Published : 04 Jul 2019 04:13 PM
Last Updated : 04 Jul 2019 04:13 PM
2019 விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் முதல் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பெர்னட் டோமிக் 58 நிமிடங்களில் பிரான்ஸ்வ் வீரர் வில்பிரெட் சோங்காவிடம் நேர் செட்களில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
வில்பிரெட் சோங்காவிடம் தரநிலையில் 96ம் இடத்தில் இருக்கும் ஆஸி. வீரர் பெர்னட் டோமிக் 6-2, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் 58 நிமிடங்களில் கேவலமாகத் தோற்று வெளியேறினார். விம்பிள்டனில் குறைந்த நேரத்தில் முடிந்த 2வது போட்டியாகும் இது, எந்த வித முயற்சியும் இல்லாமல் வெறுமனே படுமோசமாக ஆடியதாக டோமிக் மீது புகார் எழுந்துள்ளது.
தோல்வியடைவது பிரச்சினையல்ல, ஆனால் அவர் ஆடிய டென்னிஸ் ஆட்டத்தின் தரநிலை ‘தொழில் பூர்வ டென்னிஸ் ஆட்டத்தின் உயர்ந்த தரநிலைக்கு’ ஏற்றதாக இல்லை என்று விம்பிள்டன் நிர்வாகம் அவருக்குச் சேர வேண்டிய முதல் சுற்று வரை வரும் வீரர்களுக்கான 45,000 பவுண்டு தொகையை அளிக்கக் கூடாது என்று முடிவெடுத்துள்ளது. அதாவது அவர் ஆடிய தரம் கெட்ட டென்னிஸ் ஆட்டத்திற்காக அவருக்கு 45,000 பவுண்டுகள் அபராதம் என்றுதான் இதற்கு அர்த்தம்.
முதல் சுற்றில் தோற்று வெளியேறுபவர்களுக்கான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பரிசுத் தொகை 45 ஆயிரம் பவுண்டுகள்.
இது தொடர்பாக விம்பிள்டன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஒவ்வொரு கிராண்ட் ஸ்லாம் போட்டியிலும் அனைத்து வீரர்களும் தொழில்பூர்வ தரநிலையை தங்கள் ஆட்டத்தில் பராமரிப்பது அவசியம். ஆட்ட நடுவர், ஒரு வீரர் தேவைப்படும் தொழில்பூர்வ தரநிலைகளுக்கு ஆடவில்லை என்பதை உணர்ந்தால் முதல் சுற்று பரிசுத் தொகையை அவருக்கு அளிக்க வேண்டியதில்லை என்ற முடிவை எடுக்கலாம். இந்த ஆட்டத்திலும் பெர்னர்ட் டோமிக் தரநிலைகளுக்கு ஏற்ப ஆடவில்லை என்று ரெஃப்ரி உணர்கிறார். ஆகவே 45,000 பவுண்டுகள் பரிசுத் தொகை அவருக்கு அளிக்கப்பட மாட்டாது” என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக டோமிக் மேல் முறையீடு செய்யலாம்.
சோங்காவுக்கு எதிரான இந்த விம்பிள்டன் போட்டியில் சோங்கா 21 ஏஸ் சர்வ்களை அடிக்க டோமிக் ஒரேயொரு ஏஸ் மட்டுமே அடித்தார். மேலும் 58 நிமிடங்களில் ஒரு ஒற்றையர் ஆடவர் ஆட்டம் முடிவது 15 ஆண்டுகளில் இதுவே முதல்முறை. 2004-ல் கொலம்பிய வீரர் அலேயாண்ட்ரோ ஃபல்லாவை ரோஜர் பெடரர் 54 நிமிடங்களில் தோற்கடித்ததுதான் கடைசியாக குறைந்த நேரத்தில் முடிந்த ஆடவர் ஒற்றையர் ஆட்டமாகும்.
டோமிக் ஷாட்களையே ஆடாதது கண்டு விம்பிள்டன் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். ஆட்டம் முடிந்து அவரும் சுருக்கமாக, “என்னால் முடிந்த வரையில் சிறப்பாக ஆடினேன்” என்றார். மைதானத்தில் நீங்கள் எடுத்த முயற்சி உங்களுக்கு திருப்தியளித்ததா என்ற கேள்விக்கு “அடுத்த கேள்வி இருக்கிறதா?” என்றார்.
2011-ல் டாப் 20 வீரர்களில் ஒருவராக இருந்தார் டோமிக், ஆனால் ஏன் இப்படி ஆடினார் என்பது இன்னும் புரியாத புதிராகவே ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT