Last Updated : 03 Nov, 2014 03:11 PM

 

Published : 03 Nov 2014 03:11 PM
Last Updated : 03 Nov 2014 03:11 PM

இந்திய அணி வெற்றி: சில புள்ளி விவரங்கள்

கட்டாக்கில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 169 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஒருநாள் கிரிக்கெட்டில் 28 முறை தொடக்க விக்கெட்டுக்காக 150 அல்லது அதற்கும் அதிகமாக ரன்கள் சேர்த்துள்ளது இந்திய தொடக்க வீரர்களே. உலக அணிகளில் 28 முறை தொடக்க விக்கெட்டுக்காக இத்தகைய சாதனையை வேறு எந்த அணியும் செய்ததில்லை. தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர்கள் 20 முறை 150 அல்லது அதற்கும் அதிகமாக தொடக்க விக்கெட்டுக்காக ரன்கள் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜிங்கிய ரஹானே தனது அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோரை எடுத்தார். நேற்று அவர் 108 பந்துகளில் எடுத்த 111 ரன்களே அவரது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். மேலும் ரஹானே சதன் எடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் போட்டிகளில் ரஹானே 4 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.

ரஹானே, ஷிகர் தவன் இணைந்து எடுத்த 231 ரன்கள் தொடக்க விக்கெட்டுக்காக இலங்கைக்கு எதிராக இந்தியாவின் 2-வது பெரிய ரன் சேர்ப்பாகும். முன்னால் ஜூலை 7, 1998-ஆம் ஆண்டு கொழும்புவில் சச்சின், கங்குலி இணைந்து எடுத்த 252 ரன்களே இலங்கைக்கு எதிரான சிறந்த தொடக்க விக்கெட்டுக்கான ரன் சேர்ப்பாகும்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா 4-வது முறையாக 200 ரன்களுக்கு மேல் தொடக்க விக்கெட்டுக்காக சேர்த்துள்ளனர். இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளில் இதுவே தொடக்க விக்கெடுக்கான முதல் 200 ரன்களுக்கும் அதிகமான கூட்டணியாகும். 2009-ஆம் ஆண்டு நியூசிலாந்தின் ஹாமில்டனில் சேவாக், கம்பீர் இணைந்து 201 ரன்கள் சேர்த்த போட்டிக்குப் பிறகு நேற்று இந்திய ஜோடி 200 ரன்களுக்கும் மேல் தொடக்க விக்கெட்டுக்காக சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இஷாந்த் சர்மா (4/34) தனது சிறந்த ஒருநாள் பந்துவீச்சை நேற்று நிகழ்த்தினார். இதற்கு முன்பாக 2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4/38 என்று இஷாந்த் எடுத்திருந்தார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 5 முறை 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் இஷாந்த் சர்மா. இலங்கைக்கு எதிராக 23 ஒருநாள் போட்டிகளில் 41 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் அவர்.

100 விக்கெட்டுகளுக்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் என்ற வகையில் அதிக முறை ஒருநாள் போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் மேற்கிந்திய தீவுகளின் மால்கம் மார்ஷல். இவர் 6 முறை 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இஷாந்த் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

169 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை இந்தியா வீழ்த்தியிருப்பது இலங்கைக்கு எதிரான 2வது பெரிய வெற்றியாகும். 2003 உலகக் கோப்பைப் போட்டிகளின் போது இலங்கையை இந்தியா 183 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

350 ரன்களுக்கு மேல் இந்தியா 20 முறை எடுத்துள்ளது. அனைத்து தருணங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 20 முறை 350 ரன்களுக்கும் மேல் எடுத்துள்ள ஒரே அணி இந்திய அணியே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x