Published : 23 Aug 2017 08:40 PM
Last Updated : 23 Aug 2017 08:40 PM
ஒருநாள் போட்டிகளில் அஸ்வினுக்கு அடிக்கடி ஓய்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில் 2019 உலகக்கோப்பை அணித்தேர்வு திட்டங்களில் அஸ்வின் நிலை என்ன என்ற கேள்விக்கு இந்தியப் பந்து வீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக விளங்குபவர் ரவிச்சந்திரன் அஸ்வின். 30 வயதான அவர், ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். ஆனால் ஒருநாள் போட்டிக்கான த் தரவரிசையில் இது தலைகீழாக உள்ளது. 21-வது இடத்தில் இருக்கும் அவருக்கு தற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் போட்டித் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி 37 ஒருநாள் போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ளது. இதில் அஸ்வின் 15 ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்றுள்ளார். மற்ற ஆட்டங்களில் அவருக்கு அணி நிர்வாகம் சீரான இடைவேளையில் ஓய்வு வழங்கி வந்துள்ளது. அவர் விளையாடாத காலக்கட்டங்களில் வாய்ப்புகளை பெறும் யஜுவேந்திர சாஹல், அக்ஷர் படேல் ஆகியோர் சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது குல்தீப் யாதவும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
மேலும் வெளிநாட்டு மைதானங்களில் அஸ்வின், பெரிய அளவில் விக்கெட்கள் வீழ்த்துவதில்லை என்பதும் அவர் மீதான விமர்சனமாக இருந்து வருகிறது. அடுத்த இரு ஆண்டுகளில் இந்திய அணி பெரும்பாலான தொடர்களை வெளிநாடுகளில் மேற்கொள்ள உள்ளது. இதற்கு ஆயத்தமாகும் விதமாகவும், 2019-ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு சிறந்த அணியை உருவாக்கும் வழிகளிலும் தற்போது இந்திய அணி நிர்வாகம் களமிறங்கி உள்ளது.
இதனால் அஸ்வின், இனிமேல் குறுகிய வடிவிலான போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணிக்காக தொடர்ந்து பங்களிப்பு செய்யமுடியுமா என்ற சந்தேகம் கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான பாரத் அருண் கூறும்போது, “அஸ்வின் மிகவும் திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்.
கடைசியாக அவர், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய ஆட்டத்தைப் பார்த்தாலே அது புரியும். அந்த ஆட்டத்தில் அஸ்வின், 28 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். அவர் மிகுந்த திறன் கொண்டவர். இதுவரை என்ன நடந்தது என்பதை நான் பார்க்க விரும்வில்லை. ஆனால், நிச்சயமாக ஒருநாள் போட்டிக்கான அணியில் அஸ்வினை ஒரு அங்கமாகத் தான் நாங்கள் பார்க்கிறோம். மற்ற பந்து வீச்சாளர்களுக்கும் அதிக வாய்ப்புகள் வழங்குகிறோம். நாங்கள் நீண்ட காலத் திட்டம் வைத்துள்ளோம். அதன் பின்னரே முடிவு எடுப்போம்” என்றார் பாரத் அருண்.
மேலும் அணிக்கு ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளரின் தேவையும் உள்ளதாக பாரத் அருண் தெரிவித்தார், ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ராவுக்குப் பிறகு இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் இந்தத் தேவையை வலியுறுத்தினார் பாரத் அருண்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT