Published : 23 Aug 2017 08:21 PM
Last Updated : 23 Aug 2017 08:21 PM
இங்கிலாந்து நட்சத்திர கால்பந்து வீரரும் முன்னாள் கேப்டனுமான வெய்ன் ரூனி சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதன் மூலம் தனது 14 ஆண்டுகால கால்பந்து வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார் 31 வயது வெய்ன் ரூனி. 53 கோல்களுடன் அதிக கோல் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையுடன் வெய்ன் ரூனி ஓய்வு பெற்றார். மொத்தம் 119 போட்டிகளில் ஆடியதும் ஒரு இங்கிலாந்து கால்பந்து சாதனையாம்.
தனது 17-வது வயதில் 2003-ம் ஆண்டு வெய்ன் ரூனி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் போட்டியில் ஆடினார். அப்போது இளம் வயதில் தேசிய அணியில் இடம்பெற்ற வீரர் என்பதால் உடனேயே நட்சத்திர தகுதி பெற்று விட்டார் ரூனி.
ரூனி தனது இணையதளத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கெனவே நீண்ட நாட்களாக, கடினமாக யோசித்தே இந்த முடிவை இங்கிலாந்து மேலாளர் காரத் சவுத்கேட்டிடம் தெரிவித்தேன். இது உண்மையில் கடினமான ஒரு முடிவே. நான் என் குடும்பத்தார் மற்றும் எனக்கு நெருக்கமானவர்களிடம் விவாதித்து இந்த முடிவை எடுத்தேன்.
இங்கிலாந்துக்காக ஆடுவது என்பது எனக்கு எப்பவுமே சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. ஒவ்வொரு முறையும் வீரராகவும் கேப்டனாகவும் தேர்வு செய்யப்படும்போது எனக்கு மிகப்பெரிய கவுரவம் அளிக்கப்படுவதாகவே கருதினேன். மான்செஸ்டர் யுனைடெட் அணியை விட்டு விலகியது கடினமான முடிவுதான் ஆனால் என் தாய் அணியான எவர்ட்டனுக்கு வந்தது மகிழ்ச்சி. இப்போது இந்த அணியின் வெற்றிக்காக எனது ஆற்றல் முழுதையும் செலவழிக்கப் போகிறேன்.
நான் எப்போதும் இங்கிலாந்தின் நேசமிக்க ரசிகன்.
ஒரேயொரு வருத்தம் என்னவெனில் பெரிய போட்டித் தொடர்களில் வெற்றி பெற்ற அணியின் அங்கமாக நான் இல்லாமல் போனதே. இங்கிலாந்து அணியின் விசிறியாக அல்லது எந்த ஒருவிதத்திலாவது மீண்டும் அங்கு பங்குபெறுவேன், என் கனவு ஒருநாள் நிறைவேறும்” என்றார் ரூனி.
அடுத்த மாதம் உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் இங்கிலாந்து அணி மால்டா, ஸ்லோவேகியா அணிகளுக்கு எதிராக ஆடவுள்ள நிலையில் ரூனி இந்த முடிவை எடுத்துள்ளார்.
இவருக்கு தற்போது புகழாரங்கள் குவிந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT