Published : 05 Jul 2019 06:47 PM
Last Updated : 05 Jul 2019 06:47 PM
லீட்ஸில் நாளை நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 8 ஆண்டுகளுக்குப்பின் இலங்கை அணி எதிர்கொள்கிறது.
இலங்கை அணி உலகக்கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், ஒரு சம்பிரதாயத்துக்காகவே இந்த போட்டியில் பங்கேற்கிறது. 8 போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி 3 வெற்றிகள், 3 தோல்விகள் உள்ளிட்ட 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது.
அதேசமயம் இந்திய அணி 8 போட்டிகளில் 6 வெற்றிகள் ஒரு தோல்வி உள்ளிட்ட13புள்ளிகளுடன் 2-வது இடம் பெற்று அரையிறுதியையும் உறுதி செய்துள்ளது.
உலகக்கோப்பைப் போட்டியில் கடந்த 1979-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டுவரை இந்திய அணியும், இலங்கை அணியும் 8 முறை மோதியுள்ளன. இதில் இலங்கை அணி 1979, 1996-ல் இருமுறை, 2007-என 4 முறை வென்றுள்ளது.
இந்திய அணி 1999, 2003, மற்றும் 2011-ம் ஆண்டுகள் என 3 முறை வென்றுள்ளது. 1992-ம் ஆண்டு போட்டி முடிவின்றிப் போனது. ஏறக்குறைய இரு அணிகளும் 8 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் மோதுகின்றன.
அடுத்த வாரத்தில் அரையிறுதிப் போட்டிகளும், இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது. அதற்குள் இந்திய அணிக்கு இருக்கும் முக்கியமான சிக்கலை தீர்க்க வேண்டியது அவசியமாகும்.
இந்த போட்டியில் இந்திய அணி வென்று, மற்றொரு லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் ஆஸ்திரேலிய அணி தோற்றால், இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும். அரையிறுதியில் கடைசி இடத்தில் உள்ள நியூஸிலாந்து அணியுடன் மோத வேண்டியது இருக்கும்
ஒருவேளே இந்திய அணியும் வென்று, ஆஸ்திரேலிய அணியும் வென்றாலும் புள்ளிகள் அடிப்படையில் ஆஸி முதலிடத்தைப் பிடித்து நியூஸிலாந்துடன் மோதும். ஆதலால், 2-வது இடத்தில் இடம் பெற்று நாம் இங்கிலாந்து அணியுடன் மோதப்போகிறோமா அல்லது முதலிடம் பிடித்து நியூஸிலாந்து அணியுடன் மோதப் போகிறோமா என்பதில்தான் இருக்கிறது.
இந்திய அணிக்கு ரோஹித் சர்மா இந்த தொடர் முழுவதும் நல்ல தொடக்கத்தை அளித்து வருகிறார். இதுவரை 4 சதங்கள் அடித்து 544 ரன்களுடன் முதலிடத்தில் இருந்து வருகிறார். கே.எல் ராகலும் கடந்த இருபோட்டிகளில் அரைசதங்கள் அடித்து தனக்குரிய பொறுப்பை நிறைவேற்றியுள்ளார்.
விராட் கோலி இதுவரை 5 அரைசதங்கள் அடித்து 408 ரன்களுடன் அவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால், விராட் கோலிக்கு அடுத்துவரும 4-வது இடம்தான் இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனமாக இருந்து வருகிறது. இதுவரை கடந்துவந்த லீக் ஆட்டங்களில் கவனக்குறைவாக இருந்திருக்கலாம்.
ஆனால், அரையிறுதியில் இந்திய அணியின் நடுவரிசை பலமின்றி குழப்பத்துடன் இருப்பதை கணித்தால் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகள் நிச்சயம் கடும் நெருக்கடி அளிப்பார்கள். ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, தோனி, தினேஷ் கார்த்திக் என பலரை பயன்படுத்தி பார்த்தும் 4-வது வரிசைக்கு சரியான வீரர் இன்னும் அமையவில்லை.
ஒருவேளை நாளை கே.எல்.ராகுலை 4-வது இடத்தில் களமிறக்கி, மயங்க் அகர்வாலை தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் சேர்க்க அணி முயற்சிக்கலாம்.
இந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. வங்கதேசம் அணிக்கு எதிராக பீல்டிங் செய்தபோது தோள்பட்டையில் காயம் அடைந்த பும்ரா சிறிதுநேரம் ஓய்வுக்குபின் மீண்டும் பந்துவீசினார். ஆனால், அரையிறுதிக்கு பும்ராவின் சேவை முக்கியம் என்பதால், போதுமான ஓய்வு அளிக்க அவருக்கு இன்று பெஞ்சில் அமரவைக்கப்படுவார் எனத் தெரிகிறது.
இந்திய அணி புவனேஷ்வர்குமார், ஷமி ஆகிய இரு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம். ஹர்திக் பாண்டியா 10 ஓவர்களை வீசுவதற்கு நன்கு பழகிவிட்டது அணிக்கு கூடுதல் பலமாகும்.
பும்ராவுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா சேர்க்ககப்படக் கூடும். இலங்கை அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருப்பதால், அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க கேதார் ஜாதவை களமிறக்கி, தினேஷ் கார்த்திக் அமரவைக்கப்படலாம்.
ஆக நாளை தினேஷ் கார்த்திக், பும்ரா இல்லாமல் இந்திய அணி களமிறங்கலாம்.
தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சுழற்பந்துவீச்சுக்கு திணறுவார்கள் என்பதால் அதை சாதகமாக இலங்கை அணி பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக தோனி கடந்த போட்டிகளில் சுழற்பந்துவீச்சில் 81 பந்துகளைச் சந்தித்து 47 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். ஆதலால், இலங்கை அணி சுழற்பந்துவீச்சை இந்தியாவுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தக்கூடும். குறிப்பாக தனஞ்செயா டி சில்வா, கருணாரத்னே, மலிண்டா ஸ்ரீவர்த்தனா ஆகியோர் இந்தியஅணிக்கு தொந்தரவு தரக்கூடும்.
இதுதவிர அனுபவ வீரர் மலிங்காவின் யார்கர் பந்துவீச்சு, டெத் ஓவர்களில் அவரின் பந்துவீச்சை திறமையாக இந்திய அணி சமாளித்து பேட் செய்வது அவசியம்.
அதேசமயம் இலங்கை அணி இதுவரை இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக பெற்ற வெற்றி மட்டுமே குறிப்பிடத்தகுந்ததாகும். அதில் தொடக்க வீரர்கள் கருணாரத்னே, பெரேரா, பெர்ணான்டோ, மென்டிஸ் மேத்யூஸ் ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடக் கூடியவர்கள். ஆனால், தொடக்க வரிசை சிறப்பாக ஆடினால், நடுவரிசை வீழ்வதும், தொடக்கவரிசை வீழ்ந்தால் நடுவரிசை நிலைத்து ஆடுவதும் வழக்கமாக வைத்துள்ளார்கள் இலங்கை அணியினர்.
ஷமி, புவனேஷ்வர் குமார் இருவரின் பந்துவீச்சும் , சாஹல், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சும் இலங்கை அணிக்கு சவாலாக இருக்கும்
இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT