Published : 12 Nov 2014 02:01 PM
Last Updated : 12 Nov 2014 02:01 PM
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதல் 5 இடங்களில் விராட் கோலி, ஷிகர் தவன் ஆகிய 2 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
விராட் கோலி 3-ஆம் இடத்தில் நிலைத்திருக்க, ஷிகர் தவன் 4 இடங்கள் முன்னேறி 5-ஆம் இடத்திற்கு முன்னேறினார்.
காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்காத தோனி ஒரு இடம் பின்னடைந்து 7-வது இடத்தில் உள்ளார்.
ஷிகர் தவன் இலங்கைக்கு எதிரான நடப்பு ஒருநாள் தொடரில் 283 ரன்களை 94.33 என்ற சராசரியின் அடிப்படையில் எடுத்து அபாரமாக விளையாடி வருவதால் 4 இடங்கள் முன்னேறியுள்ளார்.
பேட்டிங்கில் முதல் 2 இடங்களை தென் ஆப்பிரிக்க வீரர்களான டிவிலியர்ஸ் மற்றும் ஆம்லா ஆகியோர் தக்க வைத்துள்ளனர்.
பந்து வீச்சு தரவரிசையில் ஒரு இடம் முன்னேறியுள்ள புவனேஷ் குமார், தற்போது 6-வது இடத்தை பாகிஸ்தான் வீரர் மொகமது ஹபீஸுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இன்னமும் சயீத் அஜ்மலே முன்னிலை வகிக்கும் ஒருநாள் பவுலிங் தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா 2 இடங்கள் பின்னடைவு கண்டு 8-வது இடம் வகிக்கிறார்.
ஒருநாள் கிரிக்கெட் அணிகள் தரவரிசையில் இந்தியா தற்போது முதலிடம் வகிக்கிறது. அடுத்த 2 போட்டிகளையும் இந்தியா வென்றால் 117 தரவரிசைப் புள்ளிகளுடன் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும். ஆனால் இலங்கை மீதமுள்ள 2 போட்டிகளில் வென்றால் இந்தியா 114 தரவரிசைப் புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கும்.
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நாளை ஒருநாள் போட்டித் தொடர் துவங்குகிறது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 3-2 என்று வென்றால் இந்தியா 114 புள்ளிகளை பெற்றிருக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியா 115 தரவரிசைப் புள்ளிகளுடன் முதலிடம் செல்லும்.
அதே போல் தென் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியாவை 3-2 என்று வீழ்த்தினால் தென் ஆப்பிரிக்கா 116 தரவரிசைப் புள்ளிகளைப் பெறும்.
ஆகவே இலங்கைக்கு எதிராக மீதமுள்ள 2 ஒருநாள் போட்டிகளையும் இந்தியா வென்று விட்டால் 117 தரவரிசைப்புள்ளிகளைக் கடந்து ஆஸ்திரேலியாவோ, தென் ஆப்பிரிக்காவோ முதலிடம் பிடிக்க கடுமையாகப் போராட வேண்டி வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT