Published : 03 Aug 2017 09:33 AM
Last Updated : 03 Aug 2017 09:33 AM
இந்திய கபடி அணியின் கேப்டன் அனுப் குமார் தற்போது புரோ கபடி லீக் 5-வது சீசனில் யு மும்பா அணியை வழிநடத்தி வருகிறார். தேசிய அணிக்காக விளையாடும் போதும் சரி, தொழில்முறை கபடி போட்டியில் விளையாடும்போதும் சரி அனுப் குமார் எப்போதும் பதற்றம் கொள்ளாமல் நிதானமாகவே செயல்படும் குணம் கொண்டவர்.
இதனாலே அவர் கபடி அணியின் ‘மிஸ்டர் கூல்’ கேப்டன் என அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். புரோ கபடியில் யு மும்பா அணியின் சக வீரர்களிடமும் அனுப் குமாரின் நிதான போக்கு வியாபிக்கத் தொடங்கி உள்ளது. அவர்களில் ஒருவர்தான் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் குமார்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரை சேர்ந்த அவர், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் (ஐசிஎப்) தொழில்நுட்ப வல்லுநுராக பணியாற்றி வருகிறார். புரோ கபடி லீக்கில் யு மும்பா அணி முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த போதும் 2-வது ஆட்டத்தில் ஹரியாணா அணியை மிக நெருக்கமாக 29-28 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது.
இந்த வெற்றியில் சுரேஷ் குமார் முக்கிய பங்கு வகித்தார். தடுப்பாட்டக்காரரான அவர், 3 புள்ளிகள் சேர்த்து பெரிதும் உதவியாக இருந்தார். எதிரணி ரைடர்களை கிடுக்கிப்பிடியால் வளைத்து போடுவதில் யு மும்பா அணிக்கு பக்கபலமாக இருந்து வரும், சுரேஷ் குமாரை பயிற்சியின் இடைவேளையின் போது சந்தித்தோம்.
தூத்துக்குடி வட்டார பேச்சில் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்....
பள்ளியில் பயின்ற காலம் முதலே கபடியில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. திருச்செந்தூரில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்தபோது எனது கபடி திறனுக்கு உரிய மதிப்பு கிடைத்தது. 3 ஆண்டு காலம் கல்லூரி அணிகள் இடையிலான பல்வேறு போட்டிகளில் விளையாடினேன். அனைத்து இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டியில் எனது தலைமையிலான கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதுதான் எனது வாழ்க்கையை மாற்றியது.
கல்லூரி படிப்பு முடிவடைந்த அதே ஆண்டில் விளையாட்டு ஒதுக்கீட்டில் எனக்கு ஐசிஎப்-ல் பணி கிடைத்தது. இதன் பின்னர் புரோ கபடி லீக்கில் 5 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். முதல் 3 சீசன்களிலும் புனே அணிக்காக விளையாடினேன். இதில் 3-வது சீசனில் புனே அணி பட்டம் வென்றது. அந்த தருணத்தை வாழ்வில் மறக்க முடியாது. 4-வது சீசனில் டெல்லி அணி, தற்போது யு மும்பா அணி என எனது கபடி பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
20 வருடங்களாக கபடி விளையாடி வருகிறேன். கல்லூரியில் பொருளாதார படிப்பை பயின்ற எனக்கு கபடி தான் அனைத்தையும் கொடுத்துள்ளது. புரோ கபடி லீக் தற்போது வேறு தளத்துக்கு சென்றுள்ளது. கபடி என்றாலே இந்த தொடர் தான் நினைவுக்கு வரும் என்ற நிலையை உருவாக்கி உள்ளது. நாம் உள்ளூரில் விளையாடும் கபடிக்கும் புரோ கபடி லீக் தொடருக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. மண் தரையில் இருந்து செயற்கை தள விரிப்பு, மின்னொளி விளக்குகள் மட்டும் இல்லாது, விதிமுறைகளிலும் அதிக மாற்றங்கள் உள்ளன.
உள்ளூர் போட்டிகளில் சற்று முரட்டுத்தனமான ரைடுகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கு அதுபோன்று செயல்பட முடியாது. ரைடரின் கழுத்தை பிடிக்கக் கூடாது, மேலும் ரைடர் காலால் அதிக சக்தி கொடுத்து எட்டி உதைக்கக் கூடாது (தோள்பட்டை உயரத்துக்கு காலை உயர்த்தி அடிப்பது) என்பது போன்ற விதிமுறைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. இதை மீறினால் பவுல் செய்யப்படுவார்கள். புரோ கபடி லீக் தொடருக்கு அதிக திறன்கள் தேவை. மற்றும் உடல் பராமரிப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தொழில்நுட்ப விஷயங்களை களத்தில் சரியாக கையாள வேண்டும்.
கேப்டன் அனுப் குமாருடன் விளையாடுவதை மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். எப்போதும் அவர், சக வீரர்களிடம் கோபம் கொள்ளமாட்டார். அனைவரையும் ஒருங்கிணைத்து செல்லும் பண்பு அவருக்கு உள்ளது. அவருடன் இணைந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவும் எனக்கு உள்ளது. புரோ கபடி லீக் தொடரின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் கிரிக்கெட்டை கபடி ஓவர் டேக் செய்யும் என்ற கருத்தும் நிலவுகிறது. என்னை பொறுத்தவரையில் கபடி, கிரிக்கெட் போட்டிகளை விஞ்சுகிறதோ இல்லையோ, அந்த விளையாட்டின் அளவுக்கு உயர்ந்தாலே போதும். இவ்வாறு சுரேஷ் குமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT