Published : 06 Jul 2017 01:10 PM
Last Updated : 06 Jul 2017 01:10 PM
சம்பள விவகாரம் இன்னும் தீர்க்கப்படாததால் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை புறக்கணிப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும் - வீரர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக சம்பளம் தொடர்பான சர்ச்சை நிலவி வருகிறது. வீரர்களின் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் இணங்க மறுத்துள்ளதால், தற்போது ஆஸ்திரேலியா ஏ அணி விளையாடவிருந்த போட்டிகள் ரத்தாகியுள்ளன.
தற்போதைய வீரர்களின் ஒப்பந்தம் ஜூன் 30ஆம் தேதியோடு முடிவடைந்தது.
இது பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் அளித்துள்ள அறிக்கை பின்வருமாறு:
"நிலவி வரும் சிக்கலுக்கு தீர்வு கிடைக்காததாலும், எந்த முன்னேற்றமும் இல்லையென்பதாலும், ஆஸ்திரேலியா ஏ வீரர்கள், தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள மாட்டார்கள் என மிகுந்த மனவருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த முடிவு கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான, தற்போது வேலையில்லாத ஆண், பெண் வீரர்களுக்கு ஆதரவு தரும் பொருட்டே எடுக்கப்பட்டது. இந்த முடிவை எடுத்ததன் மூலம், ஆஸ்திரேலிய ஏ வீரர்கள் தன்னலமற்று தங்கள் லட்சியங்களை தியாகம் செய்துள்ளனர். இது வீரர்களிடையே இருக்கும் ஒற்றுமையையும், அர்ப்பணிப்பையும் காட்டுகிறது".
ஆஷஸ் தொடர், இந்தியப் பயணம் ரத்தாகுமா?
இந்த சம்பள விவகாரம் தொடர்ந்து கொண்டிருப்பதால், ஆஸ்திரேலிய அணி வங்கதேசம் மற்றும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவிருந்த போட்டிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரும் நடக்குமா என சந்தேகம் நிலவுகிறது.
வீரர்களுக்கு நிலையான ஒரு சம்பளம் விதிக்கப்பட்டிருந்த 20 வருட ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமான 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' கைவிட திட்டமிட்டது. இதனால் வீரர்களின் வருவாய்க்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. தொடர்ந்து வீரர்களுக்கும் - வாரியத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது.
முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் க்ளார்க், பழைய ஒப்பந்தத்தை 12 மாதங்கள் நீட்டித்து, அந்த காலகட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான தீர்வை எட்ட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT