Published : 30 Nov 2014 12:41 PM
Last Updated : 30 Nov 2014 12:41 PM
பிரிஸ்பேனில் வரும் 4-ம் தேதி தொடங்குவதாக இருந்த இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் தேதி இறுதி செய்யப்படவில்லை.
பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெறுவதால் முதல் டெஸ்ட் போட்டியை தள்ளிவைத்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தத் தொடர் வரும் 4-ம் தேதி தொடங்குவதாக இருந்த நிலையில், உள்ளூர் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ், பவுன்சர் தாக்கியதில் மரணமடைந்தார். கிரிக்கெட் உலகையே உலுக்கியுள்ள ஹியூஸின் மரணத்தால் ஆஸ்திரேலிய வீரர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் முதல் டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதனிடையே பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கு வருகிற புதன்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அதனால் பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி, தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிலிப் ஹியூஸின் மரணத்தினால் கிரிக்கெட் உலகம் துக்கத்தில் இருப்பதால், டிசம்பர் 4-ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்குவதாக இருந்த முதல் டெஸ்ட் போட்டி தள்ளிவைக்கப்படுகிறது. பிலிப் ஹியூஸின் சொந்த ஊரான மேக்ஸ்வில்லேவில் அவர் படித்த பள்ளியில் அவருடைய இறுதிச்சடங்கு புதன்கிழமை நடைபெறுகிறது. அதனால் அடுத்த நாள் தொடங்குகிற டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர்கள் கலந்துகொள்வது சாத்தியமில்லை.
பிசிசிஐ மற்றும் இந்திய அணியினர் எங்களுடைய நிலைமையைப் புரிந்துகொண்டு மிகுந்த ஆதரவு அளித்து வருகிறார்கள். முதல் டெஸ்டை தள்ளிவைப்பது குறித்து, ஆஸ்திரேலிய வீரர்கள், பிசிசிஐ அதிகாரிகள் என பல தரப்பினருடனும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டது.
ஹியூஸின் இறுதிச்சடங்கு நிகழ்வின்போது அவர் படித்த மேக்ஸ்வில்லேவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஹியூஸின் வாழ்க்கை மற்றும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்தப்படும். 2006-ல் கிரிக்கெட் கனவுகளுடன் சிட்னிக்கு இடம்பெயரும் முன்பு ஹியூஸ் அந்தப் பள்ளியில்தான் படித்தார்.
பிரிஸ்பேன் டெஸ்டுக்கு டிக்கெட் வாங்கியவர்கள் அடுத்து என்ன நடக்கும் என்று எண்ணுவார்கள். ரசிகர்கள் தாங்கள் வாங்கிய டிக்கெட்டை போட்டி தொடர்பான மறு அறிவிப்பு வரும் வரை பத்திரப்படுத்தி வைக்கவும். பலருடன் விவாதித்து முடிவெடுக்க வேண்டியிருப்பதால் ரசிகர்கள் பொறுமை காக்கவேண்டும்“ என்று குறிப்பிட்டுள்ளது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் ஜேம்ஸ் சுதர்லேண்ட் கூறும்போது, “ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுடைய சகவீரரான ஹியூஸின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அடுத்தநாளே டெஸ்ட் போட்டியில் ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது. வீரர்களின் நலன் தான் முக்கியம்” என்றார்.
பிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கு சேனல் 9-ல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஹியூஸிடம் கில்கிறிஸ்ட் சாயல்: முன்னாள் கேப்டன் பாண்டிங்
மறைந்த பிலிப் ஹியூஸ் பற்றி ‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகையில் முன்னாள் கேப்டன் பாண்டிங் எழுதியிருப்பதாவது:
தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தின்போது, ஹியூஸிடம் சென்று பேசினேன். கற்றுக்கொள்வதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். தென் ஆப்பிரிக்க அணியினரின் பவுலிங் மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் அவர்களுடைய பந்துகளை எல்லாப் பக்கமும் அடித்து ஆடினார். ஹியூஸின் வழக்கத்துக்கு மாறான ஸ்டிரோக்குகளைக் கண்டு தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஆச்சர்யமடைந்தனர். 20 வயது புதிய வீரர், ஸ்டெயின் பந்தை அவர் தலைக்கு மேல் அடிக்கக்கூடாது. ஆனால் ஹியூஸ் அதை செய்தார். டர்பன் டெஸ்டில் ஹியூஸ் ஆடிய விதத்தில் கில்கிறிஸ்டின் சாயலைப் பார்க்க முடிந்தது. ஸ்டீவ் வா, ஜஸ்டின் லாங்கர் போல பேட்டிங்கை மிகவும் விரும்பினார். அதனால்தான் ஹியூஸால் முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன் குவிக்க முடிந்தது.
ஸ்டீவ் வா மகனை பாதித்த ஹியூஸின் மரணம்
ஹியூஸ் மரணம் பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வா கூறியதாவது:
‘‘ஹியூஸ், என் மகனிடம் உரையாடியதால் அவர் மீது மரியாதை இருந்தது. என் மகனிடம் ஹியூஸின் மரணம் பற்றி சொன்னபோது மிகவும் உடைந்துபோனான். ஆஸ்திரேலிய அணியின் ஓய்வு அறைக்கு என் மகன் ஆஸ்டினை அழைத்து செல்வேன். என்னிடம் ஹலோ மட்டும் சொல்லிவிட்டு ஆஸ்டினிடம் நீண்ட நேரம் கிரிக்கெட் பற்றி பேசுவார். ஹியூஸ் 26 டெஸ்டுகளில் 5 முறை அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும்போது நான் என்னுடைய 26-வது டெஸ்ட் வரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. தன்னை நிரூபிக்க ஹீயூஸூக்கு போதிய அவகாசம் தரப்படவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT