Published : 29 Jun 2019 04:48 PM
Last Updated : 29 Jun 2019 04:48 PM
எட்ஜ்பாஸ்டனில் நாளை நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான முக்கியமான லீக் ஆட்டத்தில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் களமிறங்குகிறது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி.
நாளை நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் ஆரஞ்சு, கருநீலம் கலந்த புதிய ஆடையில் களமிறங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா அணி மட்டுமே இதுவரை தகுதிபெற்றுள்ளது. இந்திய அணி 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ஒரு வெற்றி இருந்தால் அரையிறுதிக்கு போதுமானதாக இருக்கும்.
ஆனால், இங்கிலாந்து அணிக்கு இது வாழ்வா, சாவா போராட்டம். இந்தியாவுக்கு எதிரான இந்த ஆட்டம், அடுத்து வரும் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி இருக்கிறது.
இந்த இரு ஆட்டத்தில் ஒன்றில் இங்கிலாந்து தோற்றாலும் அரையிறுதிக்கு செல்வதில் அதன்நிலைமை திரிசங்கு நிலையாகிவிடும். ஆதலால், வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி இருக்கிறது.
இந்திய அணியை கடந்த 1992-ம்ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் வென்றதோடு சரி இங்கிலாந்து அணி. அதன்பின் 1999, 2003, 2011, 2015 ஆகிய உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்திய அணியை வெல்ல முடியவில்லை. 2015-ம் ஆண்டு போட்டி சமனில் முடிந்தது. ஏற்ககுறைய 27 ஆண்டுகளாக இந்திய அணியை வெல்ல முடியாமல் இங்கிலாந்து அணி போராடி வருகிறது.
உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளன அதில், இங்கிலாந்து 3 முறையும், இந்திய அணி 3 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.
உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்றுள்ள அணிகளில் இந்திய அணி மட்டும்தான் இதுவரை தோல்வியே சந்திக்காமல் விளையாடி வருகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரை காயத்தால் ஷிகர் தவண் விலகிய நிலையில் அவருக்கு பதிலாகச் சேர்க்கப்பட்ட கே.எல் ராகுல் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நல்லமுறையில் பேட் செய்தார்.
ஆனால் அடுத்து நடந்த ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட் செய்தாலும் ஷாட்களை தேர்வு செய்து ஆடும் போது கவனக்குறைவாக இருந்து விக்கெட்டை இழந்துவிடுகிறார். இன்றைய ஆட்டத்தில் ஷாட்களை தேர்வு செய்து ஆடுவதில் கவனம் அவசியம்.
உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் சேர்த்தவர்கள் வரிசையில் 338 ரன்கள் குவித்து 7-வது இடத்தில் ரோஹித் இருந்து வருகிறார். இரு மிகப்பெரிய சதங்களை அடித்து அருமையான ஃபார்மில் இருக்கிறார். இருவரும் சேர்ந்து நாளை நிலையான தொடக்கம் அளித்தால் இந்திய அணியின் ஸ்கோர் நல்லநிலையை எட்டும். அடுத்து களமறங்கும் வீரர்களுக்கு அழுத்தத்தை குறைக்கும்.
கேப்டன் தூண் கோலி, இதுவரை 4 அரைசதங்களுடன் 316 ரன்கள் குவித்து 9-வது இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கோலி இருப்பார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கவனம் அனைவரும் கோலியின் விக்கெட் மீது, கோலியை களத்தில் நிற்கவிடக்கூடாது என்ற திட்டம் வகுத்து செயல்பாடுவார்கள்.
ஆனால், இந்தியாவின் "ரன் மெஷின்" கோலியை ஆட்டமிழக்கச் செய்வது எளிதானதல்ல. இன்னும் சதம் அடிக்காமல் விளையாடிவரும் கோலி, இந்த போட்டியில் அதை நிறைவேற்றுவார் என நம்பலாம்.
அனைவரின் கவலையே 4-வது இடத்துக்கு யாரை எடுப்பது என்பதுதான் இதுவரை விஜய் சங்கருக்கு 3 போட்டிகளில் வாய்ப்பு அளித்தும் அவரால் 25 ரன்களைத் தாண்டமுடியவில்லை. களத்தில் நிலைக்க முடியவில்லை. 4-வது வரிசை பலமிழப்பது அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுவதற்கு துணைசெய்துவிடும்.
இன்றைய ஆட்டத்தில் விஜய் சங்கர் வருகிறாரா அல்லது, ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், ரவிந்திர ஜடேஜா வருவாரா என்பது தெரியவில்லை. ஏனென்றால், இங்கிலாந்து மண்ணில் அந்நாட்டு அணிக்காக ஜடேஜா நல்ல விக்கெட் எடுக்கும் திறமை உடையவர், நல்ல பீல்டர் என்பதால், அவர்குறித்து ஆலோசிக்கப்படும.
கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் என்று சிந்தித்தால் மட்டும் ரிஷப்பந்த், தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணியைப் பொருத்தவரை ஆல்ரவுண்டருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்பதால் ரவிந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. கேதார் ஜாதவ் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டும் ஒருசதம் அடித்துள்ளார்.
விராட் கோலிக்கு அடுத்தாற்போல் கவனத்தை ஈர்த்துள்ள வீரர் தோனி. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மந்தமாக ஆடிய தோனி மீது விமர்சனங்கள் எழுந்தபின் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக அரைசதம் அடித்தார்.
ஆனால், நாளை நடக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் மந்தமான ஆட்டத்தை தோனி வெளிப்படுத்தாமல் ரன்சேர்ப்பில் ஈடுபட்டால் மட்டுமே இந்தியஅணி நல்ல ஸ்கோரை எட்ட முடியும்.
ஹர்திக் பாண்டியா வழக்கம்போல் தனது அதிரடி ஆட்டத்தை மறக்காமல் செய்து வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4-வது இடத்தில் களமிறக்கியதுபோன்று இறக்குவது ஸ்கோர் வேகமாக உயர்வதற்கு துணை செய்யும். ஹர்திக் பாண்டியாவை 6-வது வீரராக வருவதற்கு பதிலாக 4-து வீரராக களமிறக்கலாம்.
புவனேஷ்வர் குமாருக்கு ஏற்பட்ட காயம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்பதால், ஷமி களமிறங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன. பும்ராவின் பந்துவீ்ச்சு இங்கிலாந்து அணியின் நாளை தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்துவதில் முக்கிய துருப்புச்சீட்டாக இருக்கும்.
டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொண்டுள்ள இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஒருநாள் ஆட்டத்தில் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொண்டதில்லை. ஆதலால், பும்ராவின் பந்துவீச்சு நாளை இங்கிலாந்து வீரர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும்.
உலகக் கோப்பைப் போட்டிகளில் இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் சாஹல். 20 ஓவர்களுக்கு மேல் எதிரணியின் ஸ்கோரை கட்டுப்படுத்துவதில் சாஹல், குல்தீப் பங்கு மிக முக்கியமானது. எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் கூடுதல் சுழற்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு உண்டு.
மொத்தத்தில் இந்திய அணி தனது வெற்றிப்பயணத்தை தோல்வியில்லாமல் நாளை தொடர முயற்சிக்கும்.
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை அடுத்தடுத்து இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வி அடைந்து நம்பிக்கை இழந்து இருக்கிறது. தங்களின் வழக்கமான " அட்டாக்கிங் பேட்டிங்கை " கைவிட்டதால்தான் கடந்த இருஆட்டங்களில் தோல்வி அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் அதிரடி பேட்ஸ்மேன் ஜேஸன் ராய் காயத்தால் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.
நாளை ஆட்டத்தில் ஜேஸன் ராய் களமிறங்கவாய்ப்பு இருப்பது, அணிக்கு மிகப்பெரிய பலமாகும். ஜோ ரூட் 432 ரன்கள் குவித்து உலகக் கோப்பைப் போட்டியில் முன்னணியி்ல் இருந்து வருகிறார். இதேபோன்று மோர்கன்(291),, பேர்ஸ்டோ(245), பட்லர்(222), ராய்(215) என வலுவான பேட்டிங் வரிசை இருக்கிறது
இந்த ஆபத்தான வீரர்களை பாட்னர்ஷிப் சேரவிடாமல் இந்திய வீரர்கள் உடைத்துவிட வேண்டியது அவசியமாகும். இதுதவிர ஸ்டோக்ஸ் 291 ரன்களுடன் இந்த தொடரில் நல்லவிதமாக விளையாடி வருகிறார். ஆதலால், 5 பேட்ஸ்மேன்கள் வரை இங்கிலாந்து அணியில் நல்ல பேட்டிங் செய்யும் திறமை கொண்டவர்கள்.
சுழற்பந்துவீச்சில் நாளை அதில் ரஷித்துக்கும், மொயின் அலிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. இருவரில் மொயின் அலி ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடியவர்.
வேகப்பந்துவீச்சில் ஸ்டோக்ஸ், மார்க் உட், பிளங்கெட், ஜோப்ரா ஆர்ச்சர், ஆகியோர் இருப்பது இங்கிலாந்துஅணிக்கு சாதகமான விஷயமாகும். ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் உட்டின் பவுன்ஸரை இந்திய வீரர்கள் சமாளித்து ஆடுவது நாளை அவசியமாகும்.
எட்ஜ்பாஸ்டனில் இந்திய, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மக்கள் அதிகம் வசிப்பதால், நாளை இந்திய அணிக்கு அதிகமான ஆதரவு இருக்கக்கூடும். இந்த ஆதரவு இந்திய அணிக்கு புதிய உற்சாகத்தையும், தார்மீக ஆதரவையும் அளிக்கும்.
இந்திய அணியைக் காட்டிலும் இங்கிலாந்து அணிக்கே அதிகமான அழுத்தம் தரும் போட்டியாக அமைந்திருக்கிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT