Published : 01 Jul 2019 06:06 PM
Last Updated : 01 Jul 2019 06:06 PM
எட்ஜ்பாஸ்டனில் நாளை நடக்கும் உலகக்கோப்பையின் முக்கியமான லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.
2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் வங்கதேசம், இந்திய அணிகள் மோதிய காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்குச் சாதகமாக இரு தீர்ப்புகளை வழங்கியதால்தான், தோல்வி அடைந்தோம் என வங்கதேசம் தொடர்ந்து புகார் கூறி ஆறாத ரணத்துடன் இருக்கிறது.
ரோஹித் சர்மா 90 ரன்கள் இருந்தபோது, ருபெல் ஹசைன் வீசிய பந்துக்கு நடுவர் நோபால் வழங்கியது, வங்கதேசம் பேட்ஸ்மேன் மகமதுல்லா அடித்த பந்தை ஷிகர் தவண் பவுண்டரி லைனை மிதித்துப் பிடித்த கேட்சை அவுட் என அறிவித்ததை வங்கதேசம் அணி கடுமையாக விமர்சித்தது. 2015-ம் ஆண்டில் மெல்போர்னில் நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணியிடம் 109 ரன்னில் தோல்வி அடைந்தது வங்கதேசம் அணி.
இந்த இரு சம்பவங்களுக்குப் பதிலடியாக நாளை நடக்கும் உலகக்கோப்பை போட்டியில் வங்கதேசம் அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கலாம். மேலும் ஆசியக்கோப்பை தோல்வி, நிடாஹஸ் கோப்பை தோல்வி என இந்திய அணியிடம் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துள்ளது வங்கதேசம்.
இதுவரை உலகக்கோப்பை போட்டியில் இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இதில் 2007-ம் ஆண்டு போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த ஆட்டத்தில் மட்டுமே வங்கதேசம் அணி 5 விக்கெட்டில் இந்திய அணியை வீழ்த்தியுள்ளது.
கடந்த 2011, மற்றும் 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிதான் வென்றுள்ளது. வங்கதேசத்தோடு ஒப்பிடும்போது பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என மூன்று துறைகளிலும் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.
ஆனால், வங்கதேச அணி எந்நேரமும் மிகப்பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியது. லீக் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 330 ரன்கள் சேர்த்து 21 ரன்களில் வென்றது வங்கதேசம். மேற்கிந்தியத் தீவுகள் அணி 322 ரன்கள் சேர்த்தபோதிலும் அதை எளிதாக 42 ஓவர்களில் சேஸ் செய்து அதிர்ச்சி அளித்தது.
அதுமட்டுமல்லாமல் நியூஸிலாந்து அணிக்கும் பந்துவீச்சில் வங்கதேச அணி கடும் நெருக்கடி அளித்ததால் 49 ஓவரில்தான் நியூஸிலாந்து அணி வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 300 ரன்களுக்கு மேல் அடித்தது வங்கதேசம்.
ஆக இந்த உலகக்கோப்பை போட்டியில் வங்கதேசம் அணி பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் எதிரணிக்கும் கடும் சவால் விடுத்து, தங்களுடன் மோதும்போது கவனக்குறைவின்றி அணுக வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
வங்கதேசம் அணி இதுவரை 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வி 7 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அணிக்கு எதிரான இந்த ஆட்டத்திலும், அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் வென்றால் அரையிறுதிக்கு வாய்ப்பு உண்டு.
ஆனால், இங்கிலாந்து அணி, நியூஸிலாந்து அணியிடம் தோற்றால் மட்டுமே வங்கதேசம் அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்பு உண்டு.
இந்திய அணியைப் பொறுத்தவரை 5 வெற்றிகள் உள்ளிட்ட 11 புள்ளிகளுடன் ஏறக்குறையை அரையிறுதியை உறுதி செய்துவிட்டது. ஆனால், இந்த ஆட்டத்தில் கிடைக்கும் வெற்றி இந்திய அணியை பாதுகாப்பான இடத்தில் வைக்கும்.
இந்திய அணியைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் தங்களின் ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து வருகின்றனர். இதுவரை ரோஹித் சர்மா 3 சதங்களுடன் 440 ரன்கள் சேர்த்து அதிக ரன் சேர்த்தவர்கள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 5 அரை சதங்களுடன் 372 ரன்கள் குவித்து 7-வது இடத்தில் உள்ளார். இருவரின் பேட்டிங்கும் வங்கதேசத்துக்குப் பெரிய இடையூறாக அமையும்.
ராகுல் இங்கிலாந்துக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கவனக் குறைவாக ஷாட்டை ஆடி விக்கெட்டை இழந்தார். ஆதலால், இந்த ஆட்டத்தில் கவனத்துடன் ஆடுவார் என நம்பலாம். 4-வது இடத்துக்குக் கொண்டு வரப்பட்ட ரிஷப் பந்த் கடந்த போட்டியில் 32 ரன்கள் மட்டுமே சேர்த்தாலும், அவரின் ஷாட்களில் நேர்த்தி தெரிந்தது. இன்னும் பொறுமையாக பேட் செய்தால், 4-வது வரிசையை பலப்படுத்தமுடியும்.
விஜய் சங்கர் காயத்தால் விலகியது இந்திய அணிக்குப் பின்னடைவுதான் என்றாலும், மயங்க் அகர்வால் வருகை தொடக்க வரிசைக்குப் பலம் சேர்க்கும். ராகுல் 4-வது இடத்துக்கும் மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களமிறங்கவும் வாய்ப்பு உண்டு.
கடந்த 3 போட்டிகளிலும் தோனியின் மந்தமான பேட்டிங் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி 5 ஓவர்களில் தோனியும், ஜாதவ்வும் பேட் செய்த விதம் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் தோனி தனது இயல்பான ஆட்டத்துக்குத் திரும்புவார் என நம்பலாம்.
கேதார் ஜாதவ்வுக்குப் பதிலாக இன்றைய ஆட்டத்தில் ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. பந்துவீச்சையும், பேட்டிங்கையும் வலுப்படுத்தும் வகையில், ரவிந்திர ஜடேஜா வரலாம். தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட புவனேஷ்வர் நாளைய ஆட்டத்தில் களமிறங்கலாம் என்பதால், கடைசி வரிசையில் கூடுதலாக ஒருபேட்ஸ்மேன் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
அதேசமயம், குல்தீப் யாதவ், சாஹல் இருவரில் ஒருவர் நாளை அமரவைக்கப்படுவார் எனத் தெரிகிறது. மற்ற வகையில் பந்துவீச்சில் பும்ரா, ஷமி சிறப்பாகச் செயல்படுவதால், நாளை ஷமி அணியில் நீடிப்பார்.
வங்தேச அணியில் மிகவும் அச்சறுத்தலாக இருப்பவர்களில் முக்கியமானவர் ஆல்ரவுண்டர் சகிப் அல் ஹசன். இதுவரை 476 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிராகவும் எப்போதும் நன்றாக பேட் செய்யக்கூடியவர், அனுபவம் உள்ளவர் என்பதால், இவரை வீழ்த்துவதற்கு இந்திய அணி அதிகமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவர் தவிர அதிரடி வீரர்கள் லிட்டன் தாஸ், தமிம் இக்பால், சவுமியா சர்க்கர் ஆகியோர் கவனிக்கப்பட வேண்டியவர்கள். பும்ரா, ஷமியின் வேகத்தில் தொடக்கவரிசை விரைவாக வீழ்ந்துவிட்டாலும், முஸ்தபிசுர் ரஹிம், முஷ்பிகுர் ரஹிம் மகமதுல்லா, மெஹதி ஹசன் ஆகியோர் நடுவரிசையை பலப்படுத்த இருக்கிறார்கள். இவர்களை வீழ்த்துவதும் இந்திய அணிக்குச் சவாலாகவே இருக்கும்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய அதை எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில்தான் போட்டி நடக்கிறது. இந்த ஆட்டத்தில் லெக்சைடில் தூரம் குறைவாக இருந்ததால்தான் இங்கிலாந்து வீரர்கள் அதிகமான ரன்கள் அடித்தனர் என்று கோலி புகார் அளித்தார். ஆதலால், நாளைய ஆட்டத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் லெக் திசையில் கவனம் செலுத்தாமல், ஆஃப் சைடில் அதிகமான கவனம் செலுத்துவது அவசியம்.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்குத் தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT