Published : 05 Jul 2017 10:41 AM
Last Updated : 05 Jul 2017 10:41 AM
3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
உலகத் தரவரிசையில் 3-வது இடத்திலும், போட்டித் தரவரிசையில் 5-வது இடத்திலும் உள்ள வாவ்ரிங்கா தனது முதல் சுற்றில் 49-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேட்வெதேவ்வை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 13 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் வாவ்ரிங்கா 4-6, 6-3, 4-6, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
3 வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பிரெஞ்சு ஓபனில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய வாவ்ரிங்கா, மதிப்பு மிகுந்த விம்பிள்டனில் முதல் சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
2014-ல் ஆஸ்திரேலிய ஓபன், 2015-ல் பிரெஞ்சு ஓபன், 2016-ல் அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள வாவ்ரிங்கா, விம்பிள்டன் போட்டியில் அதிகபட்சமாக கால் இறுதியை கடந்தது இல்லை. விம்பிள்டனில் அவர் முதல் சுற்றுடன் வெளியேறுவது இது 6-வது முறையாகும்.
வாவ்ரிங்கா கூறும்போது, “புல்தரை ஆடுகளம் எனது கால்களுக்கு சிறந்த தளம் கிடையாது. என்ன பிரச்சினை என்பதை நான் கண்டறிய வேண்டும். இனிமேல் என்ன செய்யப் போகிறேன், வலி இல்லாமல் மீண்டும் களத்துக்கு எப்படி திரும்புவது என்று சிந்திக்க வேண்டும்.
இந்த சீசன் முழுவதுமே முழங்காலில் பிரச்சினை இருந்து வருகிறது. பயிற்சியின் போது பெரிய அளவில் பாதிப்பு தெரியவில்லை. ஆனால் விளையாடும் போது சிறிய தயக்கம் இருந்தது. உடல் ரீதியாக நான் முழுமையாக தயாராகுவதற்கு சிறிது காலம் எடுத்துக்கொள்ள போகிறேன்” என்றார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முதன்முறையாக வெற்றி பெற்றுள்ள மேட்வெதேவ் கூறும் போது, “வாவ்ரிங்காவை நான் தோற்கடிப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது வாழ்நாளில் இது மிகச்சிறந்த வெற்றி. நான் வெற்றி பெற்ற சிறந்த 10 ஆட்டங் களில் இந்த ஆட்டத்துக்கு தான் முதலிடம். வெற்றியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இந்த நினைவு எப்போதும் எனது மனதில் இருக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT