Published : 13 Jul 2017 10:27 AM
Last Updated : 13 Jul 2017 10:27 AM
ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் ஈரோடு மாணவர் ப.இனியன், மூன்றாமிடம் பெற்றுள்ளார். இதன் மூலம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெறுவதற்கான முதல் தகுதியைப் பெற்றுள்ளார்.
ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த கே.பன்னீர் செல்வம் - சரண்யா தம்பதியரின் மகன் ப.இனியன் (14). தனியார் பள்ளி மாணவர். ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற 25-வது மான்கடா ஓபன் சர்வதேச செஸ் போட்டியில் இனியன் பங்கேற்றார்.
இப்போட்டியில் 10 கிராண்ட் மாஸ்டர்கள், 15 சர்வதேச மாஸ்டர் கள் உட்பட 19 நாடுகளைச் சார்ந்த 109 வீரர்கள் பங்கேற்றனர். இதில் முதல்நிலை வீரரான ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் வோராபியோ இங்ஜினி, அர்ஜென்டினாவின் கிராண்ட் மாஸ்டர் பெரால்டா பெர்ணான்டோ, ஸ்பெயின் நாட்டின் சர்வதேச மாஸ்டர் சாண்டோஸ் லடாசா ஜெய்ம் ஆகியோரை இனியன் வெற்றிகண்டுள்ளார்.
மொத்தம் 9 போட்டிகளில் பங்கேற்ற இனியன், 5 வெற்றி, 3 டிரா, 1 தோல்வியுடன் 6.5 புள்ளிகள் பெற்று கிராண்ட் மாஸ்டர் நார்ம் என்ற தகுதியைப் பெற்றுள்ளார். இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான அனைத்து நிதி உதவிகளையும் ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் வழங்கியுள்ளது.
சர்வதேச சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற இனியனுக்கு ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் தலைவர் சின்னசாமி, துணை தலைவர்கள் தேவராஜன், வெங்கடேஸ்வரன், செயலர் கணேசன், பொருளாளர் ஞானவேல் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு நெடுஞ்சாலைத் துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் இனியனின் தந்தை கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:
ஐந்து வயதில் இருந்தே இனியன் செஸ் போட்டிகளில் பயிற்சி பெற்று வருகிறார். தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில், தங்கம், வெள்ளி, வெண்கலப் பதங்களை வென்றுள்ளார். 2016-ம் ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டிகளில் வெள்ளிப் பதக்கமும், அதே ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கமும் பெற்றுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் நடைபெற்ற சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்று, சர்வதேச மாஸ்டர் பட்டத்தினை இனியன் பெற்றார். ஜூன் 26-ம்தேதி ஸ்பெயினில் தொடங்கிய சர்வதேச செஸ் போட்டியில், மூன்றாம் இடம் பெற்றுள்ள இனியன், கிராண்ட் மாஸ்டர் நார்ம் எனும் தகுதியைப் பெற்றுள்ளார்.
சர்வதேச அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற வேண்டுமானால், மூன்று முறை கிராண்ட் மாஸ்டர் நார்ம் தகுதியைப் பெற வேண்டும். தற்போது முதன் முறையாக கிராண்ட் மாஸ்டர் நார்ம் பட்டத்தைப் பெற்றுள்ள இனியன், மேலும் இருமுறை இத்தகுதியைப் பெறும் பட்சத்தில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT