Last Updated : 29 Jun, 2019 08:36 AM

 

Published : 29 Jun 2019 08:36 AM
Last Updated : 29 Jun 2019 08:36 AM

டூபிளெசிஸ், ஆம்லா ஆறுதல்; இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு தகர்ப்பு: தென் ஆப்பிரிக்காவுக்கு பயனில்லாத வெற்றி

அணையும் விளக்கு ஒளிவிட்டு எரிவதைப் போல் தென் ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய நிலையில் இலங்கையை வென்றது.

ஹசிம் ஆம்லா, டூபிளெசிஸ் வலுவான பாட்னர்ஷிப், நெருக்கடியான பந்துவீச்சு ஆகியவற்றால், செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா.

2-வது விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்து ஆம்லா 80 ரன்களிலும், டூபிளெசிஸ் 96 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிெபறவைத்தனர்.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 204 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 37.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 206 ரன்கள் சேர்த்து 9 வி்க்கெட் வி்த்தியாசத்தில் வென்றது.

தென் ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், இந்த வெற்றி மூலம் தன்னோடு சேர்த்து இலங்கை அணியையும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டது.

இனிமேல் இலங்கை அணி மீதமிருக்கும்இரு போட்டிகளில் வென்றாலும் அரையிறுதி வாய்ப்பு என்பது கானல்நீர்தான். அந்த வாய்ப்புக்கு மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை நம்பி இருக்க வேண்டும்.

அதாவது, இலங்கை அணி அடுத்து வரும் இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு எதிரான இரு போட்டிகளிலும் கட்டாயம் வெல்லவேண்டும். இதில் இந்திய அணியை வெல்வது சாதாரண விஷயம் அல்ல. அடுத்ததாக, இங்கிலாந்துஅணி தன்னுடைய இரு போட்டிகளிலும் தோற்க வேண்டும். அதாவது இந்தியாவிடமும், நியூஸிலாந்திடமும் இங்கிலாந்து தோற்க வேண்டும்.

மேலும், பாகிஸ்தானும், வங்கதேசமும் தங்களுக்கு மீதமிருக்கும் இரு ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் தோற்க வேண்டும். இவை எல்லாம் நடந்தால், இலங்கை அணி அரையிறுதிக்குள் செல்லும். இவை அனைத்தும் இலங்கை அணி அரையிறுதி செல்வதற்காக நடக்குமா என்பது சாத்தியமில்லாதது.

அரையிறுதிக்கு வரும் அணிகள் டைபிரேக்கரில் வரும்போது பெற்ற வெற்றிகள் முதலில் கணக்கில் எடுக்கப்படும். அந்த வகையில் இங்கிலாந்து இன்னும் ஒருவெற்றி பெற்றாலே இலங்கையின் கதை முடிந்திவிடும்

ஆதலால், கணிக்கீடுகளில் மட்டுமே இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பைப் பற்றி பேசலாமே தவிர, மற்றவகையில் இலங்கையின் உலகக் கோப்பை கனவு லீக் சுற்றோடு முடிந்துவிடும்.

இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்க அணி 8 போட்டிகளில் 2 வெற்றிகள், 5 தோல்வி என 5 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு முன்னேறியது. இலங்கை அணி 7 போட்டிகளில் 2 வெற்றிகள், 3தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.

ெதன் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு, பேட்டிங்கில் நீண்டநாட்களுக்குப்பின் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்று இழந்த நம்பிக்கையை மீட்டுள்ளனர்.

இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர்கள் ரபாடா, பிரிட்டோரியஸ், மோரிஸ்,பெகுல்குவாயோ ஆகியோரின் கட்டுக்கோப்பான, லைன், லென்த் பந்துவீச்சுக்கு கிடைத்த வெற்றிதான். தொடக்கத்தில் இருந்தே இலங்கை அணியின் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளித்து அவர்களை ரன்களை சேர்்க்கவிடாமல், பாட்னர்ஷிப்பை நிலைக்கவிடாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதில் 10 ஓவர்கள் வீசி 2  மெய்டன்கள், 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரிட்டோரியஸ் ஆட்டநாயகன் விருது வென்றார்.

 இந்த தொடர் முழுவதும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி, தென் ஆப்பிரிக்கா என்றால், பந்துவீச்சில் மிரட்டும் என்ற பயமும் காணாமல் போயிருந்தது.  அதை இந்த போட்டி மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்தபோட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு நிச்சயம் சவாலாகவே இருக்கக்கூடும்

பேட்டிங்கிலும் கேப்டன் டூபிளெசிஸ், ஆம்லாவிடம் இருந்து நீண்ட போட்டிகளுக்குப்பின் நல்ல இன்னிங்ஸை இருவரும் ஆடினர். இந்த தொடர் முழுவதும் மோசமாக பேட் செய்த ஆம்லா 80 ரன்களிலும், டூபிளெசிஸ் 96 ரன்களும் சேர்த்து தங்களின் திறமைய நிரூபித்து, நம்பிக்கையையும் மீட்டுள்ளனர்.

2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இருவரையும் பிரிக்க பல முயற்சிகளை இலங்கை அணியினர் மேற்கொண்டும் தோல்வியில் முடிந்தது.

இலங்கை அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் அனைத்திலும் மோசமான செயல்பாடுதான் இந்த தோல்வியாகும். இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே இலங்கை அணியிடம் நிலைத்தன்மையான ேபட்டிங் இல்லை. டாப்ஆர்டர் ஸ்கோர் செய்து கொடுத்தால் நடுவரிசை வீரர்கள் மளமளவென பொறுப்பற்ற முறையில் வி்க்கெட்டுகளை இழந்தார்கள். இல்லாவிட்டால் டாப் ஆர்டர் சொதப்பினால், நடுவரிசை ஓரளவுக்கு விளையாடினர்.

மற்றவகையில் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தத்தெரியாத அனுபவமற்ற  அணியாகத்தான் இருக்கிறது. பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரை சராசரியாக 20 முதல் 30 ரன்கள் அடிக்கும் வீரர்களாகத்தான் இருக்கிறார்கள்.

பந்துவீ்ச்சில் அனுபவ வீர்ர் மலிங்கா நேற்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஏமற்றமளி்த்தார். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியும் டீகாக் விக்கெட்டை மட்டும்தான் வீழ்த்த முடிந்தது.

டாஸ்வென்ற தென் ஆப்பிரிக்க அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.  இலங்கை அணியின் கருணாரத்னே, பெரேரா ஆட்டத்தை தொடங்கினர். ரபாடாவீசிய முதல் ஓவர், முதல் பந்தில், கருணாரத்னே ஸ்லிப்பில் டூபிளெசிஸ் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.

அடுத்துவந்த பெர்ணான்டோ, பெரேராவுடன் சேர்ந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பெர்ணான்டோ 30 ரன்களில் பிரிட்டோரியஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரின் பாட்னர்ஷிப்பில் சேர்த்த ரன்கள்தான் அதிகபட்சமாகும். 67 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இலங்கை இழந்திருந்தது.

அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் சராசரியாக 25 ரன்களுக்குள் நிலைக்காமல் ஆட்டமிழந்து வந்தனர். அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ஸ்கோர் வெறும் 30 ரன்கள் மட்டுமே.

பெரேரா (30), மெண்டிஸ் (23), மேத்யூஸ் (11), டிசில்வா(24), ஜே.மெண்டிஸ் (18), பெரேரா (21), உதானா (17), மலிங்கா (4) என சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்த 136 ரன்களில் மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் இலங்கை அணி இழந்தது. 49.3 ஓவர்களில் 203 ரன்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பிரிட்டோரியஸ், மோரிஸ் தலா 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

204 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தென் ஆப்பிரி்க்க அணி களமிறங்கியது. ஆம்லா, டீகாக் களமிறங்கினர். டீகாக் இந்தமுறையும் ஏமாற்றி, 15 ரன்னில் மலிங்கா பந்துவீச்சில் போல்டாகினார். 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் டூபிளெசிஸ் களமிறங்கினார். இருவரும் நிதானமாகத் தொடங்கி, அதன்பின் களத்தில் நங்கூரம் பாய்ச்சினர். இவர்களை வீழ்த்த 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் முடியவில்லை.

களத்தில் நிலைபெற்றபின் இருவரும் தங்களின் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பி அடித்து விளையாடத் தொடங்கினர். ஆம்லா 56 பந்துகளிலும், டூபிளெசிஸ்70 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். இருவரும் சீராக ரன்களைச் சேர்க்கத் தொடங்கியதால், தென் ஆப்பிரிக்க அணி 18 ஓவர்களில் 100 ரன்களையும் 36 ஓவர்களில் 200 ரன்களையும் எட்டியது.

மலிங்கா, நுவான் பிரதீப், உதானா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சுழற்பந்துவீச்சும் சிறப்பாக இல்லாததால் ரன்கள்தான் விட்டுக்கொடுத்தனர். 37.2 ஓவர்களில் தென் ஆப்பி்ரிக்க அணி ஒரு விக்கெட்ைட இழந்து 206 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. ஆம்லா 80 ரன்களிலும், டூபிளெசிஸ் 96 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 2-வது விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x