Last Updated : 25 Nov, 2014 07:47 PM

 

Published : 25 Nov 2014 07:47 PM
Last Updated : 25 Nov 2014 07:47 PM

முத்கல் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்ட வீரர்கள் பெயரை வெளியிட பரிசீலனை: உச்ச நீதிமன்றம்

ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் குறித்த முத்கல் கமிட்டி அறிக்கை மீதான விசாரணையின் போது, கமிட்டி குறிப்பிட்டிருந்த வீரர்கள் பெயர்களை வெளியிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

பிஹார் கிரிக்கெட் சங்கம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த கோரிக்கையை எழுப்பினார். இதனையடுத்து உச்ச நீதிமன்ற பெஞ்ச் அடுத்த விசாரணையின் போது வீரர்கள் பெயர்களை வெளியிடுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

முத்கல் அறிக்கையில் தனிநபர் 2 மற்றும் தனிநபர் 3 என்று குறிப்பிடப்பட்ட வீர்ர்கள் பெயர்களை வெளியிடுவது அவசியம், இதனால் தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கலாம் என்று சால்வே கோரினார்.

சால்வேயின் இந்தக் கோரிக்கையை பிசிசிஐ கடுமையாக எதிர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குருநாத் மெய்யப்பனின் ஸ்பாட் பிக்சிங் செயல்பாடு குறித்து முத்கல் கமிட்டியின் விசாரணையின் அடிப்படையில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாக்கூர் மற்றும் கலிபுல்லா ஆகியோர், “குருநாத் மெய்யப்பன் தகவல்களைக் கசியவிடுகிறார் என்றால் மற்றவர்கள் அதன் பெயரில் சூதாட்டப் பந்தயம் கட்டுகின்றனர் என்பது உள்வியாபாரம்” என்று கூறினர்.

மேலும், முத்கல் கமிட்டி முதல் விசாரணை அறிக்கையில், குருநாத் மெய்யப்பன் பங்கு குறித்தும், அதன் மீதான சீனிவாசனின் மவுனம் பற்றியும் குறிப்பிட்ட அதே வேளையில் இரண்டாவது அறிக்கையில் குருநாத் மெய்யப்பன் ஒர் கிரிக்கெட் ஆர்வலர் மட்டுமே என்று கூறி அவருக்கும் அணிக்கும் இடையிலான உரிமைதாரர் தொடர்பு குறித்து மவுனம் காத்தது குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இன்று நடந்த 2 மணி நேர விசாரணையின் போது, பிஹார் கிரிக்கெட் சங்க வழக்கறிஞர் சால்வே, முத்கல் கமிட்டியின் முதல் அறிக்கையை 2-வது அறிக்கையுடன் சேர்த்து வாசிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்படி வாசித்தால், இந்த வழக்கின் அனைத்து உண்மைகளையும் மனதில் கொண்டால் குற்றச்சாட்டை மறைக்கும் விஷயமும் நிரூபிக்கப்படும் என்றார்.

மேலும், அவர் கூறும்போது, உச்ச நீதிமன்றம் முதலில் கூறியதான, எந்த ஒரு அமைப்பின் நேர்மையும் பராமரிக்கப்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு சீனிவாசன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். பிசிசிஐ-யை நீதி மதிப்பாய்வின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நவம்பர் 27-ஆம் தேதி மீண்டும் நடைபெறும் விசாரணையில் வீரர்கள் பெயர்களை வெளியிட பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் உறுதி அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x