Published : 27 Nov 2014 11:41 AM
Last Updated : 27 Nov 2014 11:41 AM
சீனாவில் அடுத்த ஆண்டு நடக்கும் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 வீரரான நரேன் கார்த்திகேயன் தெரிவித்தார்.
புனிதர் பட்டம் பெற்ற குரியகோஷ் சாவரா அடிகளாரின் நினைவாக, கோவை சாய்பாபா காலனியில் உள்ள லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தென்னிந்திய அளவில் பள்ளிகளுக்கிடையேயான கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில் நரேன் கார்த்திகேயன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:
பள்ளிகளில் நடத்தப்படும் இது போன்ற போட்டிகள், தேசிய அளவிலான போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும். சீனாவில் அடுத்த ஆண்டு நடக்கும் ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். தற்போது உயர் தொழில்நுட்ப பந்தய கார்கள் அதிகளவில் வந்துள்ளன. இதனால் போட்டிகளை சமாளிக்க இப்போதுள்ள கார்களை ரீலோடிங்செய்து கொள்கிறேன்.
மற்றவர்களுடன் போட்டி போடும் போது, அதற்கேற்ப ஈடுகொடுக்க என்னை நான் தயார் படுத்தி வருகிறேன் என்றார். நேற்று தொடங்கிய இந்த கூடைப்பந்து போட்டிகள், வரும் 28-ம் தேதி வரை நடக்கிறது. 19 வயதுக்குட்பட்ட இந்த கூடைப்பந்து போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 21 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT