Published : 28 Jul 2017 09:00 AM
Last Updated : 28 Jul 2017 09:00 AM
‘புரோ கபடி லீக் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைவதே எங்கள் முதல் இலக்கு’ என்று ‘தமிழ் தலைவாஸ்’ அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’ நிருபரிடம் அஜய் தாக்கூர் கூறியதாவது:
‘தெலுகு டைட்டன்ஸ்’ அணிக்கு எதிரான முதல் போட்டி கடினமாகவே இருக்கும். புதிய அணியாக இருந்தாலும் நம் வீரர்களிடம் சிறந்த ஒழுக்கம் காணப்படுகிறது. சீனியர் வீரர்கள் சொல்வதைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார்கள். பாஸ்கரன் சிறந்த பயிற்சியாளர். உலகக் கோப்பையில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். எங்களுக்குள் சிறந்த நட்பு உள்ளது. அவர் முன்னாள் வீரர் என்பதால் அவரது அனுபவங்கள், உள்ளீடுகள் ஆகியவை அணிக்கு பயனளிப்பதாக உள்ளன. இவற்றை நாங்கள் உள்வாங்கிக்கொண்டு கூடுதல் திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் அணி வலுவடையும்.
தமிழகத்தில் கபடிக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் நாங்கள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது இதைக் காண முடிந்தது. மற்ற இடங்களை விட தமிழகத்தில் கபடியை அதிகமாக நேசிக்கிறார்கள். புதிய அணியாக இருந்தாலும் முதல் போட்டியை 100 சதவீத நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறோம். எதிரணி யாராக இருந்தாலும் வெற்றிதான் எங்களின் குறிக்கோள்.
இந்தத் தொடரை வெற்றியுடன் தொடங்க விரும்புகிறோம். இதற்காக 100 சதவீத திறனைக் களத்தில் வெளிப்படுத்துவோம். சிறுவயதில் யாரைப் பார்த்து வளர்ந்தோமோ, அவரே எங்கள் அணியின் உரிமையாளராக (சச்சின் டெண்டுல்கர்) இருப்பது பெருமையாக உள்ளது. அவர் எங்களுக்கு சிறந்த முறையில் ஆதரவளித்து வருகிறார். இதுவே எங்களுக்கு பெரிய ஊக்கம். அணியில் தமிழக வீரர்கள் பலர் இருந்தாலும் அவர்களுடன் மொழி ரீதியான தகவல் தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனெனில் கபடியே மொழிதான்.
களத்தில் எந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும் என்று வீரர்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழக வீரர்களில் விஜின், சி.அருண், பிரதாப், பிரபஞ்சன் ஆகியோர் அணிக்கு வலு சேர்ப்பவர்களாக உள்ளனர். ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வகையில் முதல் 4 இடங்களுக்குள் வருவதே எங்கள் இலக்காகும். அதன் பின்னர் ஆட்டத்தை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்வோம். இந்த தொடரில் சவால் கொடுக்கக்கூடிய அணிகளாக யு மும்பா, பெங்களூரு அணிகள் இருக்கும்
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT