Published : 07 Jul 2019 11:39 AM
Last Updated : 07 Jul 2019 11:39 AM
டூபிளசிஸின் அபாரமான சதம், ராபடாவின் கடைசிநேர பந்துவீச்சு ஆகியவற்றால் மான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பைப் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா.
ஒட்டுமொத்தத்தில் 40 ஓவர்களுக்குப்பின் ஆட்டத்தில் பல திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் அரங்கேறின. யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்த்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக போட்டி அமைந்தது.
இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி வெற்றியுடன் உலகக் கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறியது. 9 போட்டிகளில் 3 வெற்றிகள், 5 தோல்விகள் என மொத்தம் 7 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் நிறைவுற்றது.
எப்படியாகினும் கேப்டன் டூபிளெசிஸ் கூறியதைப் போன்று புன்னகையுடன்தான் தென்ஆப்பிரிக்க அணி வெளியேறியது. ஏனென்றால், கடந்த 1992-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டிக்கு பின், ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையில் வீழத்த முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி திணறி வந்தது. ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்குபின் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் வீரர்கள் வெளியேறினர்.
இந்த போட்டியுடன் ஒருநாள் போட்டியில் இருந்து இம்ரான் தாஹிரும், டூமினியும் ஓய்வு பெற்றதால், இந்த வெற்றி அவர்களுக்கு மறக்க முடியாததாக அமைந்தது.
தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிராக பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடை பெற்ற வார்னர். மீண்டும் நேற்று அந்த அணிக்கு எதிராக ஒரு ஆண்டுக்குப்பின் விளையாடி சதம் அடித்தார். உலகக் கோப்பைப் போட்டியில் வார்னருக்கு 3-வது சதமாக அமைந்தது.
இந்த போட்டியில் காயமடைந்த, ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டானிஸ், உஸ்மான் கவஜா தொடரில் இருந்து ஏறக்குறைய நீக்கப்படும் நிலையில் இருக்கிறார்கள்.இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாகத்தான் இருக்கும்.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் சேர்த்தது. 326 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 315 ரன்களுக்கு ஆட்டமிழந்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த தோல்வி மூலம் புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளைப் பெற்று ஆஸ்திரேலிய அணி 2-வது இடத்தைப் பிடித்தது. இதனால் வரும் வியாழக்கிழமை நடக்கும் 2-வது அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி மோத உள்ளது.
லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை சிதைத்து வெற்றி பெற ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் 2-வது முறையாகச் சந்திக்கிறது.
ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை டேவிட் வார்னரும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரேயும்தான் ஆட்டத்தின் மொத்தத்தையும் தாங்கினார்கள் என்று கூறலாம். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை விரைவாக இழந்துவிட்ட நிலையில், இருவரும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளித்து ஸ்கோர் செய்தனர். அதிலும் வார்னர் ஆட்டமிழந்தபின், அலெக்ஸ் காரேயும் முடிந்த அளவு போராடிப் பார்த்து வெளியேறினார்.
தென் ஆப்பிரி்க்க அணியைப் பொருத்தவரையில் கடைசி ஆட்டமாக இருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் விளையாடியதற்கு பாராட்டியே தீர வேண்டும்.
குயின்டன் டீக் நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார், டூபிளெசிஸ்க்கு ஆதரவாக வேண் டெர் டூசன் ஆடிய விதம் அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
கேப்டனுக்குரிய வகையில் சிறப்பாக பேட் செய்த டூபிளெசிஸ் இந்த உலகக் கோப்பையில் 2-வது சதத்தை பதிவு செய்தார்.
326 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. ஆரோன் பிஞ்ச்(3), ஸ்மித் (7), ஸ்டானிஷ்(22), மேக்ஸ்வெல்(19) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், 119 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
5-வது விக்கெட்டுக்கு அலெக்ஸ்காரே, வார்னர் ஜோடி அணியைச் சரிவிலி இருந்து மீட்டனர். வார்னர் 58 பந்துகளில் அரைசதத்தையும், 100 பந்துகளில் சதம் அடித்து 122 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக பேட் செய்த காரே 47 பந்துகளில் அரைசதம் அடித்தார்
வார்னர் ஆட்டமிழந்தபின் கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 99 ரன்கள் தேவைப்பட்டது. காரே, கம்மின்ஸ் களத்தில் இருந்தனர். இம்ரான் தாஹிர், சாம்ஷி வீசிய ஓவர்களில் காரே சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாச ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. கம்மின்ஸ் 9 ரன்னில் பெகுல்குவாயே ஓவரில் ஆட்டமிழந்தார்.
கடைசி 5 ஓவர்களில் வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்டது. மோரிஸ் வீசிய 46-வது ஓவரில் காரே85 ரன்னில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. காயத்தால் ரிட்டயர்ஹர்ட் முறையில் ஓய்வில் இருந்த கவாஜா மீண்டு்ம் விளையாட களமிறங்கி, ஸடார்க்குடன் சேர்ந்தார்.
மோரிஸ் வீசிய 48-வது ஓவரில் ஸ்டார்க் அதிரடியாக சிக்ஸரும், பவுண்டரிகளையும் பறக்கவிட ஆட்டத்தில் இன்னும் விறுவிறுப்பு கூடியது. கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 25 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
ரபாடா வீசிய 49-வது ஓவரில் கவாஜா(18) ரன்னில் போல்டாகினார், அதே ஓவரின் கடைசிப்பந்தில் ஸ்டார்க் 16 ரன்னில் ஆட்டமிழந்ததால் ஆட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வந்தது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. லயான், பெஹரன்டார்ப் களத்தில் இருந்தனர். பெகுல்குவாயே வீசிய ஓவரில் 3 ரன்னில் லயான் ஆட்டமிழக்க 10 ரன்னில் ஆஸ்திரேலிய அணி தோல்விஅடைந்தது.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், பெகுல்குவாயே, பிரிட்டோரியஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முன்னதாக, தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களி்ல் 6 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் குவித்தது. டீ காக், மார்க்ரம் நல்ல தொடக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தநிலையில் மார்க்ரம் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். நீண்ட இடைவேளைக்குப்பின் டீகாக் அரைசதம் அடித்து 52 ரன்னில் வெளியேறினார்.
டூபிளெசிஸ், வேண் டர் டூசைன் கூட்டணி 3-வது விக்கெட்டுக்கு நிலைத்து ஆடி ரன்களைச் சேர்த்தனர். இருவரும் 151 ரன்கள் சேர்த்துப்பிரிந்தனர். டூபிளெசிஸ் சதம் அடித்து 100 ரன்னில் ஆட்டமிழந்தார் வேண் டர் டூசை 5 ரன்னில் சதத்தை தவறவிட்டு 95 ரன்னில் வெளியேறினார். டுமினி 14 ரன்னிலும், பிரிட்டோரியஸ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டார்க், லயான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT