Last Updated : 18 Nov, 2014 10:04 AM

 

Published : 18 Nov 2014 10:04 AM
Last Updated : 18 Nov 2014 10:04 AM

அக்‌ஷர் படேலுக்கு முன்னுரிமை தரப்படும்: விராட் கோலி உறுதி

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள புதிய சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் படேலுக்கு பேட்டிங் வரிசையில் முன்னுரிமை தரப்படும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 5-0 என்று வென்றுள்ளது. இதுபற்றி கோலி கூறும்போது:

‘‘நம் வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடனும் ஆக்ரோஷமாகவும் விளையாடினார்கள். இதைத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம். ஒரு பவுலரை பேட்ஸ்மேன் அடிக்க ஆரம்பித்தால் அவர் தொடர்ந்து நம்பிக்கையுடன் பந்துவீசி அந்த பேட்ஸ்மேனை அவுட் ஆக்கவே முயற்சி செய்யவேண்டும். இப்படியொரு மாற்றத்தையே நாங்கள் விரும்புகிறோம். இலங்கை போன்ற வலுவான அணியை 5-0 என்று தோற்கடித்தது எளிதானதல்ல.

துணைக் கண்டத்தில், ஒரு துணைக் கண்ட அணியை ஒயிட்வாஷ் செய்வது அவ்வளவு எளிதானல்ல. ஆனால் நம் வீரர்களிடம் நான் என்னென்ன கோரிக்கைகள் வைத்தேனோ அவற்றையெல்லாம் அருமையாக செய்துமுடித்தார்கள். ஒரு கேப்டனாக மிகுந்த திருப்தி அடைந்துள்ளேன்” என்றார்.

இந்த தொடரில் கோலியின் வழக்கமான 3-ம் இடத்தில் ராயுடு, ரெய்னா ஆகியோர் களமிறங்கினர். ஐந்து போட்டிகளிலும் கோலி 4-ம் வீரராகவே களம் இறங்கினார்.

இது தொடர்பாக கோலி கூறுகையில், ‘‘3-ம் வீரராக களம் இறங்கியே இந்திய அணிக்காக நான் அதிக போட்டிகளில் ஜெயித்துள்ளேன். அதிக சதங்கள் அடித்துள்ளேன். இரண்டு இடங்களும் எனக்கு வசதியாக இருக்கலாம். தெரியவில்லை. உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அல்லது அணியின் தேவை என்னவோ அதற்கேற்றவாறு ஆடுவேன். இந்தத் தொடரில் நான் 4-ம் இடத்தில் ஆடியது கடைசி போட்டியில் வெற்றி இலக்கை எட்ட உதவியாக இருந்தது.” என்றார்.

போட்டியின் கடைசி ஓவரில் மெண்டிஸ் பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் ஆடியது பற்றி கேட்டபோது, ‘‘அந்தப் பந்தில் அந்த ஷாட் தான் அடிக்கமுடியும். ஆனால் அதை ஹெலிகாப்டர் ஷாட் என்று சொல்லமாட்டேன்.” என்றார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் பலன்களில் ஒன்று, அக்‌ஷர் படேலின் முன்னேற்றம். 11 விக்கெட்டுகள் எடுத்து (எகானமி ரேட் – 4.61), அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்கிற பெருமையைப் பெற்றார். அதுபற்றி கோலி கூறும்போது, “படேல், இதுபோல திறமையை நிரூபித்தால் பேட்டிங் ஆர்டரில் மற்றவர்களை விடவும் அவருக்கு அதிக முன்னுரிமை தரப்படும். வருகிற போட்டியில் அது நடக்கலாம்.

வட்டத்துக்குள் ஏழு பேரை நிறுத்தினாலும் ஒன்றும் சொல்வதில்லை. ஃபீல்டிங்குக்கு ஏற்றாற்போல பவுலிங் செய்கிறார். இந்த இளம்வயதில் அவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார். பயப்படுவதேயில்லை. தயக்கம் இருக்கும்போதுதான் தவறுகள் நடக்கும். ஆனால் அதுபோன்ற தயக்கத்தை அக்‌ஷர் படேலிடம் நான் பார்க்கவில்லை. ராஞ்சியில் அவர் ஆடியவிதம் என்னை மிகவும் ஈர்த்துவிட்டது. எந்தச் சூழ்நிலையில் எப்படி பேட்டிங் செய்யவேண்டும், அனுபவம் மிகுந்த வீரரின் அறிவுரையைக் கேட்டு தேவைக்கேற்றாற்போல் எப்படி ஆடவேண்டும் என்பது அவருக்கு தெரிந்துள்ளது.

ராஞ்சி போட்டியில் ஆடியதை விடவும் கட்டாக்கில் ஆடியதுதான் பிரமிக்கவைத்தது (4 பந்துகளில் 10 ரன்கள்)” என்கிற கோலி, இந்தத் தொடரில் ராயுடு ஆடியவிதமும் தனக்கு மிகவும் மகிழ்ச்சி

யளிப்பதாக கூறினார். ‘‘ராயுடுவை கடினமான சமயங்களில் அனுப்பினாலும் நம்பிக்கையுடன் ஆடினார். புதியவர்களை இதுபோன்ற சூழ்நிலைகளில் அனுப்பும்போது அவர்கள் ஜெயித்துவிட்டால் தன் திறமை மீது அதிக நம்பிக்கை வைப்பார்கள். இது அவர்களுக்கும் இந்திய அணிக்கும் மிகுந்த நன்மை தரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x