதாகவும் படிப்படியாக அதிகரித்து 51 சதவீதம் வரை உயரும் என வானிலைமையம் தெரிவித்துள்ளது. அதன்பின் நண்பகலில் மழை குறையத்தொடங்கிவடும் எனத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் மீண்டும் மாலை 4 மணி முதல் மழை பெய்ய 40 முதல் 50 சதவீதம் வாய்ப்பு இருக்கும், லேசான சாரல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 14 டிகிரியாகவும் அதிகபட்சம் 21 டிகிரியாகவும் இருக்கும்.
இன்றைய சூழலில் 20 ஓவர்கள் போட்டியாகவே நடத்தப்பட அதிகபட்சவாய்ப்புகள் இருக்கின்றன. அதிலும் மழை குறுக்கிட்டாலும் கவலையில்லை இந்திய அணிதான் இறுதிப்போட்டிக்குச்செல்லும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT