Published : 22 Nov 2014 12:27 PM
Last Updated : 22 Nov 2014 12:27 PM
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது. முத்தரப்புத் தொடரில் 3-வது அணியாக இங்கிலாந்து பங்கேற் கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுகள் குறித்த பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் அளித் துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதில் கிரில்டு (பொறித்த) சிக்கன், பட்டர் சிக்கன் போன்ற காரம் அதிகமில்லாத உணவுகளுக்கே இந்திய வீரர்கள் அதிக முன்னுரிமை அளித்திருக்கிறார்கள்.
போட்டிகளில் இல்லாதபோது ஓட்டல்களில் தங்கியிருக்கும் நேரத்தில் இந்திய வீரர்களின் விருப்ப உணவை தயார் செய்து கொடுப்பதற்காக தலைமை சமையல்காரர் ஒருவரும் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறார்.
மைதானத்தில் போட்டி காரசார மாக இருந்தாலும் மைதானத்துக்கு வெளியே காரமில்லாத உணவு வகைகளை சாப்பிடவே இந்தியர் வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கார உணவுகள் அறவே கூடாது என்பதுதான் அவர்களின் முக்கிய வேண்டுகோள். மிதமான காரம் கொண்ட பட்டர் சிக்கன் போன்றவை இந்திய அணியினரின் ஊட்டச்சத்து உணவு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
கேப்டன் தோனி, கோலி போன்ற முன்னணி வீரர்கள் உடல் நலக்குறைவால் அவதிப்படுவதைத் தடுக்கும் பொருட்டு டெஸ்ட் போட்டி நடைபெறும் மைதானங்களில் அமைக்கப்படும் உணவு தயாரிப்பு மையங்கள் உயர் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
நோய்க் கிருமிகள் எளிதாகத் தொற்றிக்கொள்ளும் உணவுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். வீரர்களுக்கு பரிமாறப்படும் உணவுகள் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு அதிகமாக இருக்க வேண்டும். குளிர்ந்த உணவுப் பொருட்களாக இருந்தால் அது 5 டிகிரி செல்சியஸூக்குக் குறைவானதாக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர பாத்திரங்கள் சுத்தமாக இருக்கவேண்டும். ஊழியர்கள் தங்கள் கைகளை சூடான நீரில் நன்கு கழுவியிருக்கவேண்டும். பாத்திரங்கள் சூடான நீரில் நன்கு கழுவப்பட்டிருக்கவேண்டும். உபயோகப்படுத்துவதற்கு முன்பு அவை ஏர் டிரையிங் முறையில் காய வைக்கப்பட்டிருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது
டெஸ்ட் போட்டி நடைபெறும் நாட்களில் ரோஸ்ட் செய்யப்பட்ட செம்மறி ஆட்டுக்குட்டி கறி, சுடப்பட்ட சல்மோன் மீன் வகை, குறைந்த கொழுப்பு கொண்ட பாலாடைக் கட்டி மற்றும் நொறுக்குத் தீனியாக கடலை வகைகள், குக்கீஸ் வகை பிஸ்கட்கள், கேக் போன்றவை வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மைதானத்தில் காலை உணவாக, அவித்த முட்டை, பொறிக் கப்பட்ட காளான்கள், பீன்ஸ், தயிர் மற்றும் பழவகைகளும், மதிய உணவாக பொறித்த சிக்கன், மீன், பட்டர் சிக்கன் (மைல்ட்), ஆவியில் வேகவைக்கப்பட்ட சாதம் (steamed rice), சப்ஜி, மற்றும் ஆவியில் வேகவைக்கப்பட்ட காய்கறிகளும் (steamed vegetables) வேண்டும் என கூறியுள்ளனர்.
பட்டியலில் இல்லாத எந்த உணவாக இருந்தாலும் அது இந்திய வீரர்களுக்கு வழங்கப்படும் முன்பு அணி நிர்வாகத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆஷஸ் தொடரின்போது இங்கிலாந்து வீரர்கள் தங்களு டைய ஓய்வறை (டிரெஸிங் ரூம்) மிச்லின் ஸ்டார் ரேட்டிங் கொண்ட உணவகங்களைப் பிரதிபலிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பொறித்த மற்றும் கார உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், மாட்டுக்கறி, பன்றிக் கறி தொடர்புடைய பொருள்கள் சமையலில் சேர்க்கப்படக்கூடாது என்றும் கேட்டிருந்தார்கள். இங்கிலாந்து வீரர்கள் பலர் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் என்பதால் இந்தக் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT