Published : 13 Jul 2019 07:01 PM
Last Updated : 13 Jul 2019 07:01 PM
லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறும் 12-வது ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான இறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியும், கடந்த ஆண்டு 2-ம் இடம்பிடித்த நியூஸிலாந்து அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன.
உலகத்துக்கே கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்த இங்கிலாந்து ஐசிசி உலகக் கோப்பை தொடங்கிய 1975-ம் ஆண்டில் இருந்து இதுவரை ஒருமுறை கூட பட்டம் வென்றது இல்லை.
3 முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்துக்கு இதுவரை உலகக்கோப்பை என்பது கனவுதான். கடந்த 27- ஆண்டுகளுக்குப்பின் இறுதிப்போட்டிக்கு இப்போது இங்கிலாந்து மீண்டும் முன்னேறியுள்ள நிலையில், கோப்பையை வெல்வதற்கான அனைத்து தகுதிகளுடன் இருக்கிறது.
இங்கிலாந்து அணியின் 44 ஆண்டுகால தவத்துக்கும், கிரிக்கெட்டை தாய்வீடாகக் கொண்ட அணி, இன்னும் கோப்பையை வெல்ல முடியவில்லையே என்ற அவப்பெயருக்கு நாளை முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பலாம்.
நியூஸி,யும்தான் ...
இங்கிலாந்தைப் போலத்தான் நியூஸிலாந்து அணியும், கடந்த உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பு, நியூஸிலாந்தின் அதிகபட்ச உழைப்பு என்பது அரையிறுதிவரை மட்டுமே இருந்தது. அதன்பின் நியூஸிலாந்துக்கு கதவு சாத்தப்படும். ஆனால், கடந்த உலகக்கோப்பையோடு, தொடர்ந்து 2-வது முறையாக நியூஸிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. ஏறக்குறைய 44 ஆண்டுகளில் 2-வது முறையாக கோப்பைக்காக போராட வந்துள்ளது நியூஸி.
உலகக்கோப்பையை வெல்லாத இரு அணிகள் 2-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்துக்காக கோதாவில் இறங்குகின்றன. இதற்கு முன் கடந்த 1992-ம் ஆண்டு இங்கிலாந்தும், பாகிஸ்தானும் கோப்பையை வெல்லாத அணிகள் கோதாவில் இறங்கி இருந்தன என்பது நினைவு கூரத்தக்கது.
அரைநூற்றாண்டாக இல்லை
இங்கிலாந்து அணியைப் பற்றி சொல்லக்கூடிய சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், உலகத்தை கட்டி ஆண்ட இங்கிலாந்து அணி கடந்த 1966-ம்ஆண்டு பிபா கால்பந்து உலகக்கோப்பைதான் கடைசியாக அந்த அணி சர்வதேச அளவில் வென்ற கோப்பையாகும்.
அந்த அணிக்கு ஹேரி கேன், கேரி லினேகர் இருவரும் கால்பந்து கோப்பையை பெற்றுக்கொடுத்தார்கள். அதன்பின் இங்கிலாந்து அணி கிரிக்கெட், கால்பந்து, எதுலும் சரிவதேச அளவில் கடந்த 50 ஆண்டுகளாக கோப்பையை வெல்லவில்லை.
ஆனால் இந்த முறை இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வலுவாகத் தயாராகி இருக்கிறது. பேட்டிங் பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்துவிதமான அம்சங்களிலும் ஆகச்சிறந்த அணியாக பட்டைத் தீட்டப்பட்டுள்ளது.
இதுவரை... நடந்தது
இதுவரை உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூஸிலாந்து அணியும் 9 முறை மோதியுள்ளன.அ தில் நியூஸிலாந்து அணி 5 முறையும், இங்கிலாந்து அணி 4 முறையும் வென்றுள்ளன.
ஒருநாள் போட்டிகள் என்று எடுத்துக்கொண்டால், 86 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் நியூஸிலாந்து அணி 43 வெற்றிகளும், இங்கிலாந்து அணி 41 வெற்றிகளும் பெற்றுள்ளன.
இங்கிலாந்து மண்ணில் இரு அணிகளும் இதுவரை 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இங்கிலாந்து அணி 17 வெற்றிகளையும், நியூஸிலாந்து அணி 12 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
ஆக கடந்த கால வரலாற்றை ஆய்ந்துபார்த்தால், இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பது தெரிய வருகிறது.
டாஸ் முக்கியப் பங்கு
நாளை ஆட்டத்தில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும். ஏனென்றால், லாட்ஸ் ஆடுகளம் என்பது வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு இருதரப்புக்கும் ஏற்றார்போல் நடுநிலையுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ அவர்கள் கை ஓங்கும். பேட்ஸ்மேன்களுக்கு பந்துகள் நன்றாக பேட்டை நோக்கி வரும் என்பதால் அடித்து ஆடுவதும் எளிது. ஆனால் அதற்கு ஏற்றார்போல் பந்துவீச்சாளர்கள் துல்லியதமாக வீச வேண்டும்.
பொதுவாக இதுபோன்ற அதிக நெருக்கடி, அழுத்தம் கொண்ட போட்டிகளில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங் செய்வதுதான் சிறந்தது. முதலில் பேட் செய்து பெரிய இலக்கை வைத்துவிட்டு பந்துவீச்சில் கட்டுப்படுத்திவிடலாம் என்ற சிந்தனையில்தான் இறங்குவார்கள்.
சேஸிங் செய்யும் அணிக்கு பைனல் போட்டி, இலக்கை துரத்த வேண்டும், விக்கெட் விழாமல் பேட் செய்ய வேண்டும் என்ற பல அழுத்தங்களுக்கு மத்தியில் பேட் செய்வார்கள். ஆதலால், டாஸ் வென்றால் பேட்டிங் செய்வது நல்லது.
சேஸிங்கில் பலவீனம்
இங்கிலாந்து அணி லீக் ஆட்டங்கள், அரையிறுதி ஆகியவற்றில் டாஸ் வெல்லும்போது பெரும்பாலும் பேட்டிங் செய்து எதிரணிக்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்து, பந்துவீச்சில் மடக்கி இருக்கிறது. சேஸிங்கில் அரையிறுதி தவிர்த்து பாகிஸ்தானுடன் சேஸிங்கில் தோற்றது. ஆதலால், சேஸிங் செய்தால் நாளை இங்கிலாந்து அணிக்கு பெரும் சிக்கலாகிவிடும்.
இங்கிலாந்து அணியில் முதல் 5 வீரர்கள் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார்கள். ஜேஸன் ராய்(426), பேர்ஸ்டோ(496), ஜோ ரூட்(549), பட்லர், மோர்கன் என வலிமையான வரிசை இருக்கிறது. இதுதவிர பென் ஸ்டோக்ஸ், வோக்ஸ், மொயின் அலி என கடைசிவரிசை வரை எதிரணிக்கு தொல்லை தரக்கூடிய பேட்டிங் இருப்பது நியூஸிலாந்து அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
குறிப்பாக பேர்ஸ்டோ, ஜேஸன் ராயின் அதிரடி ஆட்டம் நியூஸிலாந்து அணிக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தும். இந்தியா, ஆஸ்திரேலியாவில் இருந்த டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்களை வீழ்த்தியபின் எவ்வாறு அணி நிலைகுலைந்ததோ அதுபோல் நியூஸிலாந்து அணியும் டாப் ஆர்டர் மீது கவனம் செலுத்தினால் இங்கிலாந்துக்கு சரிவு நிச்சயம்.
நாளை இறுதிஆட்டம் என்பதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கவனக்குறைவாக விளையாட மாட்டார்கள் என நம்பலாம். பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் 19 விக்கெட்டுகள், வோக்ஸ் 13 விக்கெட்டுகள், ரஷித் 11 விக்கெட்டுகள் என விக்கெட் வீழ்த்தும் திறமை கொண்ட பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதில் மார் உட் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டி வருகிறார்.
ஐபிஎல் போட்டியில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த மார்க் உட் உலகக்கோப்பைப் போட்டியில் பந்துவீச்சில் வெளுத்து வாங்குகிறார். நியூஸிலாந்து அணியின் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களை சுக்குநூறாக உடைத்து எறிய ஆர்ச்சர், மார்க் உட் பந்துவீச்சு பெரும் பங்குவகிக்கும்.
எப்போதும் முடியாது
மொத்தத்தில் பந்துவீச்சு, பேட்டிங் இரு துறைகளிலும் வலுவான அணியாகவே இங்கிலாந்து வலம் வருகிறது, கோப்பையை வெல்வதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கின்றன.
பொன்னான வாய்ப்பு இந்த முறை இங்கிலாந்து அணிக்கு கிடைத்திருக்கிறது, இதை தவிரவிட்டால் அடுத்து ஒருபோதும் கோப்பையை வெல்ல முடியாது. இதுபோன்ற தரமான அணியையும் உருவாக்க முடியாது.
ஆனால், நெருக்கடியான நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணிபோல் சோக்கர்ஸ் போன்று ஆடுவார்கள் எனும்குற்றச்சாட்டு இருக்கிறது. நாளை எவ்வாறு நிவர்த்தி செய்வார்கள் எனப் பார்க்கலாம்.
அதிர்ஷ்டம்
நியூஸிலாந்து அணியைப் பொருத்தவரை "லாட்டரியில் பம்பர் பரிசு " கிடைத்ததுபோன்று இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது. லீக் சுற்றில் ரன்ரேட்டில் தப்பிப் பிழைத்து அரையிறுதிக்குள் நுழைந்த நியூஸிலாந்து நுழைந்தது. அரையிறுதியில் மழை எனும் காரணியால் வலிமையான இந்திய அணியை வீழ்த்தியது. மழையில்லாமல், போட்டி மறுநாளுக்கு ஒத்திவைக்காமல் இருந்திருந்தால் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும்.
வில்லியம்ஸன், டெய்லர்
நியூஸிலாந்து அணியின் பலமே பந்துவீச்சும், பீல்டிங் மட்டும்தான். பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்ஸன்(548ரன்கள்), ராஸ் டெய்லர்(335) ஆகியரை மட்டுமே நம்பி இருக்கிறது.
மற்ற வீரர்கான கப்தில், முன்ரோ இருவரும் கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் செய்த சாதனையச்சொல்லியே அணியில் இன்னும் இருக்கிறார்கள். இந்த தொடரில் கப்தில், முன்ரோ இருவரும் ஒருபோட்டியில் கூட நல்லவிதமாக ஸ்கோர் செய்யவில்லை.
நடுவரிசையில் டாம் லாதம், நீஷம், கோலின் டி கிராண்ட்ஹோம், சான்ட்னர் ஆகியோரின் பேட்டிங் உதவுமேத் தவிர விக்கெட்டை நிலைப்படுத்தாது. ஆகவே பேட்டிங்கைப் பொருத்தவரை நியூஸிலாந்து அணி இங்கிலாந்து அணியுடன் ஒப்பிடும்போது வலு குறைவுதான்.
பந்துவீச்சில் டிரன்ட் போல்ட், நீஷம், ஹென்றி, பெர்குஷன், கிராண்ட்ஹோம் ஆகியோர் இருப்பது அணிக்கு பெரிய பலமாகும். முதலில் பந்துவீசினால் லண்டனில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையையும், ஆடுகளத்தின் தன்மையையும் இவர்கள் சாதகமக பயன்படுத்தக்கூடும். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு இவர்களின் பந்துவீச்சு நிச்சயம் சிம்ம சொப்பனமாக இருக்கும்.
சுழற்பந்துவீச்சைப் பொருத்தவரை இரு அணிகளுமே வலிமையான அணி அல்ல. இங்கிலாந்து அணியில் அதில் ரசித்தும், நியூஸிலாந்து அணி சான்ட்னரை மட்டுமே நம்பி இருக்கின்றன.
ஆதலால், நியூஸிஸாலந்து அணி பந்துவீச்சை அதிகம் நம்பியே இறுதிப்போட்டிக்குள் பயணிக்கிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
பரிசுத்தொகை
உலகக் கோப்பைப்போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை ஒரு கோடி அமெரிக்க டாலராக (ரூ. 70,12,82,000)அதிகரிக்கப்பட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 40 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ. 28,08,34,000.) பரிசாக வழங்கப்படும். 2-வதாக இடம் பிடிக்கும் அணிக்கு 20 லட்சம் டாலர்களும்(ரூ. 14,02,56,400) வழங்கப்படும். அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர்கள்(ரூ. 5,61,02,560) வழங்கப்படும்.
லீக் போட்டிகளில்வெற்றி பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் அணிகளுக்கு ஒவ்வொன்றுக்கும் 40 ஆயிரம் டாலர்கள்(ரூ. 28,05,128) பரிசு வழங்கப்படுகிறது. லீக் சுற்றை கடந்துவிட்ட அணிகளுக்கு தலா ஒரு லட்சம் டாலர்கள்(ரூ. 70,12,820) பரிசு வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT