Last Updated : 10 Jul, 2019 09:02 PM

 

Published : 10 Jul 2019 09:02 PM
Last Updated : 10 Jul 2019 09:02 PM

ஜடேஜா உழைப்பு வீண்- திருப்புமுனையான தோனி ரன்அவுட்: இந்தியா போராடி தோல்வி: 2-வது முறையாக உலகக்கோப்பை பைனலில் நியூஸி.

ஜடோஜாவின் அமர்க்களமான ஆட்டம், திருப்பு முனையான தோனியின் ரன் அவுட் ஆகியவற்றால், மான்செஸ்டரில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 18 ரன்களில் தோற்கடித்து இறுதிக்குள் நுழைந்தது நியூஸிலாந்து அணி.

உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்குள் நியூஸிலாந்து அணி தொடர்ந்து 2-வது முறையாக தகுதிபெற்றது.

உலகக்கோப்பைப் போட்டியில் வேண்டுமானால் இந்திய அணி வெளியேறிவிட்டது எனலாம்.  ஆனால், ரசிகர்கள் மனதில் இருந்து தோனியின் அசாத்தியமான இன்னிங்ஸும், ஜடேஜாவின் வியப்புக்குரிய பேட்டிங்கையும் மறக்க முடியாது.

92 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து  தோல்வியின் முனையில் இருந்த அணியை கட்டமைத்து வழிநடத்தியது இருவர் மட்டுமே.

இந்த ஆட்டம் 35 ஓவர்களில் முடிந்திருக்க வேண்டியது ஆனால், 50 ஓவர்கள் வரை ஆட்டத்தை நகர்த்தி வெற்றிக்கு அருகே வந்து போராடி தோற்றார்கள், இல்லை, வெற்றி கைநழுவிப்போனது.

உண்மையில் இந்தியாவின் இன்னிங்ஸ் பாராட்டுக்குரியது.

கடந்த 16 ஆண்டுகளுக்குப்பின் உலகக் கோப்பைப் போட்டியில் 7-வது விக்கெட்டுக்கு தோனி, ஜடேஜா இருவரும் 116 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும்.

கடைசியாக 2003 உலகக்கோப்பையில் மே.இ.தீவுகள் வீரர் சர்வான், ஜேக்கப் இருவரும் 98 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. அதை இருவரும் முறியடித்துள்ளனர்.

லீக் ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே இந்திய அணி தோற்றது. இங்கிலாந்துடனான அந்த ஆட்டத்திலும் போராடிதான் தோல்வி அடைந்தது.

2-வதாக இன்றைய அரையிறுதியும் வெற்றி அருகே வந்து வாய்ப்பை இழந்தது. மற்றவகையில் இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிகரமாகவே இருந்தது.  

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. 240 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்திய அணியைப் பொருத்தவரை மழை பெய்து மறுநாள் ஆட்டம் தொடங்குவதால் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளமாக மாறும் என்பதை ஏன் மறந்தார்கள் எனத் தெரியவில்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பையில் இதுபோன்ற மோசமானஆடுகளத்தை இதற்குமுன் யாரும் பார்த்தது இல்லை. அந்த அளவுக்கு தரமில்லாத ஆடுகளம் என்றால் மிகையல்ல.

லீக் ஆட்டங்களில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ராகுல் இருவரும் ஆகச்சிறப்பாக ஆடிவிட்டு, இந்த போட்டியில் கோட்டை விட்டது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம். ரோஹித் சர்மா ஷாட்களை இன்னும் தேர்வு செய்து ஆடி இருக்கலாம்.

இந்தியாவின்  பேட்டிங் தூண் என்று வர்ணிக்கப்படும் கோலியும், டிரன்ட் போல்டின் பந்துவீச்சின் தன்மை தெரியாமல் ஷாட்ஆடி தவறு செய்துவிட்டார். அக்ராஸ்தி பேட் செய்து பந்தை கால்காப்பில் பட்டவர்த்தனமாக வாங்கினார். இதற்கு கிரிக்கெட் அறிந்தவர்கள்யாராக இருந்தாலும் அவுட் அளித்திருப்பார்கள். இடதுகை வேகப்பந்துவீச்சுக்கு கோலி திணறுவார் என்று கூறிவந்தோம். அதே நிரூபித்துவிட்டார்.

அதிலும் கோலி கடந்த 2011(வகாப் ரியாஸ்), 2015(மிட்ஷெல் ஸ்டார்க்), 2019(போல்ட்) ஆகிய 3 உலகக்கோப்பைப் போட்டியிலும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம்தான் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

ஒட்டுமொத்த அணிகளுக்கும் லீக் ஆட்டங்களில் சிம்மசொப்னாக இருந்த டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூவரும் இன்றைய ஆட்டத்தில் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வேதனையின் உச்சகட்டம்.

உலகக்கோப்பைப் போட்டியின் வரலாற்றிலே இதுவரை டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 3 பேரும் ஒரேமாதிரி 111 என்று ஆட்டமிழப்பது இதுதான் முதல்முறை....தேவையில்லாத வேண்டாத சாதனை.

மற்ற லீக் ஆட்டங்களில் அனைவரும் கொண்டாடக்கூடிய ஆட்டங்களை கொடுத்த இந்த 3 பேரும், இதுபோன்ற முக்கியமான தருணங்களில் ஜொலிக்கத் தவறியது சோகம்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 4-வது இடத்தில் எந்த வீரரை களமிறக்குவது என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே இந்தியாவின் உலகக்கோப்பை முடிவுக்கு வந்துவிட்டது.

ஏராளமான சோதனைகள், வீரர்கள் மாற்றம், வீரர்கள் தேர்வு என செய்தும் 4-வது இடத்துக்கு இன்னும் உருப்படியான வீரர்களை தேர்வு செய்யவில்லை. முடிவு எடுக்கமுடியாத குழப்பம் இந்த போட்டியில் நன்றாக எதிரொலித்தது.

இனிமேலாவது பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும், கோலியும் சரியான வீரரைத் தேர்வு செய்வது அவசியம்.

தினேஷ் கார்த்திக் நீண்டகாலத்துக்குப்பின் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். இதைத் தவிர அவரை வேறு ஒன்றும் சொல்லமுடியாது. ஏனென்றால் பல போட்டிகளுக்கு அவருக்கு வாய்ப்பை கொடுக்காமல் இதுபோன்ற நெருக்கடியான ஆட்டத்தில் வாய்ப்பு கொடுத்தால் அவரால் என்ன செய்யமுடியும்? அதுவும் அவருக்கு நீஷம் எடுத்த கேட்ச் மிகப்பிரமாதமானது, மண்ணைத் தொடுமுன் கையை நீட்டிப் பிடித்தார்.

ஆட்டத்தின் முத்தாய்ப்பான விஷயம் தோனி, ரவிந்திர ஜடேஜாவின் பேட்டிங் மட்டும்தான் என்றால் மிகையாது. 35 ஓவர்களில் இந்திய அணிக்கு உயிர்போய் இருக்கும் ஆனால், அதற்கு மூச்சுக்கொடுத்து அணியை கடைசிவரை வழிநடத்தியது இருவர் மட்டுமே.

அதிலும் ரவிந்திர ஜடேஜாவின் இன்றைய பேட்டிங் அவரை விமர்சனம் செய்தவர்களுக்கும்(மஞ்சரேக்கர்), அணியில் வாய்ப்பு கொடுக்காமல் மாற்றுவீரராக மட்டம் பயன்படுத்தியவர்களின் முகத்தில் விழுந்த "பளார் அறை".

தனக்கு கிடைத்த வாய்ப்பை  சரியாகப் பயன்படுத்திய ஜடேஜா 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஜடேஜா களத்தில் இருந்தபோது பெர்குஷன் பந்திலும், நீஷம் பந்திலும் அனாயசமாக அடித்த சிக்ஸர்கள், பவுண்டரிகள் அற்புதம்.

அரையிறுதியில் 8-வதுவரிசையில் இறங்கி அரைசதம் அடித்த முதல்வீரர் ஜடேஜாதான். ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்குப்பின் ஜடேஜா ஒருநாள் ஆட்டத்தில் அரைசதம் அடித்துள்ளது விஷேசமானது. ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமழந்தார். இதில் 4 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும்.

அணியின் இக்கட்டக்கான தருணத்தில் "ஏணியாக இருப்பவர் தோனி " என்பதை ஒவ்வொரு ஆட்டத்திலும் வெளிப்படுத்தி வருகிறார்.

 விக்கெட் சரிவில் சிக்கி தோல்வியை நோக்கிச் சென்றபோது, சிங்கள் ரன்னை ரொட்டேட் செய்து, அணியை வழிநடத்தியது தோனி மட்டுமே. இந்த பொறுமை அவருக்கு மட்டுமே வரும்.

அணியில் மூத்த வீரர், அனுபவமான வீரர் என்பதை தன்னுடைய ஆட்டத்தில் தோனி வெளிப்படுத்திவிட்டார்.

ஆனால், ஜடேஜாவுடன் தோனி இருக்கும் வரை இந்தியா வென்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால், ஜடேஜா சென்றபின், தோனிக்கு நெருக்கடி வந்தது.

அதை சமாளிக்கும் வகையில் பெர்குஷன் பந்தில் சிக்ஸர் அடித்த தோனி, 2-வது ரன் ஓட முயன்றபோது ரன்அவுட் ஆகினார். தோனி 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

தோனி ஆட்டமிழந்தபின்பும் ஆட்டம் நடந்தது. ஆனால் இந்திய அணி தோற்றுவிட்டது.

இந்த ஆட்டத்தில் கோலி செய்த மிகப்பெரிய தவறு முகமது ஷமியை அமரவைத்து, சாஹலுக்கு வாய்ப்பு அளித்ததுதான்.

 வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் எனத் தெரிந்திருந்தும் ஷமியை அமர வைத்தது ஏன் எனத் தெரியவில்லை. தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் ஷமி அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை அள்ளி இருக்கிறார். பின்னர் ஏன் அமரவைத்தார்கள் எனத் தெரியவில்லை.

சாஹல் இந்த ஆட்டத்தில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இதில் சாஹல் 20 ரன்களை சேமித்து இருந்தாலே இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். ஒட்டுமொத்தத்தில் சாஹலின் வருகை, ஷமியின் நீக்கம் தோல்விக்கு முக்கியக் காரணம்.

நியூஸிலாந்து அணியையும் குறைத்து மதிப்பிடக்கடாது. பந்துவீச்சில் பிரமாதப்படுத்திவிட்டனர். குறிப்பாக ஹென்றி, போல்ட் இருவரும் இந்திய அணியின் டாப் ஆர்டரை சாய்த்து இந்திய அணியை திணறடித்துவிட்டனர். நியூஸிலாந்து அணிக்கு பந்துவீச்சுதான் பலம் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டனர்.

 பேட்டிங்கில் வழக்கம் போல் வில்லியம்ஸன், டெய்லர் இருவரின் ஆட்டம் மட்டுமே இந்திய வீரர்களுக்கு தொந்தரவாக இருந்தது. இவரின் இன்னிங்ஸ்தான் நியூஸிலாந்து அணி 239 ரன்கள் வரை ஸ்கோர் செய்ய முக்கியக் காரணம். லீக்ஆட்டங்களில் இருந்து அணி தோல்வியின் பிடியில் சிக்கும்  போது இருவர் மட்டுமே காப்பாற்றி வந்தனர். அதை இந்த முறையும் கச்சிதமாக செய்தார்கள்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x