Published : 14 Jul 2017 10:29 AM
Last Updated : 14 Jul 2017 10:29 AM
இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆடாத தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டுபிளெஸ்ஸிஸ், இப்போட்டியில் ஆடுவது அந்த அணியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது. மனைவிக்கு குழந்தை பிறந்ததால் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடாமல் இருந்த தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் இப்போட்டியில் களம் இறங்குகிறார். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது தென் ஆப்ரிக்க வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது வருகை அணியின் தன்னம்பிக்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் அந்த அணி வெல்லும் என்றும் தென் ஆப்ரிக்க ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
டுபிளெஸ்ஸிஸ் அணிக்கு திரும்புவதால் தென் ஆப்ரிக்க அணியில் இருந்து டுமினி நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்றைய ஆட்டத்தில் ஆல் ரவுண்டரான கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. டுபிளெஸ்ஸிஸ் அணியில் இடம்பெற்றுள்ளதால் பேட்டிங்கில் தென் ஆப்ரிக்க அணி பலம் பெற்றுள்ள போதிலும் இன்றைய ஆட்டத்தில் ரபாடா ஆடாதது அந்த அணியின் பந்துவீச்சை பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த டெஸ்ட் போட்டியின்போது தவறான சில வார்த்தைகளை பயன்படுத்தியதால் இந்த டெஸ்ட் போட்டியில் ஆட ரபாடாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரபாடா இல்லாததால் தென் ஆப்ரிக்க அணி மோர்கெலையே பெரிதும் நம்பியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியின் போது தென் ஆப்ரிக்காவின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. அந்த அணியின் வீரர்கள் பல கேட்ச்களை தவறவிட்டனர். இப்போட்டியில் வென்றாக வேண்டுமானால் பீல்டிங்கில் அந்த அணி அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி, அதிக உற்சாகத்துடன் இந்த டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகிறது. முதல் போட்டியில் ஆடிய அதே அணி, இந்த டெஸ்ட் போட்டியிலும் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 87 ரன்களைக் குவித்ததுடன் 10 விக்கெட்களையும் சாய்த்த மொயின் அலி, இப்போட்டியிலும் இங்கிலாந்து அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாடுகளில் ஒரு டெஸ்ட் தொடரைக்கூட இழக்காத தென் ஆப்ரிக்க அணியை, இப்போட்டியிலும் வென்று தொடரில் முன்னிலையை அதிகரிக்கும் எண்ணத்துடன் இங்கிலாந்து அணி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT