Published : 15 Jul 2017 10:43 AM
Last Updated : 15 Jul 2017 10:43 AM
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் நாள் ஆட்டத்தில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது. கிரெய்க் இர்வின் 151 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான ஷகப்வா 12, மசகட்சா 19 ரன்கள் எடுத்த நிலையில் ரங்கனா ஹெராத் பந்தில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய முசகண்டா 6, சீன் வில்லியம்ஸ் 22 ரன்களில் வெளியேற 70 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து ஜிம்பாப்வே அணி தத்தளித்தது.
ஆனால் கிரெய்க் இர்வின், மற்ற பேட்ஸ்மேன்களின் உதவியுடன் அணியை சரிவில் இருந்து மீட்டார். 146 பந்துகளில் தனது 2-வது சதத்தை அடித்த அவர், இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஷிகந்தர் ராசா 36, மூர் 19, வாலர் 36, கேப்டன் கீரிமர் 13 ரன்களில் சீரான இடைவேளையில் ஆட்டமிழந்தனர்.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஜிம்பாப்வே 90 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது. கிரெய்க் இர்வின் 151, திரிபானோ 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT