Published : 17 Nov 2014 09:34 AM
Last Updated : 17 Nov 2014 09:34 AM

ஆஸ்திரேலியாவுக்கு தென் ஆப்பிரிக்கா பதிலடி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியா சத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா. இதன்மூலம் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, மோர்ன் மோர்கல், ஸ்டெயின் ஆகியோரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது.

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர் ரன் ஏதுமின்றியும், ஆரோன் பிஞ்ச் 8 ரன்களிலும் வெளியேற, பின்னர் கடைசி வரை ஆஸ்திரேலியாவால் சரிவிலிருந்து மீள முடியவில்லை. எனினும் மிட்செல் மார்ஷ் 88 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் சேர்த்ததால் மிக மோசமான நிலையில் இருந்து மீண்ட ஆஸ்திரேலியா, இறுதியில் 41.4 ஓவர்களில் 154 ரன்களுக்கு சுருண்டது.

மோர்கல் 5 விக்கெட்

தென் ஆப்பிரிக்க தரப்பில் மோர்கல் 8 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார். ஸ்டெயின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டிவில்லியர்ஸ் 48

இதையடுத்து 155 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியும் ஆரம்பத்தில் சரிவுக்குள்ளானது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் 4, ஆம்லா 10, பின்னர் வந்த ரொசாவ் 19 ரன்களில் வெளியேற, 13.3 ஓவர்களில் 64 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா.

இதையடுத்து 4-வது விக்கெட் டுக்கு இணைந்த டூ பிளெஸ்ஸியும், கேப்டன் டிவில்லியர்ஸும் சிறப்பாக ஆடியதால் சரிவிலிருந்து மீண்டது தென் ஆப்பிரிக்கா. டூ பிளெஸ்ஸி 25 பந்துகளில் 30 ரன்களும், டிவில்லியர்ஸ் 48 ரன்களும் (41 பந்துகள்) எடுத்து வெளியேற, இறுதியில் 27.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா. டேவிட் மில்லர் 22, ஸ்டெயின் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

ஹேஸில்வுட் 5 விக்கெட்டு களை வீழ்த்தியபோதும் ஆஸ்திரே லியாவுக்கு வெற்றி தேடித்தர முடியவில்லை. மோர்ன் மோர்கல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 3-வது போட்டி வரும் புதன்கிழமை கேன் பெராவில் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x