Published : 14 Aug 2017 10:44 AM
Last Updated : 14 Aug 2017 10:44 AM

யுவராஜ் சிங், ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் நீக்கம்: இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோருக்கு இடமில்லாமல் போனது.

அஸ்வின், ஜடேஜா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர், லெக்ஸ்பின்னர் யஜுவேந்திர சாஹல் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, ரோஹித் சர்மா (துணைக் கேப்டன்) ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபியில் 32 பந்துகளில் 53 ரன்களை பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த பிறகே யுவராஜ் சிங் 6 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை. மேலும் பலவீனமான மே.இ.தீவுகளுக்கு எதிராகக் கூட யுவராஜ் சிங் கடைசி 3 இன்னிங்ஸ்களில் 57 ரன்களையே எடுத்தார்.

நடுவரிசையில் தற்போது தோனி, பாண்டே, கேதார் ஜாதவ் ஆகியோர் உள்ளனர். மணீஷ் பாண்டே தன்னைத்தானே தேர்வு செய்து கொண்டார், காரணம் சமீபத்தில் இந்தியா ஏ-வுக்காக அவர் அடித்த ஸ்கோர்கள், 32, 93, 86, 41, மற்றும் 55.

ஆனால் அதிர்ஷ்டமில்லாது போனார் ரிஷப் பந்த். நிச்சயம் இளம் வீரரான அவருக்கு இது ஏமாற்றமாகவே இருக்கும். ரஹானேவுக்கு ஓய்வு அளித்து ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டிருக்கலாம். தோனி பற்றி பேசுவது தடைசெய்யப்பட்ட விஷயம். 2019 உலகக்கோப்பையை முன் வைத்துதான் தேர்வு செய்யப்படுகிறது என்று கூறப்படுமேயானால் அதில் ரிஷப் பந்த் இடம்பெறுவது அவசியம். இந்திய கிரிக்கெட்டில் மூத்த வீரர்கள் பலர் கடைசி கட்டங்களில் தங்கள் இடத்தை விட்டு நகராமல் இருப்பதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். இதனால் எவ்வளவோ இளம் வீரர்கள் ஏமாற்றத்துடனும் வெறுப்புடனும் கிரிக்கெட்டில் ஆர்வமிழந்ததையும் நாம் பார்த்து வருகிறோம்.

எனவே ரிஷப் பந்த் எந்த விதத்திலும், எந்தப் புறத் தூண்டுதலுக்கும் இலக்கு ஆகாமல் தன் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

இந்திய அணி வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, ரஹானே, கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, புவனேஷ் குமார், ஷர்துல் தாக்கூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x